நாயகனாக ஆதி, கோபக்கார மதுரைக்கார அன்பாகவும் , அனைவரையும் அன்பால் கட்டிப்போடும் அறிவாகவும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சுருட்டை முடி, ஸ்ட்ரைட்டனிங் முடி அவ்வளவு தான் வித்தியாசம் எனினும் அறிவு கதாபாத்திரத்தில் அவ்வப்போது ஸ்டைலாக ஆங்கிலம் பேசி இருவருக்குமான கதாபாத்திர வேறுபாட்டிற்கு நியாயம் கற்பித்திருக்கிறார். அறிவு எல்லோரையும் அன்பால் கட்டிப்பிடித்தாலும் கனடாவில் கூடவே சுத்திக்கிட்டு இருக்கிற ஷிவானியை கட்டிப்பிடிக்காமல் இருப்பது ஏன் என்பது அவருக்கு ஜோடி காஷ்மீரா என்பதை அறிந்த பிறகு புரியும்.
மதுரை அருகே உள்ள ஆண்டிபுரம் அரசபுரம் மக்களுக்கு நீண்ட நாள் பகை தொடர்கிறது,. ஆண்டிபுரம் பெரும்புள்ளி நெப்போலியன் மகளை மணந்து கொண்ட வீட்டு மாப்பிள்ளையாக இருக்கும் சாய்குமார் தனக்கு போதிய மரியாதை கிடைக்கவில்லை என்று எண்ணுவதுடன் தன்மானம்தான் பெரிது என்று கூறி நெப்போலியனுடன் சண்டையிட்டு தனக்கு பிறந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியேறிவிடுகிறார். இதனால் நெப்போலியன் அவரை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்குகிறார். மகள் ஆஷா மற்றும் பேரன் அன்பு (ஆதி) மீது பாசம் கொட்டி வாழ்க்கையை கழிக்கிறார். இந்நிலையில் நெப்போலியன் வீட்டில் வேலையாளாக இருந்த வித்தார்த், நெப்போலியன் குடும்பத்தில் பகையை அதிகரித்து தன் அரசியல் செல்வாக்கை வளர்க்கிறார். லண்டன் சென்று சாய்குமாருடன் வளரும் மற்றொரு ஆதி (அறிவு) தனது தாய் ஆண்டிபுரத்தில் இருப்பதை அறிந்து அவரையும் தாத்தா நெப்போலியனையும் பார்க்க இந்தியா வருகிறார். இதற்கிடையில் சாய்குமார் ஆட்கள் ஆண்டிபுரத்திலிருந்து ஆதியை (அன்பு) லண்டன் கடத்தி செல்கின்றனர். ஊர் திரும்பிய அறிவு தனது தாய் மீது பாசம் காட்டுகிறார். ஏற்கனவே தந்தை மீது கோபமாக இருக்கும் அன்பு அவர் மீது கோபத்தை காட்டி வெறுப்பேற்றுகிறார். ஒரு கட்டத்தில் ஆண்டிபுரத்தில் இருப்பது அன்பு இல்லை என்பதை அறிந்த நெப்போலியன் அவரை அடித்து விரட்டுகிறார். ஆனாலும் அவர் விடாப்பிடியாக ஊரில்தான் இருப்பேன் என்று சொல்லி அங்கேயே டேரா போட்டு நெப்போலியனையும், தாய் ஆஷாவையும் தனது குடும்பத்துடன் இணைக்க முயற்சிக்கிறார். இதன் முடிவு என்ன என்பதை குடும்ப சென்ட்டிமென்ட்டுடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.
அன்பு அறிவு என்ற இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அன்பாக நெப்போலியனுடன் வளரும் ஆதி துடுக்குத்தனமாக அடி தடி குத்து வெட்டு என்று இறங்கி நடித்திருக்கிறார். அதேசமயம் லண்டன் சென்று அறிவாக நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி ரொம்பவும் டீஸ்னட்டாக நடித்துள்ளார்.
ஊரில் எதற்கெடுத்தாலும் அடிதடி என்று களமிறங்கும் அன்பு கதாபாத்திரத்தில் வரும் ஹிப் ஹாப் ஆதி பி அண்ட் சி ஆடியன்ஸுக்கு வலை விரித்திருக்கிறார். அவரது துள்ளலான நடிப்பு உற்சாகம். சண்டை காட்சிகளில் பாய்ந்து பறந்து மோதி இருக்கிறார். அறிவாக மற்றொரு வேடத்தில் அடக்கம் ஒடுக்கமாக அம்மா பாசத்துக்கு ஏங்குபவராக நடித்து கவர்கிறார் ஆதி.
இரண்டு ஹீரோயின்களாக ஷிவானி, காஷ்மீரா நடித்திருக்கின்றனர். இருவரையும் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குனர்.
முனியாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நெப்போலியன் அந்த பாத்திரமாகவே மாறி இருக்கிறார். எதற்கெடுத்தாலும் கையை நீட்டி அடிதடிக்கு அடித்தளம்போட்டு ஆக்ஷன் காட்சிகளுக்கு விறுவிறுப்பு ஏற்றியிருக்கிறார். ஆஷா சரத் ஆதியின் தாயாகவும் நெப்போலியனின் மகளாகவும் நடித்து கவர்கிறார். வித்தார்த் வெள்ளை சட்டை வில்லனாக மாறி இருக்கிறார். சாய்குமார், ரேணுகா, நரேன் என பலரும் உரிய நடிப்பை அளித்துள்ளனர்.
