தெருவில் என்ன நடந்தாலும் கண்டும் காணாமல் விலகிச் செல்லும் மெட்ரோ சிட்டி மக்களிடம் ‘செயின் பறிப்பு’ என்கிற அட்ராசிட்டி வேலையைச் துணிச்சலும் செய்யும் ஒரு இளைஞன், அவனைச் சார்ந்த கூட்டாளிகளின் கதையும் தான் இந்த ”மெட்ரோ.”
பத்திரிகை ஒன்றில் வேலை பார்க்கும் ஹீரோ சிரிஷுக்கு அம்மா – அப்பா ஒரே ஒரு தம்பி என அளவான நடுத்தர வர்க்கத்தின் குடும்பம்.
அவருடைய தம்பி சத்யா தனது காதலி கேட்கும் காஸ்ட்லி செல்போனுக்காகவும், காஸ்ட்லி பைக்குக்காகவும் கூடவே படிக்கும் இன்னொரு இளைஞனுடன் சேர்ந்து செயின் பறிப்பு வேலையில் இறங்குகிறான்.
முதல் பறிப்பு வெற்றிகரமான முடிய கையில் ஒரு லட்சம் கிடைக்கவும் சத்யாவின் மனது சதா எந்த நேரமும் செயில் பறிப்பிலேயே ஈடுபட ஆரம்பிக்க ஒரு நாள் அந்தப் பாசக்கார அம்மாவுக்கும் இளைய மகனின் கோர முகம் தெரிய வருகிறது. பதறித் துடிக்கும் அந்த அன்பான அம்மாவையே கொலை செய்யத் தூண்டி விடுகிறது. கையில் புரளும் பணம்.
அம்மாவை கொன்றது யார்? என்று தனது நண்பன் செண்ட்ராயனுடன் சேர்ந்து நூல் பிடித்தாற் போல் தேடிப்போகும் மூத்த மகன் சிரிஷ் அதன் பின்னணியில் சொந்தத் தம்பியே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்.
சொந்தத் தம்பியாக இருந்தாலும் தவறு தவறு தானே? பாசத்தை கக்கத்தில் வைத்து விட்டு தம்பிக்கான தண்டனையை கொடுத்தானா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
சென்னை மாதிரியான மெட்ரோ சிட்டிகளில் ”ஹெல்மெட் கட்டாயம்” என்கிற சட்டம் பொது மக்களின் உயிரை காப்பாற்ற பயன்பட்டாலும், செயின் திருடர்களுக்கு கொண்டாட்டம் தான் என்பதை இந்தப்படம் காட்சிக்கு காட்சி பிரதிபலிக்கிறது. சத்யாவும் அவனது கூட்டாளிகளும் செயின் பறிப்பு வேலையை ஹெல்மெட்டை மட்டும் மாட்டிக்கொண்டு ஈஸியாக செய்து முடிக்கிறார்கள். ( இனி ஒரே பைக்கில் வரும் இரண்டு பேர் ஹெல்மெட் போட்டு வந்தால் உஷாராக இருக்க வேண்டும் போல!)
ஹீரோவாக புதுமுகம் சிரிஷ். ஒரு சீரியஸான கதைக்கு இந்த பிஞ்சு மூஞ்சியை எப்படி இயக்குநர் டிக் செய்தார் என்று தெரியவில்லை. ரொமான்ஸ் காட்சியில் நாயகியுடன் நெருங்கவே கூச்சப்படுகிறார். ஆக்டிங்கை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணனும் ப்ரோ.
அதை விடக்கொடுமை அவரது நண்பராக வரும் செண்ட்ராயன், அவரே ஒரு செயின் பறிப்பு திருடன் போல் தான் இருக்கிறார். அவரின் துணையோடு அம்மாவை கொலை செய்தவனை கண்டுபிடிக்க கிளம்புவது காமெடி தானே? சில இடங்களில் செண்ட்ராயனின் டயலாக்குகளை ரசிக்கலாம்.
ஹீரோ சிரிஷை விட அவரது தம்பியாக வரும் சத்யா தான் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆக்ரமிக்கிறார். ஆரம்பத்தில் அமைதியாக கூச்ச சுபாவத்தோடு வரும் இவர் நேரம் செல்லச் செல்ல தனது கொடூர முகத்தை காட்டுவது கை தட்டல்களை அள்ளுகிறது.
ஏதோ நாயகி கேரக்டரை படத்தில் வைக்க வேண்டுமே என்கிற கட்டாயம் டைரக்டர் ஏற்பட்டதோ என்னவோ? நாயகியாக வரும் மாயா எதற்காக வருகிறார் என்றே தெரியவில்லை. ”நல்லா நடிச்சிருக்கேம்மா…” என்று பாராட்டிச் சொல்ல ஒரு காட்சி கூட அந்த அழகுப் பொண்ணுக்கு படத்தில் இல்லை.
செயின் பறிக்கும் இளைஞர்களை வழி நடத்தும் வில்லனாக வருகிறார் பாபிசிம்ஹா. சதா எந்த நேரமும் ஒரே ஒரு அறைக்குள் தான் இருக்கிறார். ஆனால் எல்லா செயின் பறிப்பு வேலைகளுக்கும் இவர் தான் டைம் டேபிள், கூகுள் மேப் எல்லாம் போட்டுக் கொடுக்கிறார். ( எப்படி பாஸ்?)
சென்னை சிட்டியை அதன் இயல்பு மாறாமல் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் உதயகுமார். இனி தெருவில் நடந்தாலே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிற உணர்வை அவருடைய ஒளிப்பதிவும், ஜோகனின் பின்னணி இசையும் உண்டாக்கி விடுகிறது.
தன் காதலிக்காகத்தான் செயின் பறிப்பு வேலையில் இறங்குகிறான் சத்யா. அவளையே ஒரு கட்டத்தில் வெறுத்து ஒதுக்கிற அளவுக்கு குவியும் பணம் அவனது குணத்தை மாற்றுகிறது என்றால் இந்தப் படத்தை பார்க்கும் இளைஞர்களின் மனநிலையும் எதை நோக்கிப் போகும் என்பதை இயக்குநர் கவனிக்க மறந்திருக்கிறார்.
இருந்தாலும் சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளில் சர்வ சாதாரணமான நடக்கும் செயின் பறிப்பு சம்பவங்களில் இருந்து மக்களை உஷார் படுத்த முயற்சித்திருக்கிறார். அந்த எண்ணத்துக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு!
மெட்ரோ – உஷார்!