20.8 C
New York
Wednesday, April 30, 2025

Buy now

spot_img

Audio & trailer release of the ‘Otha Votu Muthaiya’ starring Gaundamani


'காமெடி கிங்' கவுண்டமணி நடிக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன், ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ், டாக்டர் காயத்ரி, அனுமோகன், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ்,, ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சாய் தன்யா, டெம்பிள் சிட்டி குமார், தாரணி, சென்ராயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எஸ். பி. ராஜா சேதுபதி மேற்கொள்ள கலை இயக்கத்தை மகேஷ் நம்பி கவனித்திருக்கிறார். அரசியலும் காமெடியும் கலந்த இந்த திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும்  குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம். ஈ.  ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.  வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஒளிப்பதிவாளர் சா. காத்தவராயன், கலை இயக்குநர் மகேஷ் நம்பி,  நடிகர்கள் அனு மோகன், ரவி மரியா, மதுரை குமார்,  ஓ எ கே சுந்தர், வையாபுரி, சிசர் மனோகர், சி என் ரங்கநாதன், கஜேஷ், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், சினேகன்,  இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ஃபைவ் ஸ்டார் செந்தில், தயாரிப்பாளர்கள் எஸ். கதிரேசன், கே. ராஜன், இயக்குநர்கள் பி. வாசு, கே. பாக்யராஜ் இவர்களுடன் 'காமெடி கிங்' கவுண்டமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ''சந்தோஷமான தருணம் இது. கடந்த ஆண்டில் வெற்றி பெற்ற 'லப்பர்பந்து', 'டிமான்டி காலனி 2' ஆகிய படங்களில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு நகைச்சுவை உலகின் சூப்பர் ஸ்டார், காமெடி கிங் கவுண்டமணி நடிக்கும் 'ஒத்த ஒட்டு முத்தையா ' எனும் இந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதி இருக்கிறேன். இந்த வாய்ப்பிற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கும், இயக்குநர் ராஜகோபாலுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவரம் தெரியாத வயதிலேயே எனக்கு பிடித்த நபர் கவுண்டமணி. இந்த மேடையில் அவரும், பாக்கியராஜ் சாரும் ஒன்றாக இருப்பதை நான் பெருமிதமாக கருதுகிறேன். இந்தப் படம் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறும். இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.  படத்தின் இணை தயாரிப்பாளர் கோவை லட்சுமி ராஜன் பேசுகையில், ''இது என்னுடைய முதல் மேடை.‌ ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சூரிய உதயத்தில் கூட ஒரு நிமிடம் காலதாமதம் உண்டு. ஆனால் எங்கள் அண்ணன் கவுண்டமணி படபிடிப்பு தளத்திற்கு ஒரு நிமிடம் கூட தாமதமாக வர மாட்டார். சரியான தருணத்தில் வந்து விடுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.  நடிகை ஹீமா பிந்து பேசுகையில், ''என் வாழ்க்கையில் சந்தோஷமான நாள் இது. லெஜண்டரி ஆக்டர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இதற்கு கடவுளுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி,'' என்றார்.  நடிகர் ரவி மரியா பேசுகையில், ''ஆறு வருடங்களுக்கு முன் கவுண்டமணியுடன் இணைந்து நடிப்பது போல் கனவு கண்டேன். அந்தக் கனவு பலித்து விட்டது. படப்பிடிப்பு தளத்தில் அவர் எங்களுக்கு மரியாதை கொடுத்து பேசியது வியப்பை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் போது தவறு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக காட்சிக்கு முன்னர் ஒத்திகை பார்ப்பேன்.  அந்த ஒத்திகை தருணத்தில் கூட அவர் தனக்கான வசனங்களை எனக்காக பேசுவார்.  ஒரு கலைஞரின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறை அப்போது தெரிந்தது.   இந்த தருணத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அவர் இல்லை என்றால் கவுண்டமணி இல்லை. அவர் தான் கவுண்டமணியை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தினார். இயக்குநர் பி வாசுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இயக்கத்தில் அண்மையில் 'சந்திரமுகி 2 ' திரைப்படத்தில் நடித்தேன். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் எளிமையாக அனைவரிடத்திலும் பழகுவார்.  பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான 'சின்னத்தம்பி', 'நடிகன்', 'வால்டர் வெற்றிவேல்', 'மலபார் போலீஸ்' போன்ற படங்களில் கவுண்டமணியின் நடிப்பும், வசனமும் உயரத்தைத் தொட்டிருக்கும். கவுண்டமணியை அறிமுகப்படுத்தியவரும், கவுண்டமணியை உயரத்திற்கு அழைத்துச் சென்றவரும் ஒரே மேடையில் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  இயக்குநர் சாய் ராஜகோபால் நன்றாக திட்டமிட்டு, படத்தை திட்டமிட்ட நேரத்தில் நிறைவு செய்து கொடுத்திருக்கிறார். இந்த 'ஒத்த ஓட்டு முத்தையா' தமிழ்நாட்டில் உள்ள ஏழரை கோடி ஓட்டுகளையும் பெறும். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,'' என்றார்.  நடிகர் கஜேஷ் பேசுகையில், ''என்னுடைய தாத்தா நாகேஷ் உடனும் கவுண்டமணி சார் நடித்திருக்கிறார். என் அப்பா ஆனந்த் பாபுவுடனும் கவுண்டமணி சார் நடித்திருக்கிறார். கவுண்டமணியுடன் நானும் நடித்திருக்கிறேன். தொடர்ந்து மூன்று தலைமுறையாக அவருக்கும் எங்களுக்குமான நட்பும், உறவும் நீடிக்கிறது. படப்பிடிப்பு தளமும், படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களும் முழு மகிழ்ச்சியுடன் இருந்தது,'' என்றார்.  நடிகை அபர்ணா பேசுகையில், ''சின்ன வயதில் கவுண்டமணி சாரின் காமெடியை பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் அவருடன் இணைந்து நடிப்பேன் என்று ஒருபோதும் கனவு காணவில்லை.  அந்தக் கனவை நனவாக்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'ஒத்த ஒட்டு முத்தையா' படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்,'' என்றார்.  இசையப்பாளர் சித்தார்த் விபின் பேசுகையில், ''இயக்குநர் என்னிடம் பேசும்போது, ஹீரோ கவுண்டமணி' என்று சொன்னவுடன் வேறு எதையும் கேட்கவில்லை, நான் பணியாற்றுகிறேன் என்று சம்மதம் தெரிவித்தேன். சந்தானம், யோகி பாபு ஆகியோருடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, 'கவுண்டமணி தான் எங்களுடைய இன்ஸ்பிரேஷன்' என சொல்ல கேட்டு இருக்கிறேன். அதனால்  கவுண்டமணி தான் 'பஞ்ச் கிங்' என்று சொல்வேன்.  இந்தப் படத்தில் பாடல்களை பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், சினேகன் ஆகியோர் நன்றாக எழுதி இருக்கிறார்கள். பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன. படமும் சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு காமெடி திரைப்படத்தை இயக்குவது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். கதாசிரியராக மட்டுமில்லாமல் இந்தப் படத்தை சாய் ராஜகோபால் நன்றாக இயக்கியிருக்கிறார். பொதுவாக மக்களை சிரிக்க வைப்பது என்பது கடினமான காரியம். அதனை இயக்குநர் எளிதாக செய்திருக்கிறார். படம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த விழாவிற்கு வருகை இந்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.  பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், ''இந்த மேடை எனக்கு முக்கியமான பதிவு. சின்ன வயதில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது ஒட்டியிருக்கும் போஸ்டரில் 'கவுண்டமணி- செந்தில்' இடம் பிடித்திருப்பார்கள். உடனே என்னுடைய நண்பர்கள், 'இந்த படத்திற்கு செல்லலாமா?' என கேட்பார்கள். அந்தப் படத்தின் நாயகன் யார்,  நாயகி யார் என்பதெல்லாம் தெரியாது. கவுண்டமணி செந்தில் இவர்கள் இருக்கும் படத்திற்கு செல்லலாமா என கேட்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். இதன் காரணத்தினாலேயே நான் இந்த மேடையில் நிற்பதை பெருமிதமாக கருதுகிறேன்.  கவுண்டமணி ஐயாவை பற்றி பேச வேண்டும் என்றால் மணி கணக்கில் பேசலாம். சினிமாவில் கதாநாயகர்களை நம்பி படம் எடுத்தார்களோ இல்லையோ, கவுண்டமணியை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நிறைய பேர். இன்றும் அவர்கள் அவருக்காக காத்திருக்கிறார்கள்.  மிகப்பெரிய நிகழ்வை கூட ஒரு சிறிய புன்னகை மூலம் கடந்து செல்லலாம் என்பதை உணர்த்தியவர் அவர்.  அகில உலக சர்வாதிகாரியான ஹிட்லரை ஒரு நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் தான் ஒரு கேலியான சிரிப்பு மூலம் கடந்து போக வைத்தார். இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.  இயக்குநர் ராஜகோபால் பத்து ஆண்டுக்கு முன் என்னை நாயகனாக வைத்து படம் எடுப்பதற்காக என்னிடம் கதை சொல்ல வந்தார். அன்றிலிருந்து அவருடனான என்னுடைய நட்பு தொடர்கிறது. அந்தத் தருணத்தில் அவரிடம் கவுண்டமணி பேசிய பஞ்ச் டயலாக்கை மட்டுமே வைத்து பாடல் எழுதலாமா என கேட்டேன். அவர் பேசிய பஞ்ச் டயலாக்கை மட்டுமே வைத்து 50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதலாம் போலிருக்கிறது. அவ்வளவு பன்ச் டயலாக்கை அனாயசமாக பேசி இருக்கிறார்.  இந்தப் படத்தில் எது தேவையோ, அதை மட்டுமே வைத்து ஒரே ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். அந்தப் பாடல் அனைவராலும் ரசிக்கப்படும் என நம்புகிறேன். அத்துடன் கமர்ஷியலான பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன்.   திரையுலகில் அனைவருக்கும் மாற்று இருக்கிறது. ஆனால் கவுண்டமணிக்கு மட்டும் மாற்று இல்லை. ஒரே ஒரு கவுண்டமணி தான். ஒரே ஒரு ஜாம்பவான் தான். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. ஏனெனில் அவர் திட்டினால் மட்டும்தான் யாருக்கும் கோபம் வராது. அவர் அனைவருக்கும் பிடித்த கலைஞர். அவரைக் கொண்டாட வேண்டிய காலகட்டம் இது,'' என்றார்.  தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில், ''கவுண்டமணி நாடகத்தில் நடித்த போதே அவருடைய நடிப்பை ரசித்தவன் நான். சென்னையில் உள்ள பழைய கலைவாணர் அரங்கத்தில் அவருடைய நாடகங்கள் தொடர்ந்து நடைபெறும். அவருடைய உடல் மொழி, வசன உச்சரிப்பு அனைத்தும் சிறப்பாக இருக்கும்.  அதன் பிறகு அவரை நான் '16 வயதினிலே' படத்தில் பார்த்தேன்.  மக்களை மகிழ்விக்கின்ற புண்ணியமான காரியத்தை செய்கின்ற அவர் ஒரு அற்புதமான மாமனிதர்.   நானும், ஐசரி வேலனும் ஒரு முறை ஈரோடுக்கு அருகே உள்ள கருங்கல்பாளையம் என்ற ஊருக்கு சென்றோம். அங்கு கவுண்டமணியின் ரசிகர்கள் இரவு 11 மணி அளவில் மீனை பிடித்து வறுத்து உணவருந்த வழங்கினார்கள். அவரை நான் சில நாட்கள் தான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் அவை அனைத்தும் பொன்னான நாட்கள்.   கவுண்டமணி நடிக்க வந்த பிறகு தமிழ் திரையுலகம் பொற்காலமாக இருந்தது. தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் பொற்காலம்.‌ இயக்குநர் கே. பாக்கியராஜ், இயக்குநர் பி. வாசு ஆகியோரின் ஆளுமையில் திரையுலகம் இருந்தது. தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். கவுண்டமணிக்காக ஓடிய படங்கள் ஏராளம். அவரை நம்பிய எந்த தயாரிப்பாளரும் கெட்டுப் போனதில்லை. காலம் தவறாது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தயாரிப்பாளருக்காக கடுமையாக உழைத்தவர்.  இயக்குநர் சாய் ராஜகோபால் பல படங்களுக்கு நகைச்சுவை காட்சிகளை எழுதியிருக்கிறார். அவர் இன்று இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த 'ஒத்த ஓட்டு முத்தையா' ஒத்த ஓட்டை வாங்குகிறாரோ இல்லையோ ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளத்தை கவர்வார். அனைவரும் இந்த திரைப்படத்தை பார்ப்பார்கள். ஏனெனில் மக்கள் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள்.  தற்போது வெளியாகும் பல படங்கள் தோல்வி அடைகின்றன. சில படங்கள் வெற்றி பெறுகின்றன.  ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் கவுண்டமணி இருந்தார். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததால் தொலைக்காட்சியில் கவுண்டமணி நடித்த திரைப்படங்கள் தான் ஆறுதலாக இருந்தன. அவர் என்றென்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பார்,'' என்றார்.  இயக்குநர் சாய் ராஜகோபால் பேசுகையில், ''ஒத்த ஓட்டு முத்தையா படத்தை வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தத் திரைப்படத்தில் 35 நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக குறைவான ஊதியத்தை பெற்றுக் கொண்டு நடித்தார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌  இந்தப் படம் உருவான விதம் ஆச்சரியமானது. அதனை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நடிப்பில் தயாராகும் 'தேவர் ஹோட்டல்' என்ற படத்திற்கான கதை விவாதத்திற்காகத்தான் அவருடைய அலுவலகத்திற்கு சென்று ஒரு வருடமாக திரைக்கதையை தயார் செய்து கொண்டிருந்தோம். திடீரென்று எதிர்பாராத விதமாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அங்கு வருகை தந்தார்.   என் மனைவி உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன் எப்போதும் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்ற நிலை. அந்தத் தருணத்தில் என்னுடைய மகனின் நண்பரான கோவை லட்சுமி ராஜன் எனக்கு அறிமுகமானார். அவருக்கு பெங்களூருவில் உள்ள தயாரிப்பாளர் ரவி ராஜா நண்பர்.  கொரோனா காலகட்டத்தின் போது நான் வீட்டில் இருந்தே நகைச்சுவை காட்சிகளை எழுதி அதனை யூடியூபில் பதிவேற்றிக் கொண்டிருந்தேன்.  அந்தத் தருணத்திலும் அண்ணன் கவுண்டமணி என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசுவார். அந்த நேரத்தில் நேரத்தை வீணடிக்காமல் இரண்டு திரைக்கதைகளை எழுதி இருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அப்போது உடனே 'எங்கே ஒரு கதையை சொல்லு கேட்போம்' என்றார். போனிலேயே கதையை சொல்லத் தொடங்கினேன் 'மூணு பொண்ணு-  அப்பா அம்மா -  அந்த மூணு‌ பொண்ணுங்களையும் அண்ணன் -தம்பிக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுக்கணும். அப்படின்னு நினைக்கிறாங்க. ஆனா அந்த மூணு பொண்ணுங்களும் ஏதோ ஒரு சூழ்நிலைல வேற வேற பசங்கள லவ் பண்றாங்க. அவங்க கல்யாணம் பண்ணிட்டாங்களா, இல்லையா? அந்த அப்பா கேரக்டர் அந்த மூன்று பசங்களுக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சாரா, இல்லையா?' இதுதான் கதை என்றேன்.‌ கேட்டவுடன், 'நன்றாக இருக்கிறது. குடும்பங்கள் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. இதை நான் செய்தால் நன்றாக இருக்கும்' என்றார். உடனே நானும் 'உங்களுக்காகத்தான் எழுதினேன்' என்று ஒரு பொய்யை சொன்னேன். உடனே அவர், 'நான் இதுவரை அப்பாவாக நடித்ததில்லையே..!' என்றார். உடனே மூணு தங்கச்சி என்று மாற்றினேன். ஓகே சொன்னார். 'கொரோனா முடிந்தவுடன் நீயும் தயாரிப்பாளரை தேடு, நானும் தயாரிப்பாளரை தேடுகிறேன்' என்றார்.‌  கொரோனா முடிந்தவுடன் கோவை லட்சுமி ராஜனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் மூலமாக தயாரிப்பாளர் ரவி ராஜாவின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. அதன் பிறகு நாங்கள் மூன்று பேரும் கவுண்டமணியை சந்தித்தோம் .அதன் பிறகு அவர்களை சிங்கமுத்துவின் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கதையை சொன்னேன். அந்தத் தருணத்தில் என் மனைவியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது, மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. சினிமாவா? மனைவியா? என இக்கட்டான சூழலில் மனைவியை கடவுள் காப்பாற்றுவான். 30 ஆண்டு காலமாக சினிமா மீதிருந்த காதல் காரணமாக மருத்துவமனையில் அருகில் இருந்த ஒருவரிடம் இரண்டு மணி நேரம் என் மனைவியை பாதுகாப்பாக உடனிருந்து கவனித்துக் கொள்ளுங்கள், நான் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு, கலை இயக்குநர் மகேசுடன் சிங்கமுத்துவின் அலுவலகத்திற்கு வந்து தயாரிப்பாளரை சந்தித்து கதையை சொன்னேன்.   அதன் பிறகு மருத்துவமனையில் இருந்த என்னுடைய மனைவி ஒரு வார காலத்திற்குப் பிறகு மறைந்து விட்டார். இந்த தகவல் தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தது. சற்று தாமதமாக தொடங்கலாம் என திட்டமிட்டிருந்த அவர்கள், என்னுடைய மன மாற்றத்திற்காக உடனடியாக படத்தின் பணிகளை தொடங்கினார்கள்.  அப்படி தொடங்கியது தான் இந்த படத்தின் பணிகள்.‌ தற்போது இந்த படம் நன்றாக வந்திருக்கிறது.   திரையுலகில் கவுண்டமணிக்காக நான் எழுபது படங்களில் எழுதி இருக்கிறேன். மற்ற நடிகர்களுக்காக 40 படங்களில் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சினிமாவில் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். மனதை தளர விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். நிச்சயம் உங்கள் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிடைக்கும்.  எழுபது படங்களில் எழுதி இருந்தாலும் இந்தப் படத்தில் இயக்குநராக பணியாற்றுவதற்கான வாய்ப்பினை வழங்கிய கவுண்டமணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.   இந்தப் படத்தில் நான்கு பாடல்கள்-  ஒரு பாடலுக்கு ஒரு நாள் என நான்கு நாட்களில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்துவிட்டார் இசையமைப்பாளர் சித்தார்த். படத்தில் இரண்டு  பாடல்களை நான் எழுதி இருக்கிறேன்.  இந்தப் படத்தின் வெற்றி விழாவை மதுரையில் நடத்த விரும்புகிறோம். அந்த விழாவை கொண்டாடுவது ரசிகர்களின் கையில் தான் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,'' என்றார்.  இயக்குநர் பி.வாசு பேசுகையில், ''நானும், கவுண்டமணியும் இணைந்து பணியாற்றிய பல படங்களின் வெற்றி விழாவில் சந்தித்திருக்கிறோம். ஆனால் முதல்முறையாக அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' பட விழாவில்  நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் ராஜகோபாலுக்கும், தயாரிப்பாளர் ரவி ராஜாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  கவுண்டமணியின் காமெடி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அவரை நம்பி படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு என்னுடைய முதல் நன்றி.  கவுண்டமணியை பற்றி சொல்வதற்கு என்னிடம் நிறைய விஷயங்கள் உள்ளன. முதலில் அவருக்கு மேனேஜர் என்று யாரும் கிடையாது. அவரிடம் டிரைவரும் கிடையாது. அவரிடம் டைரியும் கிடையாது. அனைத்தையும் மனதில் குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வார். இதைப் போன்ற எளிமையான, தயாரிப்பாளர்களுக்கு சௌகரியமான நடிகர் தமிழ் திரையுலகில் வேறு யாரும் இல்லை. அந்த அளவிற்கு அவர் ஒரு பர்ஃபெக்ட்டான நடிகர்.  கவுண்டமணி அதிகம் நடித்தது என்னுடைய இயக்கத்தில் உருவான படங்களில் தான். இதுவரை 24 படத்தில் நானும் , அவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.‌ அந்த 24 படங்களில் 20 படங்கள் ஹிட்.   பின்னணி இசை அமைக்கும் போது இளையராஜா கவுண்டமணியின் வசனங்களை கேட்டும் நடிப்பை பார்த்தும் ரசிச்சு சிரிப்பார். அவர் கவுண்டமணியின் மிக தீவிரமான ரசிகர்.  நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை என்னிடம், 'கவுண்டமணி போன்ற நடிகர்கள் நம்மிடம் இருப்பது நாம் செய்த பாக்கியம்' என சொல்லியிருக்கிறார். தமிழ் திரையுலகில் உள்ள பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கவுண்டமணியின் ரசிகர்கள் தான். மொழி தெரியாத நபர்களையும் சிரிக்க வைக்க கூடியவர் கவுண்டமணி.  இந்தப் படத்தின் இசை நன்றாக இருந்தது. ஒளிப்பதிவும் அருமை. இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,'' என்றார்.  இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''படத்தின் இசை நன்றாக இருக்கிறது.  இதற்காக இசையமைப்பாளர் சித்தார்த்திற்கு நன்றி. கவுண்டமணி நடித்திருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். மணியைப் பற்றி நிறைய விஷயம் சொல்லலாம். இருந்தாலும் அவரைப் பற்றி மணியான ஒரு விஷயத்தை சொல்கிறேன். இதுவரை மூன்று யுகம் கடந்து விட்டதாக சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்தவரை இந்த யுகம் கவுண்டமணி யுகம். சினிமாவில் கவுண்டமணியின் யுகத்தை யாராலும் மறக்க முடியாது, மறுக்க முடியாது.   அவர் வாய்ப்புத் தேடும் காலகட்டங்களில் என் அறையில் உள்ள சோதிட புத்தகத்தை எடுத்து காண்பித்து வாசிக்க சொல்வார். அவரைப் பற்றி நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி ஊக்கமளிப்பேன். அதன் பிறகு எங்கள் இயக்குநரிடம் கடுமையாக போராடி இந்த படத்தில் மணி தான் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.  ஒரு நாள் இரவு 12:30 மணிக்குத்தான் எங்கள் இயக்குநர் இவருக்கு ஓகே சொன்னார்.  அதன் பிறகு எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஆலயம்மன் கோயில் வாசலில் கற்பூரம் ஏற்றி உங்களுக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது என்று சொன்னேன். இந்த நிகழ்வுகள் எல்லாம் இன்றும் என் நினைவில் பசுமையாய் இருக்கிறது.  சுதாகர் நடித்த 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் அவருடைய அறிமுக காட்சியில் வசனங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக யோசித்து, 'எல்லாருக்கும் நேரம் வரும் தெரிஞ்சுக்கோ.. அது நல்லவருக்கே நிலைச்சிருக்கும் புரிஞ்சுக்கோ.. கல்லாருக்கும் செல்வம் வரும் தெரிஞ்சுக்கோ.. அதை காப்பாற்ற தான் புத்தி இருக்கணும் தெரிஞ்சுக்கோ...' என எழுதினேன். அது அப்படியே கவுண்டமணிக்கு தான் கச்சிதமாக பொருந்தும். அவர்தான் நல்லவராகவும் இருந்திருக்கிறார். வல்லவராகவும் இருந்திருக்கிறார். கிடைத்த வாய்ப்பை இறுகப் பற்றி புத்திசாலித்தனமாக முன்னேறி இருக்கிறார்.  கவுண்டமணி படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் இன்று என்ன காட்சி, என்ன வசனம், என இதைத்தான் முதலில் பேசுவார். அதன் பிறகு காட்சிகளையும் வசனங்களையும் மேம்படுத்துவதற்காக சிந்தித்துக்கொண்டே இருப்பார்.  சினிமாவில் லயித்து இருப்பார்கள் என்று சொல்வார்களே, அது கவுண்டமணிக்கு தான் பொருந்தும். அவருடன் நான் அறையில் இருந்தேன் என்பது பெருமிதமாக இருக்கிறது. 'ஒத்த ஓட்டு முத்தையா' என்பது கவுண்டமணியின் பிராண்ட். இந்த படத்தை தொடர்ந்து அவரை வைத்து தொடர்ந்து படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் சினிமா மீது வைத்திருக்கும் மரியாதைக்கும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்," என்றார்.  'காமெடி கிங்' கவுண்டமணி பேசுகையில், ''அனைவரும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தை பற்றி நிறைய பேசி விட்டார்கள். பிறகு நான் என்ன பேசுவது? தயாரிப்பாளர் ரவி ராஜா இந்த திரைப்படத்தை சிறந்த முறையில் தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பாளர் கோவை லட்சுமி ராஜனும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.  இந்தப் படம் குடும்பத்துடன் காண வேண்டிய படம்.‌ படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்திலுக்கும் நன்றி.  இயக்குநர் பி. வாசுவிற்கும் நன்றி. என்னுடைய ரூம் மேட் பாக்யராஜுக்கும் நன்றி.‌ தயாரிப்பாளர் கே .ராஜன் என் நண்பர் தான். அவருக்கும் என் நன்றி.‌ இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்கள், வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த 'ஒத்த ஓட்டு முத்தையா'வை பாருங்கள். இந்த 'ஒத்த ஓட்டு முத்தையா'வை நன்றாக பாருங்கள். இந்த 'ஒத்த ஒட்டு முத்தையா'வை திரும்பத் திரும்ப பாருங்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். 'ஒத்த ஒட்டு முத்தையா'வை பாருங்கள். திரும்பத் திரும்ப சொல்கிறேன். 'ஒத்த ஓட்டு முத்தையா'வை பாருங்கள். திரும்பிப் பார்த்துவிட்டும் சொல்கிறேன். 'ஒத்த ஓட்டு முத்தையா'வை பாருங்கள்.  பார்க்க மறந்து விடாதீர்கள். இந்த 'ஒத்த ஒட்டு முத்தையா'வை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை. அது உங்களுடைய பொறுப்பும் கூட. இத்துடன் எனது பேச்சை நிறைவு செய்து கொள்கிறேன், வணக்கம், நன்றி," என்றார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE