ஹீரோ விதார்த் கனவில் காண்பது நிஜத்தில் நடக்கிறது. தனது தந்தை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவதுபோல் கனவு வருகிறது. அந்த விபத்தை தடுக்க விதார்த் முயல்கிறார். அதற்குள் தந்தை விபத்தில் சிக்கி விடுகிறார். ஆபத்தான நிலையில் தந்தையை மருத்துவமனையில் சேர்க்கிறார் விதார்த். தந்தையை விபத்து ஏற்படுத்தி கொல்ல முயன்றது யார் என்பதை மீண்டும் கனவில் காண முயற்சிக்கிறார். நீண்ட முயற்சிக்கு பிறகு அந்த கொலையாளி யார் என்பது தெரிகிறது. அடுத்து விதார்த் எடுத்த ஆக்ஷன் என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
விதார்த்துக்கு பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது கார்பன்.
சினிமா டைரக்டர் ஆவோம் என்பது முதல் முதலமைச்சர் ஆவோம் என்பது வரை நாம் வலுக்கட்டாயமாக காணும் கனவுகள் நிஜமாகும் போது, விதார்த் யதார்த்தமாக காணும் கனவுகள் அப்படியே நடப்பதில் ஆச்சிரியமில்லை தானே! புலனாய்வு செய்வதற்கும் கனவிலேயே க்ளு கிடைக்க அந்த பாட்டி சொன்ன மாதிரி நடந்தவைகளை ரீவைண்ட் செய்வது சுவராஸ்யம். கிடத்தட்ட டைம் லூப் போலத்தான், வந்தான், சுட்டான், ரிப்பீட்டு என்பது போல, வீட்டிலிருந்து புறப்படும் விதார்த், கம்பத்தில் மோதுகிறார், அப்பாவுக்கு நெற்றியில் இடுகிறார், கண் தெரியாத சிறுமிக்கு கரெக்ட்டாக 20 ₹ கொடுக்கிறார், இளநீர் காரனிடம் அடிவாங்குகிறார், ஷேர் ஆட்டோவில், பிரியாணி வாங்கி வாட்ச் மேனுக்கு கொடுக்கிறார் குறிப்பாக அதே சட்டை பேண்டுடன்.
அதற்குள்ளாகவே மொத்த திரைக்கதையையும் நகர, ஷேர் ஆட்டோவில் வரும் திடீர் காதல் மூலம் மொத்த முடிச்சும் அவிழ்கிறது.
வழக்கம் போல, மாரிமுத்து சிறப்பான நடிப்பு, இதில் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைய அவருக்கு. அவரைச்சுற்றி தான் கதை நகர்கிறது. மகனுடன் நேரடியாக பேச முயன்று, தாய் மீது மகன் செய்த சத்தியத்தால் முடியாமல் போகும் போது உடைந்துவிடுகிறார். இறுதியாக மகன் விதார்த், இவருடன் பேசினாரா இல்லையா என்று எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள்.
சிறுமி, ஜானு பிரகாஷ், இந்த வயதில் கண்தெரியாத வேடமேற்று சிறப்பாக நடித்திருக்கிறார்.
அட, தான்யா இவ்வளவு அழகான காதலியா..? வில்லியா..? படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள், சிறப்பாக நடித்திருக்கிறார்.
சாலைக்கு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் இருந்தாலும் இதயங்கள் இடம் மாறி விட்ட எளிய காதலர்களாய் பவுலின், விக்ரம் ஜெகதீஷ் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
பிச்சைக்காரன் மூர்த்தி முதல் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார்கள்.
விதார்த், 24 மணி நேரத்திற்குள் அல்லது ஒரு வாரத்திற்குள் நடக்கும் கதைகளில் இவர் நாயகனாக வரும் போது, அடந்த விறுவிறுப்பான திரைக்கதையை அலட்டிக்கொள்ளும் கதாபாத்திரங்களில் தனி முத்திரைகளை பதித்து விடுகிறார்.,இதிலும்.
விவேகானந்தன் சந்தோஷத்தின் ஒளிப்பதிவு, பிரவீன் கே எல்லின் எடிட்டிங் கச்சிதமாக இருக்கிறது. சாம் சி எஸ்ஸின் இசையில் அருண் பாரதி, தமிழணங்கு ஆகியோர் எழுதிய பாடல் வரிகள் இனிமை.
அசலுக்கும் நகலுக்கும் நடுவில் இருப்பது தான் கார்பன், ஒரு வகையில் கார்பன் டைட்டிலுக்கு விதார்த்தை கனவு காண தூண்டும் அந்த முன்களப்பணியாளராக வரும் மருத்துவ துப்புரவு பணியாளர் தான் டைட்டில் ரோல் செய்திருக்கிறாரோ!