ரசிகர்களை உற்சாகப்படுத்தி, அவர்களை மகிழ்விப்பதே ஒரு நடிகரின் சிறப்பு. அந்த வகையில் தனது பணியை சீரும், சிறப்புமாக செய்து வருகிறார் நடிகர் சூரி. மக்களை மகிழ்விக்கும் கலைஞனான சூரியின் பிறந்த நாள் விழாவானது , உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணியில் உருவாகி வரும் பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு களத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
"எங்களின் படப்பிடிப்பில் நடிகர் சூரியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடியதில் எங்கள் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நாங்கள் அவரின் நகைச்சுவை நயத்துக்கு தருகின்ற மரியாதையாக கருதுகிறோம். சூரியின் டைமிங் மற்றும் கௌண்டர் காமெடிகளால் நான் அவருடைய மிக பெரிய ரசிகனாகிவிட்டேன். ஒவ்வொரு படத்திலும் தனித்துவம் காண்பித்து வரும் சூரிக்கு, இந்த படமும், இனி வரும் படங்களும் அவரின் வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக அமையும் என உறுதியாக நம்புகிறோம்..." என்று உற்சாகத்துடன் கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
"ஒருவரின் பிறந்தநாளை தன்னுடைய பிறந்தநாள் போல் கொண்டாடுவதற்கு உண்மையாகவே மிக பெரிய உள்ளம் வேண்டும். என் மீது இவ்வளவு அன்பு வைத்து, எனக்காக இந்த பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்த உதய் சாருக்கும், இயக்குனர் எழில் சாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த நாளை என்னுடைய வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. ஒரு நடிகராக ரசிகர்களை மென்மேலும் மகிழ்வித்து, உற்சாகபடுத்த வேண்டும் என்பதை இந்த தருணத்தில் நான் அதிகமாக உணர்கிறேன்..."என்று உணர்ச்சிகரமாக கூறினார் நடிகர் சூரி.