18.4 C
New York
Tuesday, September 17, 2024

Buy now

spot_img

பிச்சைக்காரன் – விமர்சனம்

திரையுலக விழாக்களில் ‘சொல்லாமலே’ சசி, ‘பூ’ சசி என்று அழைக்கப்பட்ட போது கிடைத்த கைதட்டல்களை விட இனி ‘பிச்சைக்காரன்’ சசி என்று அழைக்கப்படும் போது கிடைக்கும் கைதட்டல்கள் நூறு மடங்காக இருக்கும். அந்தளவுக்கு தமிழ்சினிமாவின் பெருமைமிகு படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சசி!

அம்மா – மகனுக்கிடையே இருக்கின்ற பாசப்பிணைப்பை ஒரு புதிய கோணத்தில், புதிய பார்வையில் திரைக்கதையாக்கித் தந்திருக்கிறார்.

படத்தின் நீளம் தவிர்த்து எந்த சீனிலும் கடுகளவு பிசிறு தட்டல் இல்லாமல் பிச்சைக்காரர்களின் முழுமையான வாழ்க்கைப் பின்னணியை அவர்கள் மனமும் புண்படாதவாறு அதே சமயத்தில் நிஜ வாழ்க்கையில் அவர்கள் படுகின்ற துன்பங்கள், சந்தோஷங்கள், செண்டிமெண்ட்ஸ், அவர்களிடையே இருக்கிற நகைச்சுவை உணர்வுகள் என எல்லா விஷயங்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

கோவையில் 900 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய மில் ஓனருக்கு ஒரே வாரிசு விஜய் ஆண்டனி.

அதே மில்லில் அவருடைய அம்மா ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விட, கோடிக்கணக்கில் பணம், பெரிய பெரிய மருத்துவமனைகள், உயர்ரக சிகிச்சைகள் இருந்தும் எந்த பயனும் இல்லாமல் போகிறது.

இறுதி நம்பிக்கையாக ஒரு சாமியாரிடம் செல்கிறார் விஜய் ஆண்டனி. அவர் சொல்லும் பரிகாரத்தைக் கேட்டு விஜய் ஆண்டனி மட்டுமல்ல படத்தைப் பார்க்கும் ரசிகர்களே கூட ஒரு கணம் அதிர்ந்து தான் போய் விடுகிறார்கள்.

48 நாட்கள் உன் கோடிக்கணக்கான பணத்தை மறந்து, யாரிடமும் உதவி பெறாமல் ஒரு ‘பிச்சைக்காரன்’ வாழ்க்கையை வாழ வேண்டும். அந்த கால கட்டங்களில் உன் பண பலத்தையோ, உன் அதிகாரத்தையோ எந்த இடத்திலும் பயன்படுத்தக்கூடாது என்கிறார்.

பெற்றெடுத்த அம்மா குணமடைய வேண்டும் என்பதற்காக பிச்சை எடுக்கக் கிளம்பும் விஜய் ஆண்டனி அந்த காலகட்டங்களில் பல இன்னல்களை சந்திக்கிறார். அந்த இன்னல்களையும் தாண்டி, அவருடைய வேண்டுதல் நிறைவேறியதா? அவருடைய அன்புத்தாய் குணமானாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

ஹாட்ஸ் ஆப் விஜய் ஆண்டனி சார்..

பணம் பண்ணும் ஆசையில் அடுக்கடுக்கான படங்களை கமிட் செய்து கொண்டு ரெண்டு, மூன்று படங்களிலேயே காணாமல் போகும் ஹீரோக்களுக்கு மத்தியில் உங்கள் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு விஷயம் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய புதுமை இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தின் கதைத்தேர்வும் ஒரு புதுமை தான்.

நான் தான் மாஸ் ஹீரோ என்று மார்தட்டிக்கொள்ளும் அத்தனை ஹீரோக்களும் விஜய் ஆண்டனியிடம் பிச்சை எடுக்க வேண்டும். எப்படிப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று!

முந்தைய படங்களில் ”இந்தப் பூனையும் பால் குடிக்குமா?” என்கிற முகச்சாடையிலேயே வந்த விஜய் ஆண்டனி இதில் நடிப்பில் மட்டுமில்லாமல், ஆக்‌ஷனிலும் பலபடிகள் முன்னேறியிருக்கிறார்.

குறிப்பாக படுக்கையில் கிடக்கும் அம்மாவைப் பார்த்து ”அம்மா நீ பேச வேணாம், எழுந்திரிச்சி நடமாட வேணாம், இப்படியே உசுரோட இருந்தாப் போதும்மா… இந்த உலகத்துல எனக்கு சொந்தம்னு யாருமே இல்லேம்மா…” என்று கண்கலங்குகிற குளோசப் காட்சியில் நாமும் கண்கலங்கி விடுகிறோம்.

அம்மா- மகன் என இரண்டு கேரக்டர்களை சுற்றியே கதை நகர்வதால் நாயகி சட்னாவுக்கு பெரிதாக வேலையில்லை. பீட்சா விற்பவராக வரும் அவர் விஜய் ஆண்டனியிடம் மெல்ல மெல்ல தன் மனசை பறி கொடுத்து விட்டு அவர் ‘பிச்சைக்காரன்’ என்று தெரிய வந்த பிறகும் காதலை விட முடியாமல் தவிக்கின்ற காட்சிகளில் காதலின் வலிமையை பிரதிபலிக்கிறார்.

பெரியப்பாவாக வரும் முத்துராமன், அமைதியே உருவான அம்மாவாக வரும் தீபா, விஜய் ஆண்டனியின் நண்பராக வரும் பகவதி பெருமாள் ஆகியோரின் நடிப்பு நிறைவு.

விஜய் ஆண்டனியுடன் பிச்சைக்காரராக வரும் இயக்குநர் மூர்த்தி அன்கோவின் காமெடி கலாட்டா தியேட்டரில் சிரிப்பு சத்தம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. அதிலும் இந்தியாவில் வறுமையை ஒழிப்பது பற்றி பண்பலையில் பேசுவார் பாருங்கள்… விலா நோக சிரித்து சிந்திக்கலாம். வில்லனாக வருபவர் வெறும் பார்வையாலேயே மிரட்டுகிறார்.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில் பிச்சைக்காரர்களின் பகல், இரவு வாழ்க்கையை சமரசம் செய்யாமல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மெதுவாக நகரும் சில காட்சிகளை கொஞ்சமும் யோசிக்காமல் வெட்டி எறிந்திருக்கலாம் எடிட்டர் வீர செந்தில் ராஜ்.

விஜய் ஆண்டனியின் இசையில் பின்னணி இசையும், நூறு சாமிகள், நெஞ்சோரத்தில், உனக்காக வருவேன் போன்ற பாடல்களும் மனசை லேசாக்குகின்றன.

பொதுவாக சசியின் படங்கள் என்றாலே காதலின் சின்னச் சின்ன உணர்வுகள் அழகாக இருக்கும், இதிலும் அந்த ஆச்சரியங்கள் உண்டு. காதலி கொடுக்கின்ற பணத்தை வாங்காமல் அதை பிச்சையாக கேட்டு கையேந்தி நிற்கின்ற போது நாயகி சட்னா விஜய் ஆண்டனியின் கைகளில் தானே பிச்சையாக விழுந்து அழும் காட்சி உருக்கம்.

48 நாட்கள் ஒரு மண்டலம் என்பதாலோ என்னவோ? திரைக்கதை மெதுவாக நகர்கிறது. அந்த நேரங்களில் ”இன்னைக்கு தலை வார்றப்போ ஒரு முடி விழுந்துடுச்சுன்னு நெனைச்சுக்கோ…,” ”நம்பிக்கையோட பலமே முழுசா நம்புறதுல தான் இருக்கு…” ”பிச்சைக்காரனா இருந்ததுக்காக வருத்தப்படலை. ஆனா, பணக்காரனா இருக்குறது அருவருப்பா இருக்கு” போன்ற வாழ்க்கையின் நெருக்கத்தில் இருந்து எழுதப்பட்ட வசனங்கள் படத்தின் காட்சிகளை சுவரஷ்யமாக்குகின்றன.

பிச்சைக்காரர்கள் என்றாலே ரசிகர்கள் பரிதாபப்படப்பட வேண்டுமென்கிற ”வன்முறை” வழியிலிருந்து விலகி அவர்களின் வாழ்க்கை, அதில் வருகின்ற கதாபாத்திரங்கள், ஆறு மணிக்கு மேல் அவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது?, சந்தோஷம், மகிழ்ச்சி, கஷ்ட, நஷ்டங்கள் என எல்லாவற்றையும் முகம் சுளிக்கக்கூடிய வகையில் இல்லாமல் அவர்களும் மனிதர்கள் தான் என்கிற உண்மையை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சசி.

இனி பொது இடங்களில் எந்த பிச்சைக்காரரையாவது பார்த்தால் காசு போட மனசு வருகிறதோ? இல்லையோ? ஏதோ அசிங்கத்தை பார்த்து விட்டது போல காட்டும் முகபாவம் கண்டிப்பாக மாறும்.

அந்த வகையில் இந்த பிச்சைக்காரனின் தலையில் தங்க கிரீடம் சூட்டிய இயக்குநர் சசிக்கு ரசிகர்கள் சார்பில் ஒரு வைர கிரீடத்தையே சூட்டி பாராட்டி மகிழலாம்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE