தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளிவந்த ‘தெறி’ திரைப்படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில்.
செங்கல்பட்டு ஏரியாவில் படம் முழுமையாக வெளியாகவில்லை என்றதும் படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேச ஆரம்பித்த சிலர், திங்கள் கிழமை கிடைத்த வரவேற்பைப் பார்த்து வாயை மூடிக் கொண்டார்கள்.
செங்கல்பட்டு ஏரியாவில் தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் ‘தெறி’ படத்தின் வெளியீட்டைத் தடுத்துவிட்டார் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு குற்றம் சாட்டினார்.
தன்னுடைய வீட்டு திருமணத்திற்கு விஜய், ரஜினிகாந்தை அழைத்திருந்தார். ஆனால், அவர்கள் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதை மனதில் வைத்துத்தான் இப்போது பிரச்சனை செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
இதனிடையே, ‘தெறி’ படத்திற்கு நேற்றும், இன்றும் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் தொடர்ந்து திரண்டு வருவதால் படம் விரைவிலேயே 100 கோடியைக் கடந்து விடும் என்கிறார்கள்.
முதல் வார இறுதி முடிவில் தமிழ்நாட்டில் 40 கோடியும், மற்ற இந்திய மாநிலங்களில் 16 கோடி ரூபாயும், அமெரிக்காவில் 6 கோடியும், யுகே-வில் 2.66 கோடியும், ஆஸ்திரேலியாவில் 1.57 கோடியும், மற்ற வெளிநாடுகளில் 23 கோடி ரூபாயும் வசூலித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
மொத்தமாக 89 கோடி ரூபாயை ஞாயிறு முடிய வசூலித்திருந்தது. திங்கள் கிழமையும், இன்று செவ்வாய்க் கிழமையும் ஆன வசூலையும் சேர்த்தால் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டது என ‘தெறி’ படம் 100 கோடி கிளப்பில் சேர்ந்தது பற்றிய செய்திகள் நாளை பரவ ஆரம்பிக்கும்.
வெளிநாடுகளில் ஷாரூக்கான் நடித்து வெளியான ‘ஃபேன்’ படத்தை விட ‘தெறி’ படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
விஜய் நடித்து வெளிவந்த படங்களிலேயே வசூலில் ‘தெறி’ புதிய சாதனையைப் படைக்கும் என்கிறார்கள்.