-2.4 C
New York
Friday, December 13, 2024

Buy now

spot_img

நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி

அண்மையில் வெளியாகியுள்ள ‘பென்சில்’ படத்தில் ஜீ.வி. பிரகாஷ்– ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளவர் சுஜா வருணி.

இவருக்கு வசீகரமுகமும் நடிப்புத்திறனும் இருந்தும் இன்னும் ராமனின் கால் பட அகலிகை கல்லாகக் காத்திருந்தது போல நல்ல வாய்ப்புக்காக பொறுமையாகக் காத்திருக்கிறார்.

சுஜா வருணி இது பற்றிக் கூறும் போது ” எனக்குப் புலம்பும் எண்ணமும் இல்லை.ஆதங்கமும் இல்லை. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப் படும் குணமும் எனக்கு இல்லை.

நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்து இருக்கிறேன். வருகிற வாய்ப்புக்கு முழு அர்ப்பணிப்பு தர நான் தயாராக இருக்கிறேன். ‘பென்சில்’ படத்தில் நான் கதாநாயகி இல்லை என்றாலும் படம் முழுக்க வருவேன். கதையில் சஸ்பென்ஸ் முடிச்சில் என் கேரக்டர் இருக்கும். அதைப் பார்த்த பலரும் என்னிடம் அன்புடன் விசாரித்துப் பேசுகிறார்கள்.

என் சமூக வலைதளங்களில் தினமும் 200 பேராவது என் இன்பாக்ஸில் வந்து கருத்து சொல்கின்றனர். உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

நண்பர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் உறவினர்களும் பாராட்டுகின்றனர்.” என்கிறார்.

இப்போது சுஜா நடித்து வரும் படங்கள் பற்றி என்ன கூறுகிறார்?

” அருண் விஜய்யுடன் ‘வாடீல்’ சசிகுமாரின் ‘கிடாரி’ மற்றும் ‘சதுரம்-2’ படங்களில் நடித்து வருகிறேன்.

‘பென்சில்’ படம் பார்த்து இரண்டு புதிய படவாய்ப்புகள் வந்திருக்கின்றன.

இதில் எல்லாமே பெயர் சொல்லும்படி, அடையாளம் கிடைக்கும்படியான கேரக்டர்கள் தான். ஆனால் அது பற்றி எதுவுமே வெளியில் சொல்லக் கூடாது என்று ஒப்பந்தமே போட்டுள்ளார்கள் .என்னால் ஒரே கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கும் போரடிக்கும். பார்ப்பவர்களுக்கும் போரடிக்கும்,திகட்டும். .

ஹாரர் படங்களில் ,சைக்கோத்தனமான கேரக்டர்களில்,மனநிலை பிறழ்ந்த கேரக்டர்களில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். நெகடிவ் ரோல்களில் கூட நடிக்க நான் தயார்.” என்றவரிடம் அப்படி யென்றால் கதாநாயகியாக நடிக்க ஆசை,ஆர்வம் இல்லையா? எனக் கேட்ட போது,

” கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மறுக்க நான் முட்டாள் அல்ல. அதே நேரம் போஸ்டரில் படம் போட்டால் மட்டுமே லீடு ரோல் என்பது அல்ல. என்னிடம் சுஜா நீ ஏன் லீடுரோல் எடுக்கக் கூடாது என்கிற கேள்வி அடிக்கடி கேட்கப் படுகிறது. படத்தில் முக்கியமாக சஸ்பென்ஸாக இருப்பதும் கூட ‘லீடு ரோல்’ என ஏற்க வேண்டியதுதான்.

சினிமா இப்போது மாறியிருக்கிறது. இப்போது கதாநாயகியை மையப்படுத்திய படங்களை விட குணச்சித்திரங்களை மையப்படுத்திய படங்கள் நிறைய வருகின்றன. படத்தை ‘லீடு’ செய்பவை இப்போது இப்படிப்பட்டவைதான் அப்படிப்பட்ட குணச்சித்திரமாகவும் நடிக்க ஆசை.”

அவ்வப்போது விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறேன். அடுத்த படியேற ஆசை .அது மட்டுமல்ல பெயர் சொல்லும் கேரக்டர் செய்யவும் தயார்.” என்கிறார்.

சுஜாவின் இளமை,தோற்றம், நடிப்புக்கு ஏன் இன்னமும் தடை தாண்டி சிரமத்துடன் போராடி ஓடும் நிலை உள்ளது ?

” சினிமாவில் சில விஷயங்கள் எனக்குப் புரிவதில்லை. எனக்குச் சரியான வழிகாட்டல் இல்லை. வழிகாட்ட எடுத்துச் சொல்ல சரியான ஆட்கள் இல்லை.சினிமாவில் எங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. அடுத்த தாக , நேரம் என்று ஒன்று வர வேண்டும். அது முக்கியம் .அடுத்து திறமையும் வேண்டும்.

நான் இதுபற்றி வருந்துவதைவிட முயற்சியை கடின உழைப்பை போடுவோம். அதற்குப் பலன் உண்டு. என்பதை உணர்ந்திருக்கிறேன். இப்படியே என் பயணம் இருக்கிறது. முன்னே ஓடுபவரைப் பார்த்து பொறாமைப் பட்டாலும் பின்னே ஓடி வருபவரைப் பார்த்து கவலைப்பட்டாலும் என் ஓட்டத்தை கவனிக்க முடியாது. எனக்கு என் ஓட்டம் முக்கியம். ” என்கிறவர் ,தன் ரோல் மாடல் நடிகை ரம்யா கிருஷ்ணன்தான் என்கிறார்.

” அவர் இன்று எத்தனை பேருடன் நடித்தாலும் தனித்து தன்னை வெளிப்படுத்தி விடுவார். அவருக்கு தனித்த அடையாளம் கிடைத்திருக்கிறது. பாசிடிவ், நெகடிவ் ,டான்ஸ், வெஸ்டர்ன் என எல்லாவற்றிலும் பெயர் வாங்கி விடுவார். இந்த இடம் அவருக்குச் எளிதாக கிடைக்கவில்லை. போராடித்தான் பெற்றிருக்கிறார். அவர்தான் எனக்கு முன் மாதிரி. அவர் இடத்தை பிடிக்க முடியுமோ முடியாதோ அவர் நிழலையாவது பிடிப்பேன்.”

யதார்த்தமும் நம்பிக்கையும் சுஜாவின் பேச்சில் தென்படுகின்றன.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE