தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகத்திலும் சாதனை நாயகனாக இருப்பவர் ரஜினிகாந்த். அவருடைய தீவிர ரசிகர்களைப் பற்றிய படம்தான் இந்த ‘12 12 1950’. ஒரு நடிகரின் ரசிகர்களைப் பற்றிய கதை என்பது தமிழ் சினிமாவிற்கும் புதியது.
நடிகர் ரஜினிகாந்தைத் தலைவனாக நேசிக்கும் குங்பூ மாஸ்டரான செல்வா, ரஜினியைப் பற்றி ஒருவன் தவறாகப் பேச அவனை அடிக்கப் போய் எதிர்பாராமல் கொலைப் பழியை ஏற்று சிறைக்குச் செல்கிறார். அவரை ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள ‘கபாலி’ படத்தைப் பார்ப்பதற்காக செல்வாவின் மாணவர்கள் பரோலில் அழைத்து வருகிறார்கள். ரஜினியைச் சந்திக்க வைக்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் பெரிய திருப்புமுனையான திரைக்கதை என்றெல்லாம் ஒன்றுமில்லை. அப்படியே சம்பவங்களாக மட்டுமே நகர்கிறது. செல்வா பல வருடங்களுக்கு முன்பு இயக்கிய ‘கோல்மால்’ படத்தை முழு நகைச்சுவைப் படமாகத் தந்திருந்தார். இந்தப் படத்தில் நகைச்சுவையும் குறைவுதான்.
கபாலி செல்வா என தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ள செல்வா, படம் முழுவதுமே ‘கபாலி’ ரஜினி கெட்-அப்பிலேயே வருகிறார். தாடி, மீசை, கண்ணை மறைக்க கூலிங் கிளாஸ், அதற்குள் அவருடைய நடிப்பைத் தேட வேண்டியிருக்கிறது. செல்வாவின் மாணவர்களாக வரும் ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாந்த் கிருபாகரன் நிறைவாக நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையா கமல்ஹாசனின் பல பட கெட்-அப்புகளில் வருகிறார். அவருடன் யோகி பாபுவும் வரும் காட்சிகள் கொஞ்சம் சாதாரண காமெடிதான் என்றாலும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். படத்தில் நாயகியே கிடையாது. பிளாஷ்பேக்கில் செல்வாவின் மனைவியாக ஒரே ஒரு காட்சியில் அஷ்வினி.
இசை ஆதித்யா, சூர்யா இசையில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. ரஜினிகாந்தின் ரசிகர்கள் படம் என்பதால் ரஜினியின் புகழைச் சொல்லும் பிரச்சாரப் பாடல் ஒன்றையாவது படத்தில் சேர்த்து ஹிட்டாக்கியிருக்கலாம்.
படத்திற்கு தம்பி ராமையா, யோகி பாபுவின் காமெடி. ரஜினி ரசிகர்களைப் பற்றிய படம் என்பதால் அவருடைய ரசிகர்களுக்குப் பிடிக்கலாம்.
படத்திற்கு –அழுத்தமில்லாத கதை, திருப்புமுனை இல்லாத, எந்த விறுவிறுப்பும் இல்லாத திரைக்கதை.