தமிழுக்காக சில எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளைப் போட்டு ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்துக்கு கியாரண்டி தந்திருக்கிறார் இயக்குநர் ஐ.அஹமத்.
பொள்ளாச்சியில் வக்கீல் தொழில் செய்து வரும் உதயநிதிக்கு நாயகி ஹன்ஷிகா முறைப்பெண். என்னதான் முறைப்பெண்ணாக இருந்தாலும் உப்புக்கு உதவாத லாயர் என்கிற கெட்ட பெயர் எடுத்தவருக்கு எப்படி பெண் கொடுப்பார் ஹன்ஷிகாவின் அப்பா?
இதனாலேயே ”பெரிய லாயராகிக் காட்டுகிறேன்” என்கிற வெறியோடு சென்னைக்கு வருகிறார் உதய். அங்கு அதே லாயர் தொழில் செய்யும் மாமா விவேக்குடன் இணைந்து ஏதாவது வழக்கு சிக்காதா என்று தேடுகிறார்.
அந்த நேரத்தில் தான் ஒரு பணக்கார வீட்டுப் பையன் ப்ளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளிகள் மேல் காரை ஏற்றிக் கொன்ற வழக்கு பொது நல வழக்காக நீதிமன்றதுக்கு வருகிறது. இந்தியாவிலேயே பிரபலமான வக்கீலான பிரகாஷ்ராஜ் தனது வாதத்திறமையால் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பணக்கார இளைஞனை காப்பாற்றுகிறார்.
ஆனால் மூளையை உறுத்தும் அந்த வழக்கை மீண்டும் பொது நல வழக்காக விசாரிக்கக் கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் உதயநிதி.
அடுத்தடுத்து வருவது எல்லாமே சூடு பிடிக்கும் ‘சீட்டு நுனி’ காட்சிகள்… பிரகாஷ்ராஜை எதிர்த்து உதயநிதி ஜெயித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
உதயநிதி நடித்ததே அரை டஜன் படங்கள் தான். ‘கெத்து’வில் சந்தானம், டாஸ்மாக் காம்போவுக்கு குட்பை சொன்ன உதயநிதி இதில் தன்னை அடுத்த லெவலுக்கு அப்கிரேடு செய்திருக்கிறார். கேரக்டராக மட்டுமல்ல, சோலோ ஹீரோவாகவும் முழுமையாக ஜெயித்திருக்கும் உதயநிதிக்கு இது இன்னொரு ஹாட்ரிக் ஹிட்! பொதுநலத்தோடு யோசிக்கிற சாதாரண மனிதராக வரும் அவர் வக்கீல் கேரக்டரில் மிக இயல்பாக பொருந்திப் போகிறார்.
விட்டால் நொடிப்பொழுது நடிப்பில் கூட தூக்கிச் சாப்பிட்டு விடுகிற பிரகாஷ்ராஜ் உடன் உதயநிதி கோர்ட் வாதாடும் காட்சிகளில் மொத்த தியேட்டரும் சைலண்ட் மோடுக்கு போய் படத்தோடு ஒன்றி விடுகிறது.
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் ஹன்ஷிகாவை துரத்தி துரத்தி காதலித்த உதய் இதில் அவருக்கு முறைப்பெண்ணாக புரமோஷன் கொடுத்திருக்கிறார். தேவைப்பட்ட இடங்களில் அளவோடு நடிக்கிறார். தேவைப்படுகிற காட்சிகளில் உதயநிதியோடு டூயட் பாடுகிறார். அதைத்தாண்டி அவரது கேரக்டரை இழுக்காமல் விட்டுருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
இந்தியாவின் பிரபல வக்கீலாக வருகிறார் பிரகாஷ்ராஜ். அவரது நடிப்பை சிலாகிக்காமல் இருக்க முடியுமா? கேப் கிடைக்கிற இடங்களில் எல்லாம் கோல் போடுகிறார் மனுஷன். ஒரு மூத்த வக்கீலுக்கான தோரணையோடு அவர் கோர்ட்டுக்குள் நுழையும் போதே ஏற்படுகிற பரபரப்பு படம் முடியும் வரை அது தொடர்கிறது.
படத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய இன்னொரு நடிகர் நீதிபதியாக வரும் ராதாரவி. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அவர் செய்யும் மேனரிஸங்கள் நீதிபதிகளுக்கே உரிய மிடுக்கு. ”இங்க யாரு குற்றவாளின்னு எனக்கு மட்டுமில்ல இங்க இருக்கிற எல்லாருக்குமே தெரியும். ஆனா என்ன பண்றது சாட்சிகள் சொல்றதை வெச்சுத்தானே நாங்கெல்லாம் தீர்ப்பு சொல்ல வேண்டியிருக்கு” இந்திய நீதித்துறையில் அவலத்தை சொல்கிற இடத்தில் கைத்தட்டல்களை அள்ளிக்கொள்கிறார்.
டிவி சேனல் நிருபராக சின்ன கேரக்டரில் வந்தாலும் அதிலும் முக்கியத்துவத்தோடு தான் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காமெடிக்கு விவேக்! அதிகம் சிரிக்க வைக்கவில்லை என்றாலும், வருகிற காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். மதியின் ஒளிப்பதிவில் கோர்ட் வளாக நிகழ்வுகளை மிகப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதோடு பாடல் காட்சிகளிலும் எக்ஸ்ட்ரா அழகு!
காதை கிழித்தெடுக்கிற ரகமாகத்தான் இருக்கிறது சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. இதுபோன்ற வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிற படங்களில் கூட தேவையில்லாமல் பின்னணியில் இசையை ஓட விடுவதை தாங்க முடியவில்லை. பாடல்களும் ஏற்கனவே கேட்ட அவர் போட்ட மெட்டுகள் தான்.
அஜயன்பாலாவின் ஆழமான வசனங்கள் நீட்டி முழக்காமல் அளவெடுத்தது போல சின்னச் சின்னதாய் தீப்பொறி பறக்கிறது.
‘விதி’ படத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் இடைவெளி விட்டு வந்திருக்கும் ஒரு பரபரப்பான வழக்கு, வக்கீல்களின் வாதத்திறமை என ரசிகர்களின் ரசனைக்கு செமத்தியாக தீனி போடுகிற படம்!