படம் முடிந்து வெளியேறுகிற ஒவ்வொரு ரசிகனும் ஒருவித கனத்த மெளனத்தோடு தான் செல்வான். சிரிப்புக்கு சிரிப்பு, நெகிழ்ச்சிக்கு நெகிழ்ச்சி என வாழ்க்கையை அப்படியே திரையில் பார்த்த அனுபத்தை முழுமையாக தந்து விட்டுப் போகிறான் ”தோழா”!
‘தி இன்டச்சப்பிள்’ என்ற ப்ரெஞ்ச் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ”தோழா”. படம் முழுக்க தெலுங்கு வாடை வியாபித்திருந்தாலும் கார்த்தி என்கிற ஒற்றை ஆள் போதும். மனித உணர்வுகள் மொழிகளை கடந்தது என்பதை அடித்துச் சொல்ல…
திருட்டு வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு போகும் ஹீரோ கார்த்தி அவரது வக்கீல் விவேக் மூலமாக பரோலில் நாலு மாசம் வெளியே வருகிறான். இந்த நாலு மாசமும் சமூகத்தில் நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டும்.
முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என கூட்டிப்போக, கடைசியில் கழுத்துக்கு கீழே உணர்வற்ற நிலையில் இருக்கும் கோடீஸ்வரரான நாகர்ஜூனாவை பராமரிக்கும் வேலைக்கு செல்கிறார்.
தனது வழக்கமான கலாட்டாவால் நாகர்ஜூனாவை பார்த்த மாத்திரத்தில் கவர்ந்து விட, அதன்பிறகு அந்த இருவர் வாழ்க்கையில் நடக்கின்ற உணர்ச்சிப்பூர்வமான, நெகிழ வைக்கின்ற காட்சிகளின் தொகுப்பே ”தோழா”.
ஹாட்ஸ் ஆப் கார்த்தி, உங்களைப் போன்ற முன்னணி ஹீரோக்கள் கதையின் பின்னால் ஓடி வர ஆரம்பித்திருப்பது தமிழ்சினிமாவுக்கு புத்துணர்ச்சி என்றே சொல்லலாம். படத்தில் மருந்துக்கு கூடஒரு சண்டைக்காட்சி இல்லை, மாஸ் ஹீரோவுக்கான பில்டப் காட்சிகள் இல்லை. ஆனாலும் சீனுக்கு சீன் நம்பி வந்த ரசிகனை நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார் கார்த்தி.
கார்த்தி நடந்து கொண்டே நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் என்றால், நாகர்ஜூனா ஒரே ஒரு வீல் சேரில் படம் முழுக்க உட்கார்ந்து கொண்டே நடிப்பில் மட்டுமில்லாமால் நம் இதய சிம்மாசனத்திலும் உட்கார்ந்து ஸ்கோர் செய்கிறார். இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதே துணிச்சல் தான். சபாஷ் நாகர்ஜூனா சார்…
சின்ன சின்ன பார்வைகளின் அசைவைக் கூட மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஏதோ ஒன்று கார்த்தியிடம் பிடித்துப் போகிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கையில் சந்தோஷம் தானாக வந்து விட, அந்த மாறுதல்களை மெல்ல மெல்ல காட்சிப்படுத்தி காட்டியிருப்பது ரசிகனை கட்டிப்போடும் வித்தை.
தமன்னா நாகர்ஜூனாவின் செகரெட்டரியாக வருகிறார். பெரும்பாலும் அவருக்கு குட்டைப்பாவாடை தான். அதில் பார்பி கேர்ள் போல ப்ரெஸ்ஸாகத் தெரிகிறார்.
நாகர்ஜுனா வீட்டுக்கு இண்டர்வியூவ் வரும் கார்த்தி முதல் பார்வையிலேயே தமன்னாவை ”உஷார்” பண்ண ஆரம்பிப்பது, தொடர்ந்து அவர் காதலுக்காக செய்யும் குறும்புகள் எல்லாமே காமெடி கலாட்டா.
படத்தில் காமெடியன்கள் இல்லாத குறையை கார்த்தியும், பிரகாஷ்ராஜூம் போக்கியிருக்கிறார்கள். அதிலும் ”பெயிண்ட்டிங்” சமாச்சாரத்தை வைத்து கட்டியிருக்கும் காமெடித் தோரணம் தியேட்டரில் அந்த காட்சிகள் வர ஆரம்பித்ததும் ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பிரகாஷ்ராஜூக்கான காட்சிகள் குறைவு என்றாலும் மன நிறைவு.
அம்மாவாக வரும் ஜெயசுதா, தங்கை, தம்பியாக வருபவர்கள் என எல்லா கேரக்டர்களும் மனசை விட்டகழாத கேரக்டர்கள். ஸ்ரேயாவுக்கும், அனுஷ்காவுக்கும் கெஸ்ட் ரோல்! அதுவும் பெஸ்ட் ரோல்!!
பாரீஸ் நகரத்தின் மொத்த அழகையும் தனது கேமராவில் வடித்து திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத். கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் குறைவு தான். மனசை வருடிச் செல்கிற ரம்மியமான பின்னணி இசை அபாரம்.
படம் முழுவதிலும் தெரியும் தெலுங்கு பட வாடை தெரியாமல் இருக்க, சில தெலுங்கு நடிகர்களை நடிக்கை வைப்பதை தவிர்த்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.
பரோலில் வந்த ஒரு திருடனை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ள எந்த கோடீஸ்வரன் நிஜ வாழ்க்கையில் ஒப்புக்கொள்வான் என்று தெரியவில்லை. அதிலும் இந்த காலத்தில்..!
முதல்பாதியின் பெரும்பாலான காட்சிகளில் நாகர்ஜூனாவின் பங்களாவில் கொஞ்சம் ஸ்லோமோஸனாகி விட, இரண்டாம் பாதியில் கதையை பாரீஸுக்கு நகர்த்துகிற இடத்தில் ஒரு பரபர சேஸிங் காட்சியை வைத்து விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குநர் வம்சி.
ராஜூமுருகன், சி.முருகேஷ்பாபு இருவரின் ”விட்டதை தொலைச்ச இடத்துல தான் போய்த் தேடணும்”, ”மனுஷன் போற இடத்துக்கெல்லாம் மனசு வராது” போன்ற வாழ்க்கையை அனுபவித்து எழுதப்பட்ட வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம்.
அதிகம் யோசிப்பு தேவைப்படாத மிக எளிதான கதை தான். ஆனால் அதற்காக வம்சியின் எழுத்து செய்திருக்கும் திரைக்கதை மாயாஜாலம் தான் நம் மனசுக்குள் ஒட்டிக் கொள்கிறது.
படம் முழுவதிலும் தெரியும் ரிச்னெஸ் இது ”ஏ கிளாஸ்” படமாக இருக்குமோ? என்கிற சந்தேகத்தை கிளப்பினாலும், எந்த கிளாசாக இருந்தாலும் மனசு ஒன்று தானே என்கிற பதிலும் கிடைத்து விடுகிறது வம்சியின் நேர்த்தியான திரைக்கதையில்.
கண்ணீரும், புன்னகையும் நிரம்பியது தானே முழுமையான வாழ்க்கை! அப்படி ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்த அனுபத்தை முழுமையாக தந்து நம் மனசுக்கு நெருக்கமாகி விடுகிறான் இந்த ”தோழா”!!