‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிபிராஜின் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.
வழக்கமான பேய்ப்படங்களுக்கே உரிய காமெடி த்ரில்லர் படமாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் தரணீதரன்.
சேலத்துக்கு அருகில் இருக்கிற அயன்புரம் என்கிற கிராத்தில் ஜாக்சன் என்கிற பேயின் இம்சை தாங்கவில்லை என்று போலீசுக்கு புகார் போகிறது.
உண்மையிலேயே கிராமத்து மக்களின் நிம்மதியைக் கெடுக்கும் ஜாக்சன் என்பது பேய் தானா? அல்லது வேறு எவனாவது அந்த பெயரில் மக்களை பயமுறுத்துகிறானா? இல்லையா என்பதை கண்டுபிடிக்க சென்னையிலிருந்து கிளம்புகிறார் போலீஸ் சிபிராஜ்.
போன இடத்தில் கிராமத்து தேவதை பிந்து மாதவியை காதலிக்க, நேராக அவருடைய அப்பாவிடம் போய் பெண் கேட்கிறார்.
அந்த நேரம் பார்த்து முறைமாமன் நான் இருக்கும் போது வெளியில இருந்து வந்தவனுக்கு பொண்ணை கட்டிக் கொடுத்துடுவீங்களா..? என்று எண்ட்ரி கொடுக்கிறார் கருணாகரன்.
ஒரு பெண்ணுக்கு எப்படி இருவரை கட்டி வைப்பது? என்று யோசிக்கும் மாமனார் ஊரையே மிரட்டிக் கொண்டிருக்கும் ஜாக்சன் பங்களாவில் யார் தொடர்ந்து ஒரு வாரம் தங்கி விட்டு உயிரோடு வருகிறார்களோ? அவருக்குத்தான் என் பொண்ணைக் கொடுப்பேன் என்கிறார்.
சவாலை ஏற்றுக்கொண்ட சிபிராஜ் – கருணாகரன் இருவரும் பங்களாவுக்குள் செல்கிறார்கள். போட்டியில் ஜெயித்தது யார்? பிந்துமாதவியை லவ்விக் கொண்டு போனது யார்? ஜாக்சன் என்பது பேய் தானா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
சந்திரமுகி படத்தில் வருவது போல திகிலூட்டும் பங்களாவிலேயே முக்கால்வாசிப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.
சிபிராஜூக்கு ஸ்மோக் எபெக்ட்டில் எண்ட்ரி கொடுத்தாலும் படத்தை அதே சீரியஸோடு கொண்டு செல்லாமல் காமெடியாகக் கொண்டு செல்வது ரசிக்க வைக்கிறது.
சிபிராஜ் – யோகிபாபு காம்போவின் காமெடி முதல் பாதியில் நன்றாக ஒர்க் – அவுட் ஆகியிருக்கிறது. இரண்டாம் பாதியில் அந்த வேலையை கருணாகரன் தொடர்கிறார். வந்து போகிற காட்சிகளில் எல்லாம் யோகிபாபுவும், கருணாகரனும் கொடுக்கும் டைமிங் கவுண்டர்கள் கலகலப்புக்கு கூடுதல் கேரண்டி.
நாயகியாக வரும் பிந்து மாதவிக்கு குறிப்பிட்டு சொல்கிற அளவுக்கு படத்தில் காட்சிகள் இல்லை.
முதல்பாதி காமெடி, பிந்துமாதவியுடன் ரொமான்ஸ் என்று நகரும் காட்சிகள் இரண்டாம் பாதி முழுவதும் சத்யராஜின் ப்ளாஸ்பேக் காட்சிகளுக்கு சென்று விடுகிறது.
அதில் வருகிற மொட்டை ராஜேந்திரன் சத்யராஜ் கூடவே வரும் அடியாட்கள் என எல்லா கேரக்டரும் காமெடி செய்ய முயற்சித்தாலும் எதுவுமே மனம் விட்டு சிரிக்க முடியாமல் போவது திரைக்கதையின் தொய்வு.
சித்தார்த் விபினின் பின்னணி இசை பயமுறுத்துவதில் குறை வைக்கவில்லை.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்ட கதையை சம கால கதையோடு கலந்து ஒரு புதுவிதமான பேய்ப்படத்தை தர நினைத்த இயக்குநர் அதற்கான சுவாரஷ்யங்களை படத்தில் அதிகப்படுத்தாமல் விட்டது பெரும் குறை.
இரவு 9 மணி ஆனதும் பங்களாவின் மேல் கிராபிக்ஸில் பிரிட்டிஸ் கொடியை பறக்க விடுவது, அந்த காலகட்ட மனிதர்களுக்கு மேக்கப் போடுவது, என தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அதேபோல படத்தில் பாராட்ட வேண்டிய இரண்டு பேர் ஒளிப்பதிவாளர் யுவாவும், ஆர்ட் டைரக்டர் டி.என். கபிலனும். இருவருக்கும் டயர்ட் ஆகிற அளவுக்கு படத்தில் எக்கச்சக்க வேலையை கொடுத்திருக்கிறார்கள்.
பேய் படம் என்பது சரிதான். அதற்காக பகல் காட்சிகளை கூட மணிரத்னம் படங்கள் மாதிரி லேசான இருட்டில் படமாக்க வேண்டியதன் அவசியம் என்ன?
முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் அப்படியே சுருங்க ஆரம்பித்து விடுகிறது. குறிப்பாக ‘அவர்கள் ஜாக்சனின் உளவாளிகள்’ என்று திரும்ப திரும்ப வரும் ரிபீட் காட்சிகளை கத்தரி போட்டிருக்கலாம்.
வழக்கமான பழி வாங்கும் பேய்ப்படம் என்றாலும் அதை சுதந்திர காலத்துக்கு முந்தையது என்று புதிதாக யோசித்த வகையில் இயக்குநர் தரணீதரனுக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.
ஜாக்சன் துரை – கம்பீரம் கம்மி!