ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதே இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் மறந்து ஒரு மூன்று மணி நேரம் ரிலாக்ஸ் ஆகி விட்டுப் போகலாம் என்கிற எண்ணத்தில் தானே? அவர்களின் அந்த எதிர்பார்ப்புக்கு தோதான ஆளாக வந்திருக்கிறார் இந்த ‘மாப்ள சிங்கம்’.
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு சாதிக்காரர்கள் மத்தியில் அந்த ஊருக்கு பொதுவாக இருக்கும் தேரை யார் இழுப்பது? என்கிற பகை. இந்தப் பகையை சரி செய்ய வரும் கலெக்டரான பாண்டியராஜனையே மண்டையில் காயத்தோடு தான் திருப்பியனுப்புகிறார்கள்.
அந்தளவுக்கு 20 வருடங்களாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது தேர் இழுக்கும் பிரச்சனை!
இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவராக வரும் ராதாரவி கெளரவம் தான் முக்கியம் என்றிருப்பவர். காதல் திருமணத்தை அறவே வெறுப்பவர்.
அப்படிப்பட்டவரின் மகளை எதிர் சாதியில் உள்ள ஜெயப்பிரகாஷின் மகனை காதலிக்கிறாள்.
பெரியப்பாவைப் போலவே சாதி கடந்த காதல் திருமணங்களை தடுக்கும் ஹீரோ விமல் பெரியப்பா மகளின் காதல் தொடர்பாக பஞ்சாயத்துக்கு போகிற இடத்தில் ஜெயப்பிரகாஷின் மகளான அஞ்சலியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார்.
இதனால் அஞ்சலியை திருமணம் செய்வதற்காக காதலுக்கு எதிரான தனது மனநிலையை மாற்றி பெரியப்பா மகளையும், ஜெயப்பிரகாஷின் மகனையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்.
அவரது முயற்சி பலித்ததா? அஞ்சலியை கரம் பிடித்தாரா? 20 ஆண்டுகளாக ஊருக்குள் தேரை இழுக்கும் சர்ச்சை முடிவுக்கு வந்ததா? என்பதே கிளைமாக்ஸ்.
‘கருத்து கந்தசாமி’யாக வரும் ஹீரோக்களுக்கு மத்தியில் ‘கலகலப்பான’ ஹீரோவாக வருகிறார் விமல். இதுபோன்ற கிராமத்து கதைகளுக்கு கனகச்சிதமாக பொருந்திப் போகிறார். மீசையை முறிக்கிக் கொண்டு பளிச்சென்ற வெள்ளை வேட்டி, சட்டையுடன் அவர் நடந்து வரும் கம்பீரமே கேரக்டரின் தனி ரகளை தான்.
முதலில் சட்டம் தான் முக்கியம் என்று சீன் போடுவதும், பிறகு அதே காதலனை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தனியாக கூட்டி வந்து நையப்புடைத்து அனுப்புகிற காட்சியும் ரசிக்க வைக்கிறது.
நாயகி அஞ்சலியோ விமலுக்கு நேர் எதிராக கலர்ஃபுல் காஸ்ட்யூம்களில் கிறங்கடிக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்ததாலோ என்னவோ விமல் – அஞ்சலி காதல், காமெடி கெமிஸ்ட்ரி எல்லாமே இதில் சரியாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. சகலகலா வல்லவனின் பெருத்து காட்சியளித்த அஞ்சலி இதில் கொஞ்சம் மெலிந்து வந்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
வழக்கமான விமல் – சூரி காம்போவுடன் இதில் கூடுதலான காமெடிக்கு காளி வெங்கட், சுவாமிநாதன் ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள். படம் முழுக்க இவர்கள் வருகிற காட்சிகளில் சிரிப்புக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார் இயக்குநர். சிங்கமுத்து வந்து போகும் சின்ன சீன் கூட காமெடி தான்.
அஞ்சலியின் முறைமாமனாக வரும் முனீஸ்காந்த், ராதாரவியின் மகளாக வரும் மதுமிளா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஜெயப்பிரகாஷ் என்கிற திறமையான நடிகருக்கு படத்தில் அவ்வளவாக வேலையில்லை. அதேபோல விமல் கூடவே போட்டோகிராபராக வரும் வெள்ளைக்காரரும் எக்ஸ்ட்ரா பிட்டிங் தான்!
தருண்பாலாஜியின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை பளிச்சென்று பார்க்க முடிகிறது. அதைவிட அஞ்சலிக்கு அவர் வைத்திருக்கும் கேமரா கோணங்கள் எல்லாமே அவரே அஞ்சலியின் ரசிகரோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது. அந்தளவுக்கு திரையில் அஞ்சலியின் அழகை எக்ஸ்ட்ராவாக பந்தி வைத்திருக்கிறார்.
ரகுநந்தனின் இசையில் வந்தாரு மாப்ள சிங்க, பாடல்கள் உட்பட எல்லா பாடல்களும் எழுந்து நின்று டான்ஸ் ஆட வைக்கின்ற ரகம் தான்.
‘ உங்க ஊர்ல வேலையில்லாதவங்க தான் தேர்தல் நிற்பாங்களா’, ‘எங்க ஊர்ல கல்யாணத்துக்கு பொண்ணுங்க சம்மதம் கேட்க மாட்டோம், அப்படி கேட்டா ஒரு ஆம்பளைக்கும் எங்க ஊர்ல கல்யாணம் நடக்காது’ என உண்மை பேசும் வசனங்களை போகிற போக்கில் காமெடியாக்கியிருக்கிறார் டான் அசோக்!
கருத்தெல்லாம் சொல்ல வரல.., ரெண்டேகால் மணி நேரம் ஜாலியா ரசிச்சிட்டுப் போகலாம் என்பது தான் இயக்குநரின் திட்டம் போலிருக்கிறது. அதனாலேயே சீரியஸான காட்சியைக் கூட காமெடியாக்கி பக்கா ஃபெமிலி கலர்புல் எண்டர்டெயினராக கொடுத்திருக்கிறார்.