இளையராஜா – பாலா – சசிகுமார் மூவர் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பில் ரிலீசாகியிருக்கும் படம்.
பாலாவின் படங்களுக்கென்றே ரெகுலரான ‘கலர்’ உண்டு. அதீத வன்முறை, குரூர புத்தி, ரத்தம் தெறிக்க தெறிக்க சங்கை அறுப்பது, அல்லது கடித்துக் குதறுவது என்கிற சிகப்புக் கலர் அது.
‘நான் கடவுள்’ படத்தில் தாங்கக் கூடிய அளவுக்கு காட்டியவர் இதில் இரண்டாம் பாதியில் ஈரக்குலையே நடுங்கிப் போகிற அளவுக்கு திகட்ட திகட்ட வன்முறை வெறியாட்டம் ஆடியிருக்கிறார்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கரகாட்டக்கலையை பெருமைப்படுத்தும் விதமாக படத்தை எடுத்து வைத்திருப்பார். மணக்க மணக்க ரசித்து விட்டு வரலாம் என்கிற எண்ணத்தோடு தியேட்டருக்கு போகிற ரசிகனை ரத்தச் சகதியில் குளிக்க வைத்து தலை துவட்டி அனுப்புகிறார்கள்.
முதல் பாதி பரவாயில்லை என்கிற மனநிலையில் இருக்கிற ரசிகனை இரண்டாம் பாதியில் ”இனிமே என் படத்தைப் பார்க்க வருவியா… வருவியா…” என்கிற கொலை வெறியோடு சீனுக்கு சீனுக்கு குத்திக் கிழிக்கிறார்.
தஞ்சாவூரில் பிரபலமான இசைக்கலைஞராக இருக்கும் ஜி.எம்.குமாரின் மகன் நாயகன் சசிகுமார். இவர் ஒரு கரகாட்டக்குழுவை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அதே குழுவில் கரகாட்டக்காரியாக இருப்பவர் நாயகி வரலட்சுமி.
”ஏய்ய்ய்… மாமோய்…” என்கிற வார்த்தை தான் அவளுக்கு சகலமும். ”ஏ… மாமன் பசி ஆறணும்னா நான் அம்மணமாக்கூட ஆடுவேன்” என்று சொல்கிற அளவுக்கு நெஞ்சு முழுக்க சசி மீது காதல்.
அவளை பெண் கேட்டு வருகிறார் அப்பாவி வேஷம் போடும் புதுமுகம் தயாரிப்பாளர் சுரேஷ். சசிகுமாரும் வரலட்சுமியின் வாழ்க்கை நன்றாக இருக்கட்டுமே என்கிற எண்ணத்தில் அவருக்கே முன் நின்று திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
திருமணமான கையோடு காணாமல் போன வரலட்சுமி என்ன ஆனார்? என்கிற கேள்வி ரசிகனுக்கு வருகிற நேரத்தில் அவரைத் தேடிப்போகிறார் சசிகுமார்.
அதன்பிறகு வருகிற காட்சிகள் அனைத்தும் வன்முறையின் உச்சம்! பீதியில் தலையை குணிந்து கொண்டு மொபைலில் டெம்பிள் ரன்னையோ, ஆங்கிரி பேட்டையே விளையாட ஆரம்பித்து விடுகிறான் ரசிகன்.
தலைவிரி கோலமாக வருகிறார் சசிகுமார். இரண்டாம் பாதியில் ‘நான் கடவுள்’ ஆர்யா ஸ்டைலில் ஒரு பைட் சீனில் மிரட்டும் வேகம். கரகாட்டக்குழுவை நடத்த அவர் படும் பாட்டை பார்க்கும் போது ரசிகர்களிடம் பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.
இதற்கு மேல் நடிப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற ரேஞ்சில் கரகாட்டக்காரியாக வரும் வரலட்சுமி, ஆடுவதில் மட்டுமல்ல… தன்னை தப்பான எண்ணத்தோடு தொட வருகிற ஆண்களுக்கும் கொடுக்கிற அடி ஒவ்வொன்றும் இடி தான்.
கரகாட்ட சீனைக் காட்டும் போதெல்லாம் மறக்காமல் வரலட்சுமியின் தொப்புளை ஸ்க்ரீன் முழுவதிலும் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் செழியன். மற்றபடி சிலாகித்துச் சொல்ல ஒன்றுமில்லை.
வில்லனாக வருகிற தயாரிப்பாளர் சுரேஷூக்கு இரண்டு விதமான கேரக்டர்கள். முதலில் அப்பாவி போல அடங்கி வரலட்சுமியை கைபிடிக்க துரத்துவதும், கழுத்தில் தாலி கட்டி முதலிரவு அறைக்குள் கூட்டிச் சென்றவுடன் தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பிப்பதுமாக ஆக்டிங்கில் அப்ளாஸ் வாங்குகிறார்.
திறமை இருக்கும் இடத்தில் கொஞ்சம் திமிர் இருப்பது இயற்கை தான். ஆனால் ஜி.எம்.குமாரோ எப்போதுமே திமிர்த்தனத்துடன் தான் கத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய திறமைக்கு ஒரு ஒரு பாடலை போட்டு அத்தோடு ஓரங்கட்டி விடுகிறார்கள்.
வரலட்சுமியுடன் கரகாட்டக்காரிகளாக வரும் சக நடிகைகள் ஆடுகிற ஆட்டத்தில் சகலமும் குலுங்குகிறது. ஆனால் யார் ரசிப்பது..?
இந்த வன்முறைகளுக்கு நடுவே இசைஞானியின் பின்னணி இசையும் பாடல்களும் தான் படம் பார்க்கப்போகிற ரசிகனுக்கு ஒரே ஒரு ஆறுதல்!
காது கேட்கக் கூசும் கெட்ட வார்த்தைகள் வசனங்களாக படத்தில் ஆங்காங்கே சர்வசாதரணமாக ஒலிக்கிறது.
பெண்களும், குழந்தைகளும் தியேட்டர்களுக்கே வருவதில்லை என்று குறைபட்டுக் கொள்கிற தயாரிப்பாளர்கள் தான் இந்தமாதிரி அபத்தங்களையும் தயாரிக்க முன் வருகிறார்கள்.
இப்படிப்பட்ட படங்களை எடுத்தால் எப்படி பெண்கள் கூட்டம் தியேட்டர் பக்கம் வருவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
கரகாட்டக்கலைஞர்களின் வலிகளையும், வேதனைகளையும் காட்ட நினைத்த பாலா இரண்டாம் பாதியில் அதிலிருந்து விலகி தனது வழக்கமான பாதையில் பயணிப்பது தான் வேதனையிலும் வேதனை. அந்த வகையில் நட்சத்திரங்களிடம் நடிப்பை பிழிந்தெடுத்தது மட்டுமே புதுசு. மத்ததெல்லாம் பாலாவின் பழைய ‘டச்’ தான்.