இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரனிின் சர்வதேசத் தமிழ் ஆல்பமான “குயின் கோப்ரா” வுக்கு இந்த ஆண்டின் (2016) மதிப்புமிக்க “ஸ்பெஷல் ஜூரி எடிசன் விருது” கிட்டியிருக்கிறது.
இலங்கை மண்ணின் இசை மணம் கமழும் இனிய குடும்பம் அது. அப்பா திரு எம்.பி. பரமேஷ் ஈழத்து மெல்லிசை மன்னர். இலங்கையில் முதல் இசைத்தட்டினை வெளியிட்ட தமிழர். அம்மா சங்கீத பூஷணம் திருமதி மாலினி பரமேஷ். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசையில் பட்டம் பெற்றவர். இந்த இசைத்தம்பதியின் அருமைப் புதல்வியருள் ஒருவரே பிரபாலினி பிரபாகரன். தாய் வழியிலும், தந்தை வழியிலும் இசையுடன் தொடர்புடைய பாரம்பரியத்தைக் கொண்ட பிரபாலினி தனது நான்கு வயதிலேயே மேடையேறிப் பாடியவர்.
தன்னுடைய தந்தையாரிடம் இசையை முறைப்படி பயிலத் தொடங்கிய பிரபாலினி இன்று இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் எனும் சிறப்புப் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இவரது கணவர் திரு பிரபாகரன். அடிப்படையில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளரான பிரபாகரன் ஒரு தேர்ந்த கணிதவியல் அறிஞர். நல்ல கித்தார் மற்றும் தபேலா கலைஞர். சிறந்த ஒலிப் பொறியாளரும் ஆவார். தற்போது தன் கணவர் பிரபாகரனுடன் அமெரிக்காவில் வசிக்கும் பிரபாலினி 1979 – 1984 காலகட்டத்தில் இலங்கை முழுவதும் 200க்கும் மேற்ப்பட்ட மேடைகளில் தன்னுடைய இசை நிகழ்ச்சியினை வழங்கியிருக்கிறார்.
1986 ல் குடும்பத்துடன் ஜெர்மனி நாட்டிற்குப் புலம்பெயர்ந்த பிரபாலினி 1987 முதல் 93 வரை பல்வேறு இசைக்குழுக்களுடன் இணைந்து ஜெர்மன், நெதர்லாண்ட்ஸ், டென்மார்க் மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய இடங்களில் 45 க்கும் மேற்பட்ட மேடைகளைத் தன் இசைத் திறத்தால் அலங்கரித்தவர். ஜெர்மனியின் பிரபல “யங் ஸ்டார்ஸ்” இசைக்குழுவில் ஒரு முன்னணிப் பெண் பாடகராக இணைந்து 1993 – 95 காலத்தில் 50க்கும் அதிகமான மேடைகளைக் கண்டவர். பிரபாலினி எழுதி, மெட்டமைத்துப் பாடிய “நாங்கள் இளைய கலைஞர்கள்” பாடலுக்கு தமிழ் அருவி போட்டியில் சிறந்த பாடலாசிரியர் விருது பிரபாலினிக்குக் கிட்டியது. இப்பாடல் யங் ஸ்டார்ஸ் குழுவில் மேடையேறியது.
1995ல் பிரபாலினியின் முதல் ஆல்பமான “சங்கீத சாம்ராஜ்யம்” வெளிவந்தது. இதில் அவரது தந்தையார் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் மற்றும் தாயார் மாலினி பரமேஷ் பங்கேற்றிருந்தனர். ப்ரபாலினியின் சகோதரி பிரியந்தினி இதில் தனது முதல் பாடலைப் பாடினார். இந்த சங்கீத சாம்ராஜ்ஜியம் ஆல்பம் தான் பிரபாலினிக்கு இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் என்கிற சிறப்பைப் பெற்றுத்தந்தது.
ஜெர்மனியின் சன் ஷைன், டை ராக்கேர்ஸ், பெர்லின் டூர் போன்ற பல்வேறு இசைக் குழுக்களில் முக்கியப் பாடகியாக1996 – 99 காலகட்டத்தில் 150க்கும் அதிகமான மேடைகளில் முழங்கினார் பிரபாலினி.
கலைக்காவலர் ஸ்ரீபதி 1996ல் பிராங்க்பர்ட் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக பிரபாலினிக்கு வழங்கிய சிறப்பானதொரு விருதுதான் ஈழத்து மெல்லிசைக் குயில். 1999ல் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு இணைந்து தனது சொந்த இசைக் குழுவான ரிதம்ஸ் ஐத் துவங்கினார் பிரபாலினி. நூற்றுக்கணக்கான மேடைகள்… பல்லாயிரம் ரசிகர்கள் என இந்த ஈழத்து மெல்லிசைக் குயில் தொட்ட சிகரங்கள் சொல்லியடங்கா.
இதுவரையில் பிரபல இசைக் கலைஞர்கள் தீபன் சக்கரவர்த்தி, கங்கை அமரன், மாலதி, அப்துல் ஹமீது இவர்களோடும்; இவரின் தந்தையார் எம்.பி. பரமேஷ், தாயார் மாலினி பரமேஷ் ஆகியோருடனும் தனது மேடையை இவர் பகிர்ந்துகொண்ட விதம் அபாரமானது.
இலங்கை, இந்தியா, ஜெர்மனி, ஸ்விஸ், நெதர்லாண்ட்ஸ், லக்சம்பர்க், இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம், நார்வே, கனடா மற்றும் அமெரிக்கா என்று உலகம் முழுதும் பறந்து பறந்து இசைக்கோலமிட்டு வருபவர் பிரபாலினி.
தமிழின் இசைத்துறையில் ஒரு பெண் இசை ஆளுமை எனும் வகையில் இன்றைய நம்பிக்கைத் தாரகையாக ஜொலிக்கும் பிரபாலினி பிரபாகரன் உருவாக்கியுள்ள புதிய இசைத் தொகுப்பு “குயின் கோப்ரா”. கலிபோர்னியாவின் ரிதம் ரெக்கார்ட்ஸும், இந்தியாவின் ப்ரேவோ மியூசிக்கும் இணைந்து பெருமையுடன் வழங்கியுள்ள சர்வதேச ஆல்பம் இது.
தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஹாலிவுட் தரத்தில் தயாராகியுள்ள இந்தத் தொகுப்பு சென்னையில் கடந்த ஆகஸ்ட்டில் இசை அறிஞர்கள், திரைக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் திரளாகப் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிடப்பட்டது. உலக இசை அறிஞர்கள் பலரும் பாராட்டிய இந்த குயின் கோப்ராவுக்கு – உலகெங்குமுள்ள தமிழ் இசை ரசிகர்களின் மனங்கவர்ந்த இந்த குயின் கோப்ராவுக்கு இப்போது இன்னொரு மகுடம் ஏறியிருக்கிறது. ஆம், பிரபாலினியின் “குயின் கோப்ரா” வுக்கு இந்த ஆண்டின் (2016) மதிப்புமிக்க “ஸ்பெஷல் ஜூரி எடிசன் விருது” கிட்டியிருக்கிறது. முதல்முறையாக சினிமாவுக்கு வெளியே ஒரு ஆல்பம் இவ்விருதினைத் தட்டிச்சென்றிருப்பது பிரபாலினிக்கு மட்டுமல்ல, நமக்கும் பெருமைதானே?
மனதார, வாயார வாழ்த்துகிறேன் தோழி பிரபாலினி!
இன்னும் பற்பல சிகரங்களைத் தொடுங்கள்.. அற்புத இசையாலும், உங்களினிய குரலாலும்!