மதுரை, மீனாட்சி மிஷின் மருத்துவமனை மற்றும் தஞ்சை, மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.எஸ்.குருசங்கர் அவர்கள் சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள தர்மதுரை திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் டாக்டர். குருசங்கர் அவர்கள் கூறும்போது மருத்துவர்களின் உயர் நோக்கங்களையும், மருத்துவத்துறையின் உண்மைகளையும் இத்திரைப்படம் எடுத்துக்காட்டியது மட்டுமல்லாமல் கிராமங்களில் மருத்துவர்களின் தேவைகளையும், எடுத்துக்கூறும் விதமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.
இயக்குனர் சீனுராமசாமியின் ஒவ்வொரு படைப்பும் உயர்நெறிகளை கொண்டதாகவே உள்ளது. அதுபோல் தர்மதுரை திரைப்படம் மூலமாக ஒரு ஆசிரியர் எப்படி தனது மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதையும், மருத்துவம் பயின்ற மாணவர்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதைவிட இந்தியாவில் பணிபுரிதலின் முக்கியத்துவத்தையும் மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். கிராமத்திலும், கிராமம் சார்ந்த பகுதிகளிலும் மருத்துவர்களுக்கு கிடைக்கும் மதிப்பை எடுத்துக்கூறி கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மருத்துவர்கள் அங்கே வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக பதித்துள்ளார். மருத்துவரின் சொந்த விருப்பு வெறுப்புகளை தவிர்த்து பகையாளியாக இருந்தாலும் அவருக்கும் மருத்துவம் பார்த்து உயிரை காப்பாற்றக்கூடிய உயர்ந்த பணி மருத்துவ பணி என்பதையும் மிக தெளிவாக உணர்த்தியுள்ளார்.
இத்திரைப்படம் என் போன்ற மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியும் திரைத்துறை மேல் நம்பிக்கையும் வளர செய்துள்ளது. இந்த உண்மையான முயற்சிக்கு மருத்துவத்துறை சார்பாக தர்மதுரை படக்குழுவினருக்கு எனது ஆதரவையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எல்லா மருத்துவர்களும் , மருத்துவத்துறை மாணவர்களும் மற்றும் செவிலியர்களும் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்.