சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகன் நடிகர்கள் பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தமிழ் பிரபா இணை கதாசிரியராக பணியாற்ற, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கே. செல்வா கவனிக்க, சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைக்கிறார்.
கோலார் தங்க வயலைக் கதைக்களப் பின்னணியாகக் கொண்டு, ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜாவும், நீலம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.
‘சீயான் 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, தீபாவளி விருந்தாக வெளியாகியிருப்பதால் உற்சாகமடைந்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.