‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘மஜ்னு’ வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் படம்.
படத்தின் டைட்டிலிலேயே இது எந்த மாதிரியான படமென்பதை யூகித்து விடலாம். ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தில் நட்பின் மகத்துவத்தை ஒரு கோணத்தில் சொன்னவர், இதில் இன்னொரு புதிய கோணத்தை கையாண்டிருக்கிறார்.
இரண்டு காதல் ஜோடிகள்! அவர்களுக்குடையே ஏற்படும் நட்பு, அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு ஆகியவை தான் இந்த ‘நட்பதிகாரம் 79.’
ராஜ்பரத்தும் தேஜஸ்வியும் ஒரு காதல் ஜோடி, அதேபோல அம்ஜத்கானும், ரேஷ்மிமேனனும் ஒரு காதல் ஜோடி. ஒரு நைட் பார்ட்டியில் சந்திக்கும் இந்த இரண்டு ஜோடிகளும் ஒருவர் தோளில் ஒருவர் கை போடுகிற நட்பாகி நெருக்கமாகிறார்கள்.
அந்த நெருக்கமான நட்பே ஜோடிகள் பிரிய வழி வகுக்கிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
ராஜ்பரத்தும், அம்ஜத்கானும் நிஜ நண்பர்களைப் போலவே திரையிலும் ஜொலிக்கிறார்கள். ராஜ்பரத்தின் உசரமும், அசால்ட்டாக பேசும் டயலாக் டெலிவரியும் அவருக்கு கோடம்பாக்கத்தில் நல்ல இடம் கிடைக்க வாய்ப்பிருப்பதை காட்டுகிறது. இன்னொரு ஹீரோவான அம்ஜத்கான் ஒரு பணக்காரப் பையனின் கெத்தை இம்மி குறையாமல் காட்டியிருக்கிறார்.
மயிலாப்பூர் மாமியாக வரும் ரேஷ்மிமேனன் குடும்ப குத்து விளக்காக ஜொலிக்கிறார். எமோஷனல் காட்சியில் கூடுதல் அழகு!
முதல் காட்சியிலேயே ராஜ்பரத்திடம் சிகரெட்டை வாங்கி ஸ்டைலாக பற்ற வைக்கும் புதுமுக தேஜஸ்வி மாடர்ன் கல்ச்சரில் ஊறிப்போன பெண்ணாக வருகிறார். அதுவே இன்னொரு காட்சியில் ”நைட் கிளப்புக்கு வர்ற பொண்ணுன்னா கெட்டவன்னு அர்த்தமா?” என்று டயலாக் பேசி மேல்தட்டு பொண்ணுங்களுக்கும் கற்பு உண்டு என்பதை உணர்த்துகிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், சுப்பு பஞ்சு, வினோதினி, விக்னேஷ் கார்த்திக் என படத்தில் வருகின்ற மற்ற கேரக்டர்களும் தங்கள் நடிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
தீபக் நீலாம்பூரின் இசையில் ராஜூசுந்தரம் ஆடும் குத்துப்பாட்டு தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை ஓ.கே ரகம். ஆர்.பி. குருதேவ்வின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமிலும் இளமை துள்ளல்!
அப்பாவை காப்பாற்றப்போன அம்ஜத்கான் சென்னை திரும்பியவுடன் காதலியிடம் அதைப்பற்றி பேசாதது, அதேபோல தேஜஸ்வியும் ராஜ்பரத்துக்கு திருமணம் என்று கேள்விப்பட்டதும் அதைப்பற்றி கேட்க முயற்சிக்காதது இந்த இரண்டு கேள்விகளும் படத்தை ரெண்டேகால் மணி நேரத்துக்கு இழுக்க முயற்சியோ என்று ரசிகர்களை வெளிப்படையாகவே யோசிக்க வைக்கிறது.
ராஜ்பரத்தும், அம்ஜத்கானும் சிக்னலில் அருகருகே காரில் இருந்தும் திரும்பி பார்க்காமல் செல்லுவதும் , நண்பன் முக்கியமா? காதலி முக்கியமா? போன்ற அறுதப்பழசான காட்சிகளுக்கு யோசிக்காமல் கத்தரி போட்டிருக்கலாம் எடிட்டர் சாபு ஜோசப்.
காதலும், நட்பும் கை கோர்க்கும் படங்கள் தமிழ்சினிமாவுக்கு புதிதல்ல, அதை ‘பட்டி’ ‘டிங்கிரி’யெல்லாம் பார்த்து காலத்திற்கேற்ப மெருகேற்றியிருப்பது தான் திரைக்கதையின் சுவாரஷ்யம்!அந்த வகையில் தூய்மையான காதலுக்கும், தூய்மையான நட்புக்கும் இடையே எப்பேர்ப்பட்ட தடங்கல்கள் வந்தாலும் அதை மட்டுப்படுத்தி ஜெயிக்கிற வல்லமை உண்டு என்பதை இளமை பொங்கும் திரைக்கதை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரவிச்சந்திரன்.