6.8 C
New York
Tuesday, April 23, 2024

Buy now

வில் அம்பு – விமர்சனம்

நம்ம வாழ்க்கை நம்மை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை, நம்மை சுற்றியிருப்பவர்களாலும் சார்ந்திருக்கிறது என்கிற கருத்தை மிக மிக யதார்த்தமாகவும், டிவிஸ்ட் மேல் ட்விஸ்ட்களுடனும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் படம் தான் இந்த ‘வில் அம்பு’.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நன்றாகப் படிக்கும் ஹீரோ ஹரீஸ் கல்யாண்!

போட்டோகிராபியில் ஆர்வமான இவர் அப்பா பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவர். இவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் சிருஷ்டி டாங்கே, ஹரீஸ் இருக்கும் வீட்டின் அருகில் உள்ள சேரிப்பகுதியைச் சேர்ந்த சாந்தினியும் ஒருதலையாக காதலிக்கிறார்.

இன்னொரு ஹீரோ ஸ்ரீ! அதே சேரிப்பகுதியைச் சேர்ந்த குடிகார அப்பனின் மகன்.அந்த ஏரியாவில் திருடனும் கூட! இவருடைய தைரியத்தையும், துணிச்சலையும் பார்த்து காதலில் விழுகிறாள் பள்ளி மாணவியான இன்னொரு நாயகி சம்ஸ்கிருதி.

திருடனான ஸ்ரீயோ காதலிக்க ஆரம்பித்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக நல்லவனாக மாற முயற்சிக்கிறான்.

நல்லவனான ஹரீஸோ தன்னைச் சுற்றியிருப்பவர்கள் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளால் சந்தர்ப்ப சூழலால் கெட்டவனாகி ஜெயில் வரை போகிறார்!

இந்த ஐந்து பேர்களுக்கும் இடையே இருக்கிற தொடர்பும், அதனால் நடக்கக்கூடிய சம்பவங்களும், தீர்வுகளும் தான் கிளைமாக்ஸ்.

படத்தில் ஸ்ரீ – ஹரீஸ் கல்யாண் என இரண்டு ஹீரோக்கள்.

இருந்தாலும் சீனுக்கு சீன் பக்கா சேரிவாசியாக பொருத்தமாக பட்டையைக் கிளப்பியிருப்பவர் ஸ்ரீ தான். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அச்சு அசப்பில் சேரிப்பகுதியைச் சேர்ந்த இளைஞராக வாழ்ந்திருக்கிறார். அவரைப்போன்ற கேரக்டரை இன்றைக்கும் அருகிலுள்ள சேரிப்பகுதிக்குப் போனால் பார்க்கலாம்.

அப்பா பேச்சைத் தட்டாத ஹீரோவாக வரும் ஹரீஸ் கல்யாண் தனக்குப் பிடித்த படிப்பை படிக்க முடியவில்லையே? என்கிற ஏக்கம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் தன்னைச் சுற்றியுள்ளவர்களால் அவர் படும் இன்னல்கள் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனின் வாழ்க்கையிலும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று ஹரீஸ் தன்னைத் தானே கேட்டுக்கொள்கிற கேள்வியை தங்களுக்குள் ஒருதடவையேனும் கேட்டுப் பார்த்திருப்பார்கள்.

அவருக்கு ஜோடியாக வரும் சிருஷ்டி டாங்கே நல்ல கெமிஸ்ட்ரியாக ஒர்க்- அவுட். ஆனாலும் ஹரீஸை ஒருதலையாய் காதலிக்கும் சேரிப்பெண்ணான சாந்தினி தான் ரசிகர்களின் மனதை மொத்தமாக குத்தகைக்கு எடுக்கிறார். மற்ற நேரங்களில் தர லோக்கலில் பேசும் சாந்தினி ஹரீஸ் தனது வீடு இருக்கும் தெருபக்கம் வருவதைப் பார்த்ததும் வேகமாக வீட்டுக்குள் சென்று மேக்கப் போட்டுக்கொண்டு வீட்டில் வாசலில் நிற்பதெல்லாம் ஊர்பக்கம் நாம் பார்த்த பல வெள்ளந்தி பெண்களின் அழகான உண்மையான காதல் தான்!

நகைத்திருடனாக வரும் ஹரீஸ் உத்தமன், அரசியல்வாதியாக வரும் நந்தகுமார் என படத்தில் வருகிற பெரும்பாலான கேரக்டர்கள் நிஜ வாழ்க்கையில் நாம் பார்த்த கேரக்டர்களை படத்தில் உலாவிட்டிருக்கிறார் இயக்குநர். இன்னொரு அரசியல்வாதிக்கு கொஞ்சம் நேர்மை இருக்கிறது. அதைத்தானே மக்களும் எதிர்பார்க்கிறார்கள்!

கஞ்சா கடத்தல், நகை திருட்டு என சீரியஸாகப் போகும் கதையில் ஸ்ரீயின் நண்பனாக வரும் ‘யோகி’ பாபு காமெடியில் கலக்கியிருக்கிறார். பஞ்ச் மேல பஞ்ச் பேசி அவர் வருகிற காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கிறார்கள்.

படத்தின் நீளம், பள்ளிக்கூட பெண்ணின் வயசு மீறிய காதல் ஆகிய விஷயங்களை தவிர்த்திருக்கலாம்.

கஷ்டப்படுற நேரத்துல கூட இருக்கிறவன் தாண்டா உண்மையான நண்பன் போன்ற வாழ்க்கையின் யதார்த்தம் பேசும் வசனங்கள் படத்துக்கு பெரும்பலம்!

ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத ஐந்து கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு சூழ்நிலை எப்படி அவர்களை ஒன்றுக் கொண்டு தொடர்புள்ளவர்களாக்குகிறது? அதனால் வருகிற நல்லது என்ன? தீமைகள் என்ன? என்பதை இம்மியளவு சொதப்பல் கூட இல்லாமல் நகர்கிறது திரைக்கதை.

மார்ட்டின் ஜோயின் ஒளிப்பதிவும், நவீனின் பின்னணி இசையின் திரைக்கதையின் விறுவிறுப்புக்கு கூடுதல் கேரண்டி.

ஆள சாச்சுப்புட்டா கண்ணால பாடல் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் மெலோடி!

நாம் அன்றாட வாழ்க்கையில் நம்மை கடந்து போகிறவர்களால் நமக்கு எந்த ரூபத்திலாவது ஏதாவது நடக்கலாம்? என்பதை சீனுக்கு சீனுக்கு ட்விட்ஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து விறுவிறுப்பான படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE