டஜன் கணக்கில் தெரிந்த முகங்களை வைத்துக் கொண்டு எடுக்கின்ற படங்களே சில நேரங்களில் ரசிகர்களை தலைமுடியை பிய்த்துக் கொண்டு தியேட்டரை விட்டு ஓட வைக்கும்.
ஆனால் வெறும் இரண்டே இரண்டு கேரக்டர்களை மட்டும் முழுப்படத்திலும் உலவ விட்டு ஒரு சுவாரஷ்யமான த்ரில்லர் படமாக தர முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ராமநாதன்.
படத்தில் வருகிற இரண்டு கதாபாத்திரங்களில் ஒருவர் இயக்குநர் ராமநாதன். இன்னொருவர் நாயகி சவுரா சையத்.
முன்னாள் நாயகியின் மகளான செளரா சையத் ஒரு படத்தில் நடிப்பதற்காக செல்கிறார். காட்டுப் பகுதியில் நடக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் அவருக்கு நடிப்பே வரவில்லை என்று சொல்லவும் கோபத்தில் காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். வருகிற வழியில் கார் மக்கர் செய்ய, அந்த வழியே வரும் ராமநாதன் செளரா சையத்துக்கு காரில் லிப்ட் கொடுத்து தனது காட்டுப் பங்களாவுக்கு கூட்டிச் செல்கிறார்.
”இன்னைக்கு நைட் நீ இங்க தங்கிக்க உன்னோட கார் ரெடியான உடனே நீ கெளம்பலாம்” என்று சொல்லும் அவர் தான் ஒரு இயக்குநர் என்றும், உன் அம்மாவை ஒருதலையாக காதலித்தவன் என்றும் சொல்கிறார்.
முதலில் அமைதியாகவும், அன்பாகவும் பழகும் அவர் நேரம் செல்லச் செல்ல, அவளுக்கு பிரம்படி கொடுப்பது, கைகளில் விலங்கிட்டு ரூமுக்குள் அடைத்துப் போடுவதுமாக என முரட்டுத் தனமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் செளராவுக்கு எப்படியாவது அவரிடமிந்து தப்பித்தால் போதும் என்கிற நிலை!
அவரின் அந்த பரிதாப நிலைக்கு விடுதலை கிடைத்ததா? ராமநாதன் ஏன் அவளிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டார்? என்பதை ரசிகர்கள் எதிர்பார்க்காத கிளைமாக்ஸோடு முடித்திருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் செளரா சையத்துக்கு இது முதல் படமா? காட்சிக்கு காட்சி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அவர் முகத்துக்கு நேராக வைக்கப்படும் க்ளோசப் காட்சிகளில் கூட பதட்டத்தைக் காட்டாமல் நடித்திருப்பது தமிழ்சினிமாவுக்கு நல்வரவு.
கிட்டத்தட்ட செளரா சையத்துக்கு ஒரு அப்பா இருந்தால் என்ன வயது இருக்குமோ அந்த வயது கேரக்டரில் வருகிறார் இயக்குநர் ராமநாதன். ( நிஜத்திலும் அவருக்கு அவ்ளோ வயசு தான் இருக்கும் போல(?))
ஒரு இளம்பெண் சரக்கடித்து விட்டு கொடுக்கும் அத்தனை குடைச்சல்களையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கிற காட்சிகளாகட்டும், அவரே அதே பெண்ணை பிரம்பால் அடிக்கும் போது காட்டும் கொடூரமாகட்டும் இரண்டிலும் ஒரு நடிகராக ஜெயித்திருக்கிறார் ராமநாதன்.
முழுப்படத்தையும் ஒரே ஒரு வீட்டுக்குள்ளேயே நகர வைக்கும் இயக்குநரின் முயற்சிக்கு விதவிதமான ஆங்கிள்களை வைத்து போரடிக்காத வண்ணம் பெரிதும் கை கொடுத்திருக்கிறது ராஜேஷ் கடம்கோடேவின் ஒளிப்பதிவு.
படத்தில் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்கிற ஒரே ஒரு பாடல் தான். என்றாலும் பின்னணி இசையில் ஒரு த்ரில்லர் படத்தாக திடுக்கிடலை திரையில் காட்டுகிறார் இசையமைப்பாளர் விவேக் நாராயண். இருந்தாலும் பல காட்சிகளில் வசனங்களே கேட்க முடியாதபடி அதிக சத்தத்தில் பின்னணி இசையை ஓடவிட்டதை தவிர்த்திருக்கலாம்.
இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு படத்தை எவ்வளவு தூரத்துக்கு சுவாரஷ்யமாக தர முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு மெனக்கிட்டிருக்கிறார் இயக்குநர் ராமநாதன். ஆனால் ‘வித்தையடி நானுனக்கு’ என்று அழகான தமிழ்ப்பெயரை படத்துக்கு வைத்துவிட்டு பெரும்பாலான காட்சிகளிலும் அவரும் நாயகியும் ஆங்கிலத்திலேயே தத்து பித்தென்று பேசிக்கொள்வதை மன்னிக்கவே முடியாது டைரக்டர் சார்…!!!
என்னாது படம் முழுக்க ரெண்டே ரெண்டு கேரக்டர்கள் தானா? என்று அதிசயிக்கும் ரசிகர்கள் அசராமல் ரசிக்கலாம்.
வித்தையடி நானுனக்கு – வரவேற்க வேண்டிய முயற்சி!