மீண்டும் ராணுவ வீரன் பின்னணியில் ஒரு படம் என்கிற லெகுலர் டச்சோடு இந்தப்படம் முடிந்து போவதில்லை. அதையும் தாண்டி நாயகன் – நாயகிக்குமான காதல், நாயகி – அவளது அண்ணனுக்குமான பாசம் என படம் முழுவதிலும் யதார்த்தம் வழிந்தோடுகிறது.
இப்படத்தின் இயக்குநர் கதிரவன் பிரபுதேவாவின் உதவியாளராம். ஆனால் அதற்கான ‘மிதமிஞ்சிய’ எந்த கமர்ஷியல் அடையாளங்களும் படத்தில் இல்லை. அதுதான் நம் மனதை வெகுவாக ஈர்க்கிறது. திரைக்கதையின் வெற்றியும் அதுவே.
தென் மாவட்டமான சங்கரன் கோவில் அருகில் உள்ள ஆராய்ச்சிப்பட்டி என்ற கிராமம் தான் படத்தின் கதைக்களம். இந்த ஊரில் இருப்பவர்களுக்கு பரம்பரை தொழிலே திருடுவது தான். அப்படிப்பட்ட கிராமத்தில் திருட்டு தொழிலில் ஈடுபடாமல் தனக்குப் பிடித்தமான ராணுவத்தில் வேலை செய்கிறார் ஹீரோ கண்ணன்.
ஒரு கோடை விடுமுறையில் தனது கிராமத்துக்கு வர, வந்த இடத்தில் அதே ஊரில் இருக்கும் இன்ஸ்பெக்டர் மு.களஞ்சியத்தின் தங்கையான நாயகி பிரியங்காவிடம் மனசை பறிகொடுக்கிறான்.
இருவருடைய காதலும் இவருக்கு தெரிய வர, உடனே கையில் அரிவாளோடு ஹீரோவை வெட்டச் செல்வார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அதுதான் இல்லை.
தங்கையின் விருப்பப்படியே நாயகனை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.
ஆனால் விதி ஹீரோவின் நண்பன் ரூபத்தில் விளையாடுகிறது. ஒரு திருட்டு தொடர்பாக கண்ணனின் நண்பனை போலீஸ் ஸ்டேஷனில் மு.களஞ்சியம் ‘விசாரிக்க’ அதில் அவன் இறந்து போகிறான்.
இதனால் கோபமடையும் கண்ணன் மு. களஞ்சியத்துடன் மோத, அதனால் ஏற்படும் பிரச்சனைகளால் நாயகனும், நாயகனும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை நெகிழ்வுடன் தந்திருக்கிறார் இயக்குநர் கதிரவன்.
படத்தின் ஆரம்பக் காட்சியின் எளிமையே படத்தை தொடர்ந்து பார்க்கும் ஆவலை தூண்டி விடுகிறது. நாயகனாக வரும் அறிமுக நாயகன் கண்ணன் ஒரு புதுமுகம் போல இல்லாமல் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எந்த ஒப்பனையும் இல்லாமல் எந்த பில்டப்பும் இல்லாமல் அவருடைய அறிமுகம் திரையில் ஆரம்பிக்கிறது.
பிரியங்கா மீது காதல் கொண்டு அவள் நினைவாகவே இருக்கும் போதும் சரி, உயிருக்குயிரான நண்பன் இறந்து போனதும் துடித்து சினம் கொள்ளும் போதும் சரி நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார்.
நாயகி பிரியங்கா இது போன்ற தங்கை கேரக்டருக்கென்றே நேர்ந்து விட்டவர் போல… ‘கங்காரு’ படத்தில் ஒரு முரட்டு அண்ணனுக்கு தங்கையாக நடித்தவர் இதில் அதிலிருந்து விலகி பாசம் மட்டுமே காட்டுகிற, எதிலும் நேர்மை பார்க்கக்கூடிய அண்ணனுக்கு தங்கையாக வருகிறார். பாவாடை, தாவணியில் ஒரு கிராமத்து தேவைதையாக வருகிறார்.
பிரியங்காவின் அண்ணனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் வரும் இயக்குநர் மு.களஞ்சியம் தன் தங்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். தங்கை திருமண வயதை அடைந்த பிறகும் கூட அவளை ஒரு குழந்தையாக நினைப்பதும், அவள் கண்ணனை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் யதார்த்தம் புரிந்து அவளுக்கு திருமணம் செய்து வைக்க நினைப்பதும் ஒரு தங்கை மீதான உண்மையான பாசத்தின் வெளிப்பாடு.
இமான் அண்ணாச்சியின் காமெடி காட்சிகள் எல்லாமே புதுமையுடன் யோசிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலும் தமிழ் வார்த்தையை தப்பு தப்பாக பேசி அவரை மண்டை காய வைப்பவரும், கையை நீட்டி நீட்டி பேசி ஒருவர் கலாய்ப்பதும், ‘சும்மா சும்மா’ என்ற வார்த்தையால் அவர் சக மனிதர்களிடம் படும் பாடும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.
நொட்டாங்கை, மூச்சு புடிச்சிக்கிச்சு, கள்ளிச்செடி, பம்புசெட்டு, பலவட்ற என தென் தமிழகத்தில் இன்றைக்கும் பரவலாக பழக்கத்தில் இருக்கக்கூடிய வார்த்தைகளை சரியான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
”ஒருத்தன் கெட்டவனா இருக்கும் போது அவன் கூட இருக்கிறது தப்பு. அவனே நல்லவனா திருந்தி வாழுறப்போ அவன் கூட பேசாம இருக்கிறது அதை விட பெரிய தப்பு” போன்ற வசனங்கள் படத்துக்கு பலம்.
சாம்பசிவத்தின் இசையில் வைரமுத்துவின் வரிகள் தென் மாவட்ட சொற்களில் வார்த்தை ஜாலமிடுகிறது. பின்னணி இசை ரம்யம்.
ஒளிப்பதிவு உட்பட படம் முழுவதுமான காட்சிகளில் யதார்த்தம் பெருக்கெடுத்து ஓடுவதற்கான அத்தனை சின்னச் சின்ன விஷயங்களிலும் இயக்குநரின் மெனக்கிடல் தெரிகிறது.
நாயகன் – நாயகி காதல் அந்த காதலுக்கு குறுக்கே நிற்கும் நாயகியின் அண்ணன் என்கிற தமிழ் சினிமாவின் ரெகுலர் ஃபார்முலா படமாக இல்லாமல் நிஜத்தில் நடந்த சம்பவங்களோடு கற்பனையையும் புகுத்தி ஒரு யதார்த்தமான படமாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கதிரவன்.