‘டைம் டிராவல்’ படம் என்றாலே ரசிகர்கள் கொஞ்சம் உஷாராகத் தான் பார்க்கப் பழக வேண்டும்.
ஏதோ அலர்ட் வந்திருக்கிறதே என்றும் கையில் இருக்கும் மொபைலை கன நொடி நோண்ட ஆரம்பித்தாலும், தலை நிமிர்ந்து பார்க்கும் அடுத்த நொடிக் காட்சி குழப்பத்தை தந்து விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட குழப்பங்களில் இதில் கம்மி என்பதே மனசுக்கு நிம்மதி.
1985 இல் வெளியான ‘Back To The Future’ ல் ஆரம்பித்து 2015 இல் ரிலீசான ‘Hot Tub Time Machine 2′ உட்பட ஹாலிவுட்டில் எக்கச்சக்க டைம் டிராவல் படங்கள் ரிலீசாகியிருக்கின்றன.
இந்த வகையறா படங்கள் அங்குள்ள ரசிகர்களுக்கு ரகளையான ரசனை தான். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு இது புது அனுபவம்.
ஷாம் நடித்த ’12 பி’, விஷ்ணு விஷால் நடிப்பில் வந்த ‘இன்று நேற்று நாளை’ படங்களுக்குப் பிறகு தமிழில் அதைவிட அதிக பொருட்செலவில் வந்திருக்கும் இன்னொரு ‘டைம் ட்ராவல்’ படம் தான் இந்த 24.
முழுப்படமும் புரியாவிட்டாலும் ‘ஆஹா… ஓஹோ…’ என்று ஹாலிவுட் படங்களை கொண்டாடுகிறோம். அந்த ‘கொண்டாட்ட’ மனநிலை ரசிகர்களுக்கு தமிழில் ஒரு ஹாலிவுட் தரத்திலான படம் தான் இந்த 24 என்றால் அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
படத்தின் முழுமைக்கும் தெரிகிற பிரமாண்டம், சூர்யா – சமந்தா லவ் சீன்களையே ரொமான்ஸ் வித் காமெடியாகக் கொண்டு சென்றது என ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு புது ‘சயின்ஸ் பிக்ஷன்’ அனுபவம் காத்திருக்கிறது.
கதை 1990 கால கட்டத்தில் ஆரம்பிக்கிறது…
மூத்தவர் ஆத்ரேயா மற்றும் இளையவர் சேதுராமன் அவரது மகன் மணி என மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார் சூர்யா. இதில் ஆத்ரேயா தம்பி சேதுராமனை விட மூன்று நிமிடங்கள் முன்னால் பிறந்தவர்.
பிரபல விஞ்ஞானியான சேதுராமன் கண்டுபிடிக்கும் ‘Project 24′ என்ற கடிகாரம் சைஸ் டைம் மிஷினை அவரிடமிருந்து கைப்பற்ற துடிக்கிறார் ஆத்ரேயா.
இதற்கான முயற்சியில் தனது தம்பியையும் அவரது மனைவி நித்யாமேனனையும் கொலை செய்ய, அதில் அவர்களுடையே ஒரே ஆண் குழந்தை மட்டும் தப்பிக்கிறது.
அவர் தான் இன்னொரு சூர்யாவாக வரும் மணி.
தம்பி குடும்பத்தை கொன்ற கையோடு ஒரு விபத்தால் 26 ஆண்டுகள் கோமாவுக்கு சென்று அதிலிருந்து மீளும் ஆத்ரேயா மீண்டும் அந்த டைம் மிஷினை தேடி அலைகிறார்.
அந்த டைம் மிஷினோ சென்னையில் 26 வருடங்களுக்குப் பிறகு இளைஞனாக இருக்கும் சேதுராமனின் மகன் சூர்யாவின் வாட்ச் கடைக்கு வந்து சேர்கிறது.
வாட்சைத் தேடி தனது இழந்த வாழ்க்கையை வாழ ஆசைப்படும் ஆத்ரேயா அதை கண்டுபிடித்துக் கொடுத்தால் 5 கோடி ரூபாய் பரிசு என்று விளம்பரம் கொடுக்க, ஆரம்பிக்கிறது பெரியப்பாவுடனான இளைய சூர்யாவின் மோதல்.
டைம் மிஷின் யார் கைக்குப் போனது? என்பதே கிளைமாக்ஸ்.
ஆத்ரேயா, சேதுராமன், மணி என மூன்று விதமான கெட்டப்புகளிலும் எவ்வளவு தூரத்துக்கு வித்தியாசம் காட்ட முடியுமோ? அவ்வளவு தூரத்துக்கு விதவிதமான முகபாவங்களில் வித்தியாசம் காட்டி அசரக்கிறார் சூர்யா.
ஆத்ரேயாவாக கொலை வெறியோடு அலையும் போதும் சரி, அதே ஆத்ரேயா வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு சைலண்ட்டாக காய்களை நகர்த்துவதிலும் சரி செம வில்லத்தனம்!
விஞ்ஞானி சேதுராமன் கெட்டப்பில் ஒரு அப்பாவி போல தோற்றம் தருகிறார். அதே சமயத்தில் வாலிபன் மணியாக வரும் சூர்யா ரொமான்ஸ் காட்சிகளில் பிரமாத்தப்படுத்துகிறார்.
அழகுப்புயல் சமந்தாவை மெல்ல மெல்ல தனது காதலில் விழ வைக்க டைம் மிஷினை வைத்து அவர் செய்யும் விளையாட்டுகள் என படம் முழுக்க சூர்யாவின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது.
சமந்தா எவ்ளோ அழகு! காட்டுகிற போதெல்லாம் முடிந்தவரை குளோசப்பில் காட்டி ரசிகர்களை கட்டிப் போடுகிறார்கள்.
நித்யாமேனனுக்கு சின்ன கேரக்டர் தான். அதற்கே அவர் நிஜத்தில் அழுதிருக்க வேண்டும். படத்தில் வருகிற குறைந்த காட்சிகளிலும் அதைத்தான் செய்கிறார்.
இளைய சூர்யா மணியின் வளர்ப்புத் தாயாக வரும் சரண்யா பொன்வண்ணன் அந்த கேரக்டருக்கு நல்ல பொருத்தம். அதிலும் தனது ப்ளாஷ்பேக்கை சூர்யா கேட்கும் போது ”யார் என்ன சொன்னாலும் நீ தாண்டா என்னோட மகன். 26 வருஷமா நான் உன்னை நெஞ்சில சுமந்திருக்கேண்டா” என்று சொல்லுகிற காட்சி கனம்.
கிரிஷ் கர்நாட், சத்யன், சார்லி, அப்புகுட்டி, சத்யன் என வரும் மற்ற கேரக்டர்களில் சத்யன் கேரக்டர் மட்டுமே காமெடியில் சிரிக்கவும், கொஞ்ச நேரமாவது திரையிலும் வந்து போகிறார்.
படத்தின் பிரம்மாண்டத்துக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடு கொடுக்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை. ‘நான் உந்தன் அருகினிலே’ டூயட் பாடல் கேட்ட மாத்திரத்திலேயே ஹம் பண்ண வைத்து விடுகிறது. இருந்தாலும் பாடல்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம் ரஹ்மான் சார்…
ஒவ்வொரு சூர்யாவுக்கும் கேமராவில் காட்டப்படும் வித்தியாசம் மேம்போக்காக இல்லாமல் மிகவும் பிரமாதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இரண்டு பக்கமும் மரங்கள் சூழ நடுவில் செல்லும் ரயிலை மேலிருந்து காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஹாலிவுட் தரத்தை தனது கேமராவுக்குள் கொண்டு வந்து விடுகிறார்.
கிரிக்கெட் ட்ரிக், பைக் பன்சர், வில்லனை சூட் செய்ய, தோட்டாவை ப்ரீஸ் செய்வது, மழைத் துளிகளை ப்ரீஸ் செய்து அதை விரலால் சூர்யா தட்டி விடும் அழகு என தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு கை தட்டி பாராட்ட வேண்டிய உழைப்பு.
”நான் ஒரு வாட்ச் மெக்கானிக்.., எங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்…” என அதிகம் யோசிக்கப்படாத ரீபிட் வசனங்களை வைத்தே சூர்யா – சமந்தா ரொமான்ஸ் காட்சிகளை ஒப்பேத்தியிருக்கிறார் இயக்குநர் விக்ரம் குமார்.
‘யாவரும் நலம்’ என்ற ஷார்ப்பான படத்தை தந்த இயக்குநரின் படமா இது? என்கிற கேள்வி எழாமல் இருக்காது. அதில் இருந்த நேர்த்தியும், விறுவிறுப்பும் கத்தரி போடாமல் நீளும் காட்சிகளால் இந்தப் படத்தில் அதன் தேவையை உணர்த்துகிறது.
ப்ரேமுக்கு ப்ரேம் பிதுங்கி வழிகிறது பிரம்மாண்டம். ஹாலிவுட் படங்களை ஆஹா… ஓஹோ… என்று புகழும் மனநிலை கொண்ட ரசிகர்களுக்கு தமிழிலும் ஒரு ஹாலிவுட் லெவல் ‘சம்மர் ட்ரீட்’ தான் இந்த 24!