ஒரு வரிக் கதைகளைக் கூட அழகான திரைக்கதையுடன் அனைவரையும் ரசிக்க வைக்கும் விதத்தில் ஒரு படமாகக் கொடுக்கலாம்.
பரபரப்பான சம்பவங்களும், விறுவிறுப்பான காட்சிகளும்தான் அப்படிப்பட்ட படங்களுக்குக் கை கொடுக்கும். அதில் சற்றே தவறினாலும் ஆபத்துதான்.
இயக்குனர் பிரசாந்த் ஜி சேகர் இந்த ‘யானும் தீயவன்’ படத்தை அருமையான தலைப்புடன் வித்தியாசமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், திரைக்கதையில் அதிக பரபரப்பு இல்லாதது படத்தின் சுவாரசியத்தைக் குறைத்துவிடுகிறது. அதற்கு இன்னும் உழைத்திருந்தால் ‘யானும் தீயவன்’ யாவராலும் ரசிக்கப்பட்டிருப்பான்.
அஷ்வின் ஜெரோம், வர்ஷா இருவரும் காதலர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு நாள் பீச்சிற்குச் சென்றிருக்கும் போது அங்கு தாதாவான ராஜு சுந்தரத்துடன் அஷ்வின் சண்டை போடும் சூழ்நிலை வருகிறது. ராஜு சுந்தரத்தை அடித்துத் துவைத்து விடுகிறார் அஷ்வின். தன்னை அடித்தது யார் என அடையாளம் தெரியாமல் அஷ்வினைத் தேட ஆரம்பிக்கிறார் ராஜு சுந்தரம். ஒரு சந்தர்ப்பத்தில் அஷ்வினைக் கண்டுபிடித்து அவர் மனைவி வர்ஷாவுடன் இருவரையும் பிடித்து தன்னுடன் கைதியாக வைத்துவிடுகிறார். அவரிடமிருந்து அஷ்வினும், வர்ஷாவும் தப்பினார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அஷ்வின் ஜெரோம் இந்தப் படம் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். நடிப்பதற்கு அதிக ஸ்கோப் உள்ள காட்சிகள் என அதிகமில்லை. இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்லக் கூடிய திறமை அவரிடம் தெரிகிறது.
வர்ஷாவிற்கு அஷ்வினைக் காதலிப்பது மட்டும்தான் படத்தில் அதிக வேலை. இவர்களைக் காட்டிலும் படத்தில் வில்லனான ராஜு சுந்தரம்தான் அதிகம் ஆக்கிரமித்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சந்தானபாரதி, விடிவி கணேஷ், மதுமிதா என படத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய நட்சத்திரங்களே இருக்கிறார்கள்.
இம்மாதிரியான படங்கள் டெக்னிக்கலாக இன்னும் சிறப்பாக இருந்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும். ‘துருவங்கள் 16’ போன்ற படங்களை அதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை.