தெலுங்கில் ‘பொம்மரில்லு’ என்ற மாபெரும் வெற்றிப்படத்தைக் கொடுத்த பாஸ்கர் தமிழில் இப்படத்தின் மூலம் எண்ட்ரி போட்டிருக்கிறார்.
எம்.பி.ஏ மேற்படிப்பு படிக்க ஆசைப்படும் ஸ்ரீதிவ்யா, இன்னும் கலாச்சார எல்லையை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் பாபி சிம்ஹா. எல்லாவற்றையும் டேக் இட் ஈஸியாக கடந்து போகும் ஆர்யா மூன்று பேருமே நல்ல நட்பில் இருக்கும் நெருங்கிய சொந்தங்கள்.
இந்த மூவருக்கும் பெங்களூரில் போய் செட்டிலாக வேண்டும் என்பது தான் சிறுவயது கனவு.
திடீரென்று ஸ்ரீதிவ்யாவுக்கு ராணாவுடன் திருமணம் நிச்சயமாகி விட, அவரோடு பெங்களூரில் செட்டிலாகிறார். பாபி சிம்ஹாவுக்கும் பெங்களூரில் உள்ள ஓரு ஐ.டி கம்பெனியில் வேலை கிடைக்கிறது. மிச்சமிருக்கும் ஆர்யாவும் பெங்களூருக்கு வந்து விட, மூன்று பேர் வாழ்க்கையிலும் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்களும், அதை ஒட்டி நடக்கும் காதல், மோதல், செண்டிமெண்ட் இத்யாதிகளும் தான் கிளைமாக்ஸ்.
கதையின் நாயகியே ஸ்ரீதிவ்யா தான். அதுவரை குறும்புத்தனமும், குதூகலமும் நிறைந்த வாழ்க்கை சூழலில் பழக்கப்பட்ட ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணத்துக்குப் பிறகு மூடி டைப் கணவனுடனான வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? கதையின் மொத்த கனத்தோடு, கதாபாத்திரத்தையும் கச்சிதமாக தாங்கி நிற்கிறார்! மலையாளத்தில் நஷ்ரியா ப்பூ.. என்று ஊதித்தள்ளிய கேரக்டர் அது. தமிழ்ச்சூழலுக்கு ஸ்ரீதிவ்யாவின் அழகான முகம் நல்ல பொருத்தம்.
கலாச்சார மாற்றங்களுக்குள் தன்னை இணைத்துக் கொள்ளாமல் பக்கா கிராமத்தானாக வருகிறார் பாபி சிம்ஹா.
பெங்களூர் போன்ற ஹைடெக் சிட்டிக்கு வாழ்க்கைச் சூழல் மாறும்போது பொது இடத்தில் ஒரு ஜோடி முத்தம் கொடுப்பதைக் கூட கூச்சத்துடன் பார்க்கும் பார்வையில் ஆரம்பித்து ஏர்ஹோஸ்டரான லட்சுமிராயுடன் டேட்டிங் போய் அது அந்தாக்ஷிரி விளையாட்டாக மாறுவது வரை என அவரது கேரக்டரே காமெடி ப்ளஸ் நிஜம்.
அப்பா, அம்மா பிரிவால் பேச்சுலராகவே இருக்கும் ஆர்யா அந்த ப்ளாஷ்பேக்கை யார் கேட்டாலும் டென்ஷனாகிறார். மற்ற இடங்களில் மனுஷன் நிஜ வாழ்க்கையில் எப்படியோ அப்படி ஒரு ஜாலியான பேர் வழி. ரேடியோ ஜாக்கியாக வரும் பார்வதிக்கும், ஆர்யாவுக்கும் இடையேயான காதல் ஒரு ஹைக்கூ கவிதை போன்ற அழகு.
பார்வதி தான் வருகிற காட்களில் எல்லாம் ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான நடிப்பில் கண்களாலேயே பேசி அசரடிக்கிறார்.
நாகரீக வாழ்க்கைக்கு ஆசைப்படும் பாபி சிம்ஹாவின் அம்மா சரண்யா ஒவ்வொரு கட்டத்தில் அதை நோக்கி மாற்றத்தைக் காண்பிப்பது புதிய தலைமுறைகளை பெற்றெடுத்த அம்மாக்களின் உணர்வுகளை திரையில் காமெடி கலந்து காட்டியிருக்கிறார்.
‘பாகுபலி’க்குப் பிறகு ராணா உடம்பை வெகுவாக குறைத்து மூடி டைப் கணவராக வருகிறார். உடல் மொழி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.சில காட்சிகளே வந்தாலும் பிரகாஷ்ராஜ் நடிப்பு நிறைவு.
கே.வி.குகனின் ஒளிப்பதிவில் பெங்களூர் நகரத்தின் அழகை இம்மி அளவு குறையாமல் அப்படியே ரசிக்கலாம். கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை என்றாலும், பின்னணி இசையில் மனசை பிசைகிறார். த.செ.ஞானவேலின் வசனங்கள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை.
பொதுவாகவே ஒரு படத்தை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ரீமேக் செய்யும் போது ரசிகர்களுக்கு ஏற்படுகிற எதிர்பார்ப்பு எக்கச்சக்கம். ஒரிஜினலையும், நகலையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம்.
அந்த ஒப்பீடு இந்தப் படத்துக்கும் கண்டிப்பாக வரும். அந்த எதிர்பார்ப்பை ஓரளவுக்கு பூர்த்தி செய்யும் விதத்தில் முழுமையாக வந்திருக்கிறது இந்தப்படம்.