நாம் கைதட்டி ரசிக்கும் ஒவ்வொரு படத்திலும், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சண்டைக் காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடிப்பவர்கள் சண்டைக் கலைஞர்கள். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் அவர்கள் துணிச்சலாக நடித்து நம்மை கைதட்ட வைக்கிறார்கள்.
திரையில் ஹீரோவாகப் பார்க்கும் பலருக்கும் ‘டூப்’ போட்டு நடிப்பவர்கள் பலர். அப்படி டூப் போட்டு நடிப்பவர்கள் சண்டைக் கலைஞர்கள்தான். அவர்களுடைய வீர தீர செயல்களைப் பார்த்துத்தான் நம் மனம் கவர்ந்த ஹீரோக்கள் செய்கிறார்கள் என நாமும் சில சமயங்களில் கைதட்டிக் கொண்டிருக்கிறோம்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ஆல் துவக்கி வைக்கப்பட்ட ஸ்டன்ட் யூனியன் பொன்விழா ஆண்டை தொட்டிருக்கிறது. சுமார் 650 கலைஞர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
ஸ்டன்ட் யூனியனின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமான விழாவாக வரும் ஆகஸ்ட் மாதம், சென்னை நேரு உள் விளையாட்டரங்களில் நடைபெற உள்ளது.
இது குறித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டன்ட் யூனியன் தலைவர் அனல் அரசு தெரிவித்ததாவது,
“இன்று எங்களோடு இல்லா விட்டாலும் யூனியனின் வளர்ச்சிக்கு உழைத்து மறைந்து விட்ட ஸ்டன்ட் கலைஞர்கள் ஒவ்வொருவரின் நல்லாசியுடன் கம்பீரமாக நாங்கள் 50வது ஆண்டைக் கடந்திருக்கிறோம். இந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக பொன் விழாவை ஆகஸ்ட் 26 ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியாகக் கொண்டாட இருக்கிறோம்..
நாங்கள் இந்திய மொழிப் படங்கள் எல்லாவற்றிலும் இனைந்திருக்கிறோம். எங்கள் உழைப்பைப் பற்றியும் எங்கள் இழப்பைப் பற்றியும் எல்லா நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் எல்லா கலைஞர்களுக்கும் தெரியும். அதனால் எல்லோரையும் நேரிடையாக அழைக்க உள்ளோம்.
எங்களுடைய அழைப்புக்கு நிச்சயம் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறோம். விழாவில் மூத்த உறுப்பினர்களை கெளரவப் படுத்த உள்ளோம்.
சுமார் 6 மணி நேரம் நடை பெற உள்ள கலை நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் மற்றும் எங்கள் ஸ்டன்ட் கலைஞர்களின் ஸ்டன்ட் காட்சிகளும் நடை பெறும்.
கலா மாஸ்டரின் குழுவினரின் பங்களிப்போடு பிரமாண்டமான கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த ஷோ இயக்குனராக மானாட மயிலாட புகழ் கோகுல் நாத் இருக்கிறார்..
பொன்விழா குழு தலைவராக ஸ்டன்ட் மாஸ்டர் தியாகராஜன் சார் எங்களோடு இருப்பது எங்களுக்கு ரொம்பவும் பெருமை,” என ஸ்டன்ட் யூனியன் தலைவர் அனல் அரசு தெரிவித்தார்
அவருடன் செயலாளர் செல்வம் பொருளாளர் ஜான், இணை செயலாளர் ஆர்.நாராயணன், துணை செயலாளர் பரமசிவம் துணைத் தலைவர் ராக்கி ராஜேஷ், உபதலைவர் கே. பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.