அழகான இஸ்லாம் பெண்ணை தான் காதலித்து திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் இந்து மதத்தைச் சேர்ந்த ஹீரோ வால்டர் பிலிப்ஸ், தனது இஸ்லாம் நண்பனின் திருமண நிகழ்ச்சியில் நாயகி இஷா தல்வாரை சந்திக்கிறார்
இஸ்லாமிய பெண்ணான இஷா தல்வாரை கண்டதும் காதல் கொள்ளும் வால்டர் பிலிப்ஸ், அவரிடம் நெருங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ஒரு வழியாக இஷாவுடன் நட்பு பாராட்டவும் தொடங்கிவிடுகிறார்.
பிறகு அவரிடம் தனது காதலை சொல்ல, ஆச்சாரமான இஸ்லாம் குடும்பத்தைச் சேர்ந்த இஷா தல்வார் தனது முடிவை சொல்லாமல் மவுனம் காக்க, அவரது மவுனத்தை கலைப்பதற்காக அவரது வீட்டுக்கு செல்லும் வால்டர் பிலிப்ஸை, இஷாவின் குடும்பத்தார் போலீஸில் பிடித்துக்கொடுத்து விடுகிறார்கள். காதல் விவகாரம் என்று அறியாமல் வால்டர் பிலிப்ஸிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வர, காவல் நிலைய கம்பிகளில் இருந்து விடுதலை அடையும் அவர் தனது காதலில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பதுதான் க்ளைமாக்ஸ்.
அறிமுக நாயகனான வால்டர் பிலிப்ஸ், காதல் காட்சிகளில் தனது துள்ளல் நடிப்பால் ரசிக்க வைக்கிறார். இஷா தல்வாருக்கு வசனம் குறைவு என்றாலும், தனது கண்களின் அழகாலே பல வசனங்கள் பேசிவிடுகிறார். காமெடி ஏரியாவில் அர்ஜுனன் பளிச்சிட்டாலும், அவருடன் வரும் சில கதாபாத்திரங்கள் ரம்பமாக இருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் மெலொடி பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், மனதில் பதியவில்லை. விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். நாயகியை பார்த்துக்கொண்டே இருக்கலாம், என்று தோன்றும் அளவுக்கு அம்புட்டு அழகாக காண்பித்திருக்கிறார் மனுஷன்.
’தட்டத்தின் மறையத்து’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான இப்படத்தில், இயக்குநர் மித்ரன் ஜவஹர், காதல் துடிப்பையும், இளசுகளின் துள்ளலையும் வழிய வழிய காட்டியிருந்தாலும், திரைக்கதையை, பஞ்சரான சைக்கிளை ஓட்டுவது போல நகர்த்தியிருக்கிறார்.
மலையாள ரசிகர்களை கவர்ந்த இப்படம், ‘பம்பாய்’ படத்தின் தாக்கத்தில் இருந்தே இன்னும் வெளிவராத தமிழக ரசிகர்களுக்கு ‘மீண்டும் ஒரு காதல் கதை’ யாக அல்லாமல், பழைய காதல் கதையாகவே தெரிகிறது.