அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகர் இயக்கத்தில் கலையரசன், மெட்ராஸ் ஜானி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் இளம் டெக்னிஷியன்களின் கூட்டணியில் வெளிவந்துள்ள படம் ‘டார்லிங் 2’.
கதைப்படி, ஐந்தாறு இளம் வயது நண்பர்கள். அதில் இருவர் சகோதரர்கள். அவர்களில் ஒருத்தரின் மதம் மாறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த சகோதரர் தற்கொலை செய்து கொள்கிறார். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்து எஞ்சிய நண்பர்கள் வழக்கம் போல வால்பாறைக்கு ட்ரிப் போகின்றனர்.
அங்கு சென்று ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்குகின்றனர். அந்த கெஸ்ட் ஹவுஸில் இறந்து போன நண்பர் ஆவியாக வருகிறார். வந்தவர், அவர்களில் ஒருத்தரின் உடம்புக்குள் புகுந்து கொண்டு அவர்களை படாத பாடு படுத்துகிறார். கூடவே அவரது காதலியும் சேர்ந்துகொள்கிறார். அவர்களிடமிருந்து ஐந்து நண்பர்களும் தப்பி பிழைத்தார்களா? இல்லையா..? எதற்காக இறந்து போன நண்பர் ஆவியாக வந்து அவர்களை துரத்த வேண்டும்..? என்பதே டார்லிங் 2 படத்தின் கதையும் களமும்.
கலையரசன், ரமீஸ் ராஜா, காளி வெங்கட், ராம்தாஸ் உட்பட அனைவருமே யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ரமீஸின் நடிப்பு மிரட்டல். கலையரசனும் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார்.
நாயகியாக மாயா பல பெரிய படங்களில் நாம் ஹீரோயின்களுக்கு தோழியாக பார்த்துப் பழகிய முகம் தான் என்றாலும் டார்லிங் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படத்தில் அழகாக இருக்கிறார். அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு ஒளிரும் ஓவியபதிவு. பேய் பயமுறுத்தல் காட்சிகளில் ஒவர் ஆட்டம் போட்டிருப்பது ரசிகனை மிரள செய்கிறது. ரதனின் பின்னணி இசை பேயை விட அதிகம் பயமுறுத்துகிறது.
விளையாட்டாக நாம் செய்யும் சில விஷயங்கள் ஒருவரின் வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கின்றது என்ற ஒரு சின்ன லைனை எடுத்துகொண்டு 2 மணி நேரம் படமாக எடுத்துள்ளார் இயக்குநர் சதீஷ். படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் டெக்னிக்கலாக மிரட்டியிருக்கிறார். ஆயிரம் பேய் படங்கள் வந்தாலும் திகில் உணர்வுகளை சில படங்கள் தான் தருகின்றன. அதில் இந்த டார்லிங் 2வும் ஒன்று.