8.7 C
New York
Friday, March 29, 2024

Buy now

காதலும் கடந்து போகும் – விமர்சனம்

புதுவிதமான ரசனையை ரசிகர்களுக்கு தர வேண்டும் என்கிற வேட்கை தமிழ்சினிமாவில் குறிப்பிட்டு சில இயக்குநர்களுக்கு மட்டுமே இருக்கும். அந்த இயக்குநர்கள் வரிசையில் நலன் குமாரசாமிக்கும் ஒரு இடம் உண்டு.

‘சூது கவ்வும்’ படத்தில் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தவர் தனது இரண்டாவது படத்தில் கொரியன் பட அனுபவத்தை தர முயற்சித்திருக்கிறார்.

அதற்காக யாருக்கும் தெரியாமல் கதையை திருடவில்லை. மாறாக My Dear Desperado என்ற கொரியன் படத்தின் ரீமேக் உரிமையையே முறையாக வாங்கி தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல கதையில் சில மாற்றங்களையும் சேர்த்து கொடுத்திருக்கிறார்.

ஒரு வீணாய்ப்போன அரசியல்வாதியின் அடியாள் எப்படியிருப்பான்?

அப்படிப்பட்டவரை நம்பி ஜெயிலுக்கு போய் வரும் விஜய் சேதுபதி வெளிவந்த நாள் முதல் தன்னை ஒரு பெரிய ரவுடியாக நினைத்துக் கொள்கிறார். நினைப்பு தான் அப்படியே தவிர, எங்கு போனாலும் அடி வாங்கி விட்டு வருகிற அளவுக்கு ஒரு தர்த்தி!

விழுப்புரத்தில் வசிக்கும் ‘பிரேமம்’ புகழ் நாயகி மடோனா செபாஸ்டியன் ஐ.டி துறையில் வேலை செய்வதற்காக சென்னைக்கு தனியாக வருகிறார். முதல் பாடலிலேயே அவருக்கு வேலை கிடைத்து அதை கொண்டாட்டமாக மாற, அந்தப் பாடல் முடியவும் கம்பெனியை இழுத்து மூடி விடுகிறார்கள்.

எங்கே வீட்டுக்குப் போனால் விழுப்புரத்திலேயே தனது வாழ்க்கை முடிந்து விடுமோ என்று யோசிக்கும் மடோனா கையில் இருக்கும் காசின் இருப்பு தீரும் வரை அடுத்தடுத்த கம்பெனிகளில் வேலை தேடுகிறார்.

அதோடு ப்ளாட்டில் நண்பர்களோடு இருந்தவர், வேலை போய் விட்டதால் தனியாளாக ஒரு லோக்கலான ஏரியாவில் ஐயாயிரம் ரூபாய் வாடகையில் வீடு எடுத்து தங்குகிறார்.

அந்த வீட்டின் எதிர் வீடு தான் ஹீரோ விஜய் சேதுபதியின் வீடு. முதலில் அறிமுகம், அப்புறம் நட்பு எனப் பயணிக்கிற கதை அவர்களுக்குள் காதல் இருக்கிறதா? இல்லையா? என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே நன்றி வணக்கம் போடுகிறார்கள்.

கதை கொரியன் படத்தின் ரீமேக் என்பதால் அதைப்பற்றி பெரிதாகப் பேசத்தேவையில்லை. ஆனால் நலன் குமாரசாமியின் திரைக்கதையில் இருக்கும் அழகியலை மனம் விட்டுப் பாராட்டலாம்.

எப்போதுமே மனசுக்குள் உற்சாகத்தை தொலைக்க விடாமல் அப்படி ஒரு ப்ரெஸ்னெஸ் தெரிகிறது ஒவ்வொரு காட்சியிலும்! விஜய் சேதுபதிக்கும், மடோனாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராகவே ஒர்க்-அவுட் ஆகியிருப்பதை திரையில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

படத்துக்கு படம் ‘கெத்து’ காட்ட ஆசைப்படும் ஹீரோக்களுக்கு மத்தியில் ‘வெத்து வேட்டு’ கேரக்டராக இருந்தாலும் அதில் செழுமையான நடிப்பை வெளிப்படுத்தி சென்டம் அடிக்கிறார் விஜய் சேதுபதி.

கிட்டத்தட்ட ‘நானும் ரவுடி தான்’ படத்தில் தன்னை ரவுடியாக நினைத்துக் கொள்வாரே அப்படிப்பட்ட கேரக்டர் தான் இதிலும். தன்னைத் தானே பெரிய அடியாளாக நினைத்துக் கொள்பவர் ஒரு பாருக்குள் சென்று நான்கு பேரிடம் சண்டைப்போட்டு விட்டு செமத்தியாக அடி வாங்கிவிட்டு கூலிங்கிளாஸை மாட்டிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வருவதெல்லாம் காமெடி காக்டெயில்!

‘பிரேமம்’ மடோனாவுக்கு தமிழில் இது அறிமுகப்படம். பெரிய அழகியில்லை என்றாலும் அவர் முகத்தில் எப்போதுமே ஒட்டிக்கொண்டிருக்கும் க்யூட்னஸ் கேரக்டரை இன்னும் அழகாக்கியிருக்கிறது. விஜய் சேதுபதியுடன் நடிப்பில் போட்டு போடுவது திரையில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு மொக்கையான கல்லூரியில் படித்து விட்டு வேலை கிடைக்க அவர் படும்பாடு இப்போதுள்ள கல்லூரிகளின் லட்சணத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

கதை விஜய் சேதுபதி – மடோனா இருவரை சுற்றியே நகர்வதால் இயல்பாக நடிக்கும் சமுத்திரக்கனி உட்பட மற்ற கேரக்டர்களுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை.

படத்தில் க்ளாஸான அம்சம் பின்னணி இசையும், பாடல்களும் தான்! ஹாலிவுட் படங்களில் மட்டுமே கேட்டு மனசை லேசாக்கும் பின்னணி இசையை படம் முழுமைக்கும் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

அதே போல தினேஷ்குமாரின் ஒளிப்பதிவில் படத்தில் இளமை பொங்கி வழிகிறது. குறிப்பாக மழை பெய்யும் காட்சிகளில் நம் மனசுக்குள்ளும் குளிர் அடிக்கிறது.

”தமிழ்நாட்ல யாரு தான் இஞ்சினியரிங் இல்ல? இஞ்சினியரிங் படிச்சி முடிச்ச நாங்களே வேலைக்கு சிங்கி அடிச்சிக்கிட்டு இருக்கும். இதுல வேற இன்னும் 20 இஞ்சினியரிங் காலேஜுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க, அறிவிருக்கா இவங்களுக்கு?” என்று அரசாங்கத்தை நேரடியாகவே போட்டுத் தாக்கும் வசனங்களும் அருமை.

சின்ன சின்ன விஷயங்களை கூட சுவாரஷ்யமாக நகர்த்தும் இயக்குநர் அதற்காக எடுத்துக் கொள்ளும் நேரத்தில் தான் நம் பொறுமையை ரொம்பவும் சோதிக்கிறார்.

”நான் கஷ்டப்படுறப்போ என் கூடவே இருந்த ஒருத்தரை நான் அதுக்கப்புறம் சந்திக்கவே இல்லை” என்று நாயகி மடோனா சொல்லி முடிக்கவும் அங்க போட்டிருக்கலாம் வணக்கம் கார்டை!

ஆனால் விஜய் சேதுபதியும், மடோனாவும் மீண்டும் பெட்ரோல் பங்க்கில் சந்திப்பதாக வைக்கப்பட்டிருக்கும் காட்சி தான் வலிய திணிக்கப்பட்ட காட்சி.

அப்போதும் கூட இருவருக்குள்ளும் காதல் இருக்கிறதா? இல்லையா? என்கிற குழப்பத்துடனே டைட்டிலுக்கான அர்த்தமும் தெரியாமலேயே தியேட்டரை கடந்து போகிறார்கள் ரசிகர்கள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE