இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் எப்பவோ ஹீரோவாக அறிமுகமாகியிருக்க வேண்டிய படம். பைனான்ஸ் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக தட்டுத் தடுமாறி ரிலீசாகியிருக்கிறது.
கல்வியை பொதுநலத்தோடு தர வேண்டிய தனியார் பள்ளிகள் பணம் சம்பாதிக்கும் பேராசையில் எப்படியெல்லாம் சுயநலத்தோடு நடந்து கொள்கின்றன என்பதை புட்டு புட்டு வைக்கும் படமே இந்த ‘பென்சில்’.
மாநகரத்திலேயே பிரபலமான பள்ளியில் ஜி.வி.பிரகாஷ்குமாரும், ஸ்ரீதிவ்யாவும் படிக்கிறார்கள். அதே பள்ளியில் படிக்கும் பிரபல ஹீரோவின் மகனான ஹாரிக் ஹசன் செய்யாத சேட்டைகள் இல்லை. இதனால் ஹீரோ ஜி.வி பிரகாஷூக்கும், ஹாரிக் ஹசனுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
அதோடு அதே பள்ளியில் வேலை பார்க்கும் இரண்டு ஆசிரியர்களும் ஹாரிக் ஹசன் மீது கோபத்தோடு இருக்கிறார்கள்.
பிரபலமான ஹீரோவின் மகன் என்பதால் அவன் நமது பள்ளியில் படிப்பது நமக்குத்தான் பெருமை என்று பள்ளி நிர்வாகம் அவன் செய்கிற அட்டூழியங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் விடுகிறது.
ஒருநாள் பள்ளிக்கு ஐ எஸ் ஐ தரச்சான்றிதழ் தருவதற்காக அதிகாரி ஊர்வசி ஆய்வுக்கு வருகிறார். அந்த நாளில் ஹாரிக் ஹசன் பள்ளியில் கொலை செய்யப்பட்டு கிடக்க, அவனை கொன்றது யார்? ஏன் என்பது தான் கிளைமாக்ஸ்.
பல மாதங்களாக கிடப்பில் இருந்த படமென்பதாலோ? என்னவோ? ஜிவியும் சரி, ஸ்ரீதிவ்யாவும் சரி படம் முழுவதிலும் ரொம்பவே இளமையாக காட்சியளிக்கிறார்கள்.
நடிப்பை ஸ்கிரீனில் காட்ட ரொம்பவே கஷ்டப்படுகிறார் ஜி.வி. ஆனால் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் ஹாரிக் ஹசனோ அசால்ட்டாக நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். சின்ன வயசு ரகுவரனை பார்த்தது போல இருக்கிறது ஹசனின் ஸ்கிரீன் பெர்பார்மென்ஸ்!
பள்ளிக்கூட யூனிபார்மில் இளமை தேவதையாக வருகிறார் ஸ்ரீதிவ்யா. படம் முடியவும் திணிக்கப்பட்ட பாடலில் கொள்ளை அழகில் சொக்க வைக்கிறார். இதைத்தாண்டி துப்பறியும் வேலையிலும் பளிச்சிடுகிறார்.
சுஜா வருணிக்கும், திருமுருகனுக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகளில் ஜோடிப் பொருத்தம் ஒட்டவே இல்லை.
என்னதான் நடிப்பில் தடுமாறினாலும் பின்னணி இசையில் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார் ஜி.வி. மனதில் ஒட்டாத பாடல்களில் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றன.
மகளை இழந்த சோகத்தை சொல்லி அபிஷேக் அழ வைத்தால், அந்தப் பள்ளியை ஆய்வு செய்ய வரும் அதிகாரி ஊர்வசியும், பள்ளியின் தாளாளரான டி.பி. கஜேந்திரனும் சிரிக்க வைக்கிறார்கள்.
இடைவேளைக்குப் பிறகு வரும் கொலைக் குற்றத்துக்கான குற்றவாளியை தேடும் காட்சிகளில் உள்ள நீளத்தை தயவு தாட்சண்யம் பார்க்காமல் வெட்டியிருக்கலாம் எடிட்டர் ஆண்டனி.
இந்தக்கால பள்ளிக்கூட மாணவர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும் ஒரு கொலை குற்றத்தை போலீஸ் லெவலுக்கு தனியாகவே துப்பறியக் கிளம்புவதெல்லாம் நம்பும்படி இல்லை.
கட்டணக் கொள்ளை, குழந்தைகளை பராமரிக்கும் லட்சணம், பிரபலமானவர்கள் வீட்டுக் குழந்தைகள் என்றால் அவர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு, ஆசியர்களின் கள்ளக் காதல் என தனியார் பள்ளிகளில் நடக்கும் பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மணி நாகராஜ்.
தனியார் பள்ளிகளில் நடந்த பல உண்மைச் சம்பவங்களின் மோசமான பக்கங்கள் தான் இந்தப்படம். கூடவே ‘கல்வியை வியாபாரமாக்கி விட வேண்டாம்’ என்கிற முக்கியமான கருத்தையும் வலியுறுத்துகிறது!