16.2 C
New York
Friday, October 11, 2024

Buy now

spot_img

மிருதன் – விமர்சனம்

2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவிக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்தது. தொடர்ந்து மூன்று ஹாட்ரிக் ஹிட்டுகளை கொடுத்தவர் என்பதால் மிருதன் படத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. அதானாலேயே சுமார் 1000 தியேட்டர்களில் மிருதன் ரிலீசாகியிருக்கிறது.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தோடு ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்கிற பொறுப்பு ஜெயம்ரவியின் ஒவ்வொரு படத்திலும் பார்க்க முடிகிறது. அதிலும் தனி ஒருவன் படத்தின் அசூர வெற்றி ஜெயம் ரவி மீதான எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது.

அந்த வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக வந்திருக்கும் ‘ஸோம்பி’ வகை ஜானரான ‘மிருதன்’ படத்தை டிக் செய்திருக்கிறார்.

ஊட்டியில் வசிக்கும் ஜெயம்ரவி ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள். இவருக்கு தனது அன்புத் தங்கை பேபி அனிகா மட்டுமே உலகம். அவள் நல் வாழ்வுக்காக எந்த பிரச்சனைக்கும் போய் விடக்கூடாது என்பதால் ரிஸ்க்கே இல்லாத ட்ராபிக் கான்ஸ்டபிள் வேலையை கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

லட்சுமிமேனன் அதே ஊட்டியில் வேலை செய்யும் ஒரு டாக்டர்.

அந்த ஊரில் இருக்கும் ஒரு பேக்டரியில் தவறி விழும் ஒரு திடக்கழிவை தெருநாய் ஒன்று சாப்பிட்டு விட, அதிலிருக்கும் வைரஸ் தெருநாயிடம் தொற்றிக் கொள்கிறது. வெறி பிடித்த அந்த நாய் அதே பேக்டரியில் வாட்ச்மேனாக வேலை செய்பவரை கடிக்க, அவருக்கும் வெறி பிடித்து அவர் தனது மனைவி, அம்மாவை கடிக்க, அப்படியே ஊட்டி முழுக்க தீயாகப் பரவுகிறார்கள் ஸோம்பி மனிதர்கள்.

வேகமாகப் பரவும் அந்த வைரஸை கொல்வதற்காக புதிய மருந்து ஒன்றை கண்டுபிடிக்க லட்சுமிமேனன் உள்ளிட்ட டாக்டர்கள் குழு ஊட்டியை விட்டு வெளியேறி கோயம்புத்தூரில் உள்ள மருத்துவனைக்கு அவசரமாக செல்கிறார்கள். போகிற இடத்தில் ஜெயம் ரவியின் தங்கச்சியான பேபி அனிகாவுக்கும் அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? வைரஸ் தொற்றிலிருந்து தன் தங்கை அனிகாவை ஜெயம்ரவி காப்பாற்றினாரா? என்பதே கிளைமாக்ஸ். இடையில் ஜெயம்ரவி – லட்சுமிமேனன் லைட்டான லவ் போர்ஷனும் உண்டு.

தனி ஒருவனில் ஐ.பி.எஸ் அதிகாரியாக கம்பீரமாகவும், மிடுக்குடனும் வந்த ஜெயம் ரவி இதில் ட்ராபிக் போலீசாக வந்தாலும் அதே கம்பீரமும், மிடுக்கும் இம்மியளவு குறையவில்லை.

படத்துக்கு படம் கேரக்டருக்காக அவர் போடுகிற உழைப்பு அபரிமிதமானது. அப்பேர்ப்பட்ட உழைப்பை இந்தப்படத்திலும் தரத் தவறவில்லை.

எந்த பில்டப்பும் இல்லாமல் ஒரு சாதாரண கேரக்டர் தான் அவருடையது. அதிலும் கூட அவர் மெனக்கிடல் அப்பட்டமாகத் தெரிகிறது. ஒரு பகலில் சாலையில் லட்சுமிமேனனைப் பார்த்து காதலில் விழுவதும், பிறகு அவருக்கு பாய் ப்ரெண்ட் இருக்கிறார் என்பது தெரியவும் தனது காதலை சைலண்ட்டாக்கி விட்டு அவரை தூரத்தில் இருந்து ரசிப்பதும் அவ்ளோ அழகு.

ஸோம்பிகளிடமிருந்து டாக்டர்கள், தனது தங்கை தனது நண்பன் காளி ஆகியோர்களை காப்பாற்ற போடும் சண்டைகள் எல்லாமே ஆக்‌ஷன் அட்ராசிட்டி.

உயிர் போகப்போகிற நேரத்தில் கூட தனது காதலியை எப்படியாவது ஸோம்பிக்களிடமிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்று போராடுகிற காட்சியில் காதலின் ஆழத்தை நடிப்பில் அழகாக பிரதிபலித்திருக்கிறார்.

ஜெயம்ரவியின் காதலி என்பதை விட ஒரு டாக்டராகத்தான் அதிக முக்கியத்துவத்தோடு வருகிறார் லட்சுமிமேனன். சொல்லு என் மேல யாருக்குமே இல்லாத அக்கறை உனக்கு மட்டும் எதுக்கு? எதுக்காக என்னை காப்பாத்த முயற்சி பண்ற என்று லட்சுமிமேனன் ஜெயம்ரவியிடம் கேட்கிற காட்சியில் உருக்கம்!

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக வந்த பேபி அனிகா இதில் ஜெயம்ரவிக்கு தஙகச்சியாக வருகிறார். வைரஸ் தாக்குதலுக்கு தான் ஆளானதும் என்னோட குணம் மாறிப்போறதுக்குள்ள துப்பாக்கியால சுட்டுடுண்ணே… என்று சொல்கிற காட்சியிலும், என் அண்ணனோட பர்ஸ்ல ஒரு பொண்ணோட போட்டோ இருக்கு, அவங்களை அவருக்கு ரொம்ப பிடிக்கும், எப்படியாவது அவங்களை என் அண்ணனோட சேர்த்து வெச்சிடுங்க என்று லட்சுமிமேனனிடம் சொல்கிற காட்சியில் நெகிழ வைத்து விடுகிறார் அனிகா.

காமெடிக்கு காளி இருந்தாலும், அரசியல்வாதியாக வரும் ஆர்.என்.ஆர் மனோகரும் முதலில் கேத்து காட்டி பின்னர் ஸோம்பிக்களின் தாக்குதலுக்கு பயந்து நடுங்குவது கூடுதல் காமெடி.

இமானின் பின்னணி இசையில் படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலுடன் நகர்கிறது. மிருதா மிருதா பாடல் அழகான மெலோடி.

எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் நைட் எபெக்ட் காட்சிகளும், ஸோம்பிகளின் மேக்கப் முகங்களும் உறுத்தாத காட்சிகள்.

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் வந்திருக்கும் படம், கோயம்புத்தூருக்கு போகும் சாலையில் அத்தனை கார்கள் கீழே கிடந்தாலும் எல்லா ஸோம்பிக்களும் ஜெயம்ரவியின் காரை மட்டும் ஏன் சுற்றி வளைக்கின்றன? லட்சுமிமேனன் சுட்டபிறகு ஜெயம் ரவி இறப்பதாக கிளைமாக்ஸில் காட்டப்படுகிறது. அதன்பிறகு அவர் எப்படி உயிரோடு வந்து சென்னைக்கு போகிறார்.

வைரஸ் தாக்குதலுக்கானவர்கள் எல்லோரும் அடுத்த நொடி ஸோம்பிக்களாக மாறிவிடும் போது ஜெயம் ரவியின் தங்கை அனிகாவும், ஜெயம்ரவியும், கூடவே வரும் ஒரு டாக்டரும் மட்டும் ஏன் உடனே மாறாமல் திடீரென்று அவர்களுக்கு அதை எதிர்க்கிற சக்தி இருப்பதாக காட்டப்படுகிறது.

இப்படி பதிலிள்ளா சில கேள்விகள் படத்தில் இருந்தாலும் அரைத்த மாவையே அரைத்து ரசிகர்களின் பர்சை பதம் பார்க்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் தமிழில் இப்படி ஒரு முயற்சியை செய்ய வேண்டும் என்று யோசித்ததற்காகவே சக்தி சவுந்தர் ராஜனை பாராட்டலாம்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE