சுமார் 10 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், இந்நாள் வரை அனைவராலும் விரும்பத்தக்க படமாக இருக்குமானால் அது கண்டிப்பாக வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’ ஆகத் தான் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம், கிரிக்கெட் மற்றும் நட்பு என்னும் இரண்டு மிக முக்கிய தூண்களை ஒன்றே சேர்த்து, அதனை பார்வையாளர்களின் நாடி நரம்புகளில் செலுத்திய இயக்குனர் வெங்கட் பிரபு தான். அவர் கையாண்ட இரண்டு தூண்களும் தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் அழியா புகழ் கொண்டது. அதனுடைய பிரதிபலிப்பு தான், இந்நாள் வரை நம் யாராலும் சென்னை 28 கதையை மறக்க இயலாதது. ஒரு சிறு குழந்தையிடம் கேட்டால் கூட, பத்து நண்பர்களின் வாழ்க்கையும், கிரிக்கெட் மேட்ச்சும் என படத்தின் கதையை பளிச்சென்று சொல்லும். அந்த அளவிற்கு அதனுடைய தாக்கம் மக்களின் நெஞ்சில் பதிந்துள்ளது.
தற்போது, அந்த படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த தகவல் அறிந்ததுமே, லட்சகணக்கான வாழ்த்துகளும், வரவேற்புகளும் சமூக வலைத்தளங்களில் குவிந்தன. முதல் பாகத்தில் இருந்த 10 நண்பர்களும் இப்பொழுது ஒவ்வொரு மூலையில் திருமணமாகி சென்று விட்டனர். 10 வருடத்திற்கு பிறகு நடுத்தர வயதினை நெருங்கி விட்ட இந்த R A புறம் ஷார்க்ஸ் மீண்டும் ஒன்று சேர்ந்தால்?? யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அற்புதமாக உருவாகி கொண்டிருக்கிறது சென்னை 28 திரைப்படத்தின் இரண்டாம் பாகம். நிச்சயமாக இந்த இன்னிங்க்சில் வெங்கட் பிரபு இரட்டை சதம் அடிப்பது உறுதி.