விஜய் – அட்லி இவர்களுடன் வில்லனாக பிரபல இயக்குநர் மகேந்திரன் அறிமுகம். இந்த காம்போவே ‘தெறி’ மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எகிறி விட்டிருந்தது.
ஒரு அரசியல்வாதிக்கும், ஒரு ஐ.பி.எஸ் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கின்ற மோதலும், அதற்கிடையே சமந்தாவுடனான விஜய்யின் காதலும், விஜம் மீதான எமி ஜாக்சனின் ஏக்கமும் தான் இந்த ‘தெறி’.
தனது ஒரே மகளான நைனிகாவுடன் கேரளாவில் பேக்கரி நடத்திக் கொண்டே அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் விஜய்.
மகளை எப்போதுமே ஸ்கூலில் லேட்டாக கொண்டு போய் விடுவதே வாடிக்கையாக வைத்திருக்கும் விஜய்க்கு பதிலாக ஒருநாள் நைனிகாவை அவளது ஸ்கூல் டீச்சரான எமி ஜாக்சனே தனது ஸ்கூட்டியில் கூட்டிப் போகிறார். போகிற இடத்தில் நைனிகாவுக்கு சிறிய விபத்து ஏற்பட்டு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்படுகிறார்.
லோக்கல் ரவுடியால் வருகிற அந்த பிரச்சனையில் அமைதியாக சென்று விட்டாலும் விடாது கருப்பாக வில்லன் கோஷ்டி விஜய்யுடம் மோதுகிறார்கள். அப்போது தான் அவர் ‘பாட்ஷா’ ரஜினி ஸ்டைலில் சாதாரண ஆள் இல்லை அவருக்கு இன்னொரு பயங்கரமான ப்ளாஷ்பேக் இருப்பது தெரிய வருகிறது.
டெல்லி நிர்பயா மாதிரி ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளம் பெண்ணை அரசியல்வாதியான மகேந்திரனின் மகன் கற்பழித்து கொன்று விட, பதிலுக்கு போலீஸ் அதிகாரியான விஜய் மகேந்திரனின் மகனை அதே பாணியில் மூன்று நாட்கள் சித்திரவதை செய்து கொன்று விடுகிறார்.
மகனை இழந்த மகேந்திரன் தனது மகனை கொன்றவனை பழி வாங்கத் துடிக்க, அது விஜய் தான் என்று தெரிய வரவும் விஜய் குடும்பத்தையே பழி வாங்குகிறார். அந்த மோதலில் விஜய் மட்டும் தன் மகளுடன் தப்பித்து விட, அதே விஜய் தான் கேரளாவில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் விஜய் என்று தெரிய வருகிறது.
மிச்சமிருக்கும் விஜய் மற்றும் அவரது மகளை போட்டுத் தள்ள மீண்டும் வருகிறார் மகேந்திரன். இந்த பழி வாங்கும் போட்டியில் கிளைமாக்ஸில் ஜெயித்தது யார்? என்பதே கதை.
பேபி….. என்று நைனிகா கூப்பிடவும் விஜய்யின் எண்ட்ரி செம மாஸ் ஆன எண்ட்ரி! தியேட்டரில் விசில் சத்தம் அடங்க இரண்டு நிமிடங்கள் ஆகிறது. மூன்று விதமான கேரக்டர்களில் தனது வழக்கமான ஆக்டிங், சுவிங்கம்மை வாயில் போடும் ஸ்டைல், ஜித்து ஜில்லாடியில் டான்ஸ், ஆக்ஷன்ஸ் என வருகிற சீன்களில் எல்லாம் படத்தின் டைட்டிலைப் போலவே ‘தெறி’க்க விடுகிறார் விஜய்!
யாருக்கும் பயப்படத நேர்மையான போலீஸ் அதிகாரி கேரக்டரில் காஸ்ட்யூமில் அப்படி ஒரு கன கச்சதம். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் மிரள வைக்கும் மிடுக்கு! ஆக்டிங், ஸ்டைல், டான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி என வருகிற சீன்களில் எல்லாம் படத்தின் டைட்டிலைப் போலவே தியேட்டரை ‘தெறி’க்க விடுகிறார் விஜய்!
இரண்டு நாயகிகளில் டாக்டராக வரும் எமி ஜாக்சன் மலையாள டீச்சராக வருகிறார். தலையில் டோப்பாவை வைத்துக் கொண்டு சோடாபொட்டிக் கண்ணாடியை போட்டுக் கொண்டு வந்தாலும் கேமரா வழியாக எமியின் அசரடிக்கும் அழகு மட்டுமே ரசிகர்களை ஈர்க்கிறது. மற்றபடி அவரது டீச்சர் கேரக்டரில் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. டாக்டராகவும், விஜய்யின் காதலி பின் மனைவியாகவும் வரும் சமந்தாவுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லி.
விஜய்யின் பக்கா ஆக்ஷன் எண்டர்டெயினர் என்பதையும் தாண்டி மாமியார் – மருமகள் உறவு, மாமனார் – மருமகன் உறவு என ஃபேமிலி ரசிகர்களையும் தியேட்டருக்கு வர வைக்கிறார் இயக்குநர் அட்லி. ராதிகா – சமந்தா உடனான உரையாடலும், விஜய் – சமந்தாவின் அப்பா உடனான உரையாடலும் நெகிழ வைக்கும் காட்சிகள்!
படத்தில் காமெடிக்கென்று தனியாக யாருமில்லை என்கிற உணர்வே தெரியாமல் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள் விஜய், சமந்தா, ராதிகா, கூடவே நைனிகாவும்! அதிலும் விஜய்யை நைனிகா கலாய்க்கிற இடங்கள் அருமை. இதுபோதாதென்று விஜய் – மொட்டை ராஜேந்திரன் கூட்டணியும் நம்மை கிச்சுகிச்சு மூட்டுகின்றன.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருக்கும் மீனாவின் மகள் நைனிகாவின் டயலாக்ஸ் டெலிவரி, கிடைக்கிற கேப்புகளில் எல்லாம் சின்ன சின்ன எக்ஸ்பிரசன்கள் மூலம் காமெடி செய்வது என செம க்யூட் கேர்ள் ஆக கலக்கியிருக்கிறார்! ( கண்டிப்பா அம்மா மாதிரியே நீயும் ஒரு ரவுண்டு வருவேம்மா…)
ஹீரோயிஸம் என்பதையும் தாண்டி குழந்தைகளையும் கவர வேண்டுமென்கிற விஜய்யின் சமீபகால படங்களில் மாற்றம் தெரிவது வரவேற்கத்தக்கது. அதற்கு வலு சேர்ப்பது போல விஜய் – நைனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைந்திருக்கிறது.
அதிகம் அலட்டல் இல்லாத வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் பிரபல இயக்குநர் மகேந்திரன். அப்பப்பா ”தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்று சொல்வதைப் போல அவர் சண்டை போடாவிட்டாலும் பார்வையும், குரலுமே டெரர் வில்லத்தனத்தின் உச்சம்!
”இந்த உலகத்துல சின்னவங்க பெரியவங்கன்னு யாருமே இல்லை, நல்லவங்க – கெட்டவங்க ரெண்டே பேரு தான்”, ”சாவுக்கு மேல உனக்கு ஒரு வலியை கொடுக்கணும்”, ”ஒரு பொண்ணுகிட்ட இன்னொரு பொண்ணு தான் மனசு விட்டுப் பேச முடியும்” என சின்ன சின்னதான வசனங்கள் மனசை ஈர்க்கின்றன.
ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவில் விஜய் படு ஸ்மார்ட்டாக தெரிகிறார். நைனிகா க்யூட் பேபியாக அசத்துகிறார். விக்கு வைத்த எமி கூட கேமராவில் அழகோ அழகு, சமந்தா கொஞ்சம் மேக்கப்பை குறைத்திருக்கலாம்!
ஜி.வி.பிரகாஷின் இசையில் பின்னணி இசை ‘ஹை ஸ்பீடு’ என்றால் பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம்! முதல் பாதி வேகமாக நகர்ந்தாலும் இடைவேளைக்கும் பிறகு சில காட்சிகளை எடிட்டர் பிரவீன் கே.எல் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
”எந்த குழந்தையும் இந்த உலகத்தில் கெட்டவனாக பிறப்பதில்லை, மீறி அவன் கெட்டவன் ஆகிறான் என்றால் அதற்கு அவனது பெற்றோர் வளர்ப்பு தான் காரணம்” என்கிற சமூக கருத்தை தான் ஆக்ஷன் ப்ளஸ் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக தந்திருக்கிறார் இயக்குநர் அட்லி.
கருத்து நன்றாக இருந்தாலும் ஏற்கனவே பார்த்த பாட்ஷா, என்னை அறிந்தால், சத்ரியன் போன்ற படங்களின் சாயலையும், வில்லனுக்கு தண்டனை கொடுக்கும் விஜய்யைப் பற்றி பல தரப்பட்டமக்களிடையே மைக்கைப் பிடித்து கருத்து கேட்டு அதை காட்டுவது போன்ற ‘ரொம்ப பழைய’ காட்சியையும் தவிர்த்து விட்டு புதிதாக யோசித்திருக்கலாமே அட்லி சார்!.
அதையும் தாண்டி விஜய் ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும், அதே சமயத்தில் குடும்பத்தோடு ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இரண்டையும் ஃபேலன்ஸ் செய்து திரைக்கதை அமைக்கப்பட்ட பக்கா மாஸ் படம் தான் இந்த ‘தெறி’.
படத்தோட கிளைமாக்ஸ்ல விஜய் ஃபேன்ஸுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு. மிஸ் பண்ணிடாதீங்கப்பா…!
தெறி – பக்கா மாஸ்!