'தால் மிலாலே து ' இந்திய சுதந்திரதின சமர்ப்பணமாக ஒரு இந்திய தேச வீடியோ ஆல்பம்!
இந்திய சுதந்திரதின சமர்ப்பணமாக ஒரு இந்திய தேச வீடியோ ஆல்பம் வருகிற 15.08.2016 சுதந்திரதினத்தன்று வெளியாகவுள்ளது. தமிழரான குமார் நாராயணன் இசையமைத்து தனது சாய்ன் ட்யூன்ஸ் ஸ்டுடியோ (Saintunes Studio) சார்பில் இதைத் தயாரித்துள்ளார்.இந்தியில் 'கபாலி'க்கு பாடல் எழுதிய கவிஞர் உதய்குமார் 'தால் மிலாலே து ' என்கிற இப்பாடலை எழுதியுள்ளார்.
பாடல் என்ன சொல்கிறது?
நாங்கள் எங்கள் கௌரவம் ,சந்தோஷம்,வாழ்வு எல்லாவற்றையும்
தேசத்துக்காக தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் ஆசைகளை-விருப்பங்களைத் துறந்த சக்தியாக
வந்து கொண்டிருக்கிறோம்.
இந்த மூவண்ணக்கொடி எங்கள் தைரியத்தைத் திறக்கிறது.
எங்களுக்குள் அணைந்த தீயையும் தகிக்க வைக்கிறது.
எங்களுக்குள் பெருமை சுடர்விடுகிறது.
நாட்டுக்காக ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து இணைவோம்; ஒன்று படுவோம்!
தேச முன்னேற்றத்துக்கான புதிய பாதை நோக்கி அணி வகுப்போம்!
புதிய பாதைகள் முடிவற்றற வாய்ப்புகளைத் திறந்து வைக்கும்.
நம் ஒற்றுமைச்சங்கிலி அறுபடாமல் காப்போம்.
தேசத்தின் தேவையான இளைஞர் சக்தி என்றும் இணைந்திருக்க வேண்டும்.!
நாம் நம் நம்பிக்கை,ஒற்றுமை,நல்லியல்புகளால் என்றும் இணைவோம்.
வேறுபாடுகளை வேரறுத்துப் புதைப்போம்.
எங்கள் சுயமான அளப்பரிய சக்தியுடன் எங்கள் தேசக்கொடி பெருமையுடன் வானில் உயரே சிறகடித்துப் பறக்கிறது.
சமாதானம் ,சந்தோஷம் மற்றும் சுபிட்சத்தின் தூதுவனாக அது பறக்கிறது.
தேச முன்னேற்றத்துக்கான புதிய பாதை நோக்கி அணி வகுப்போம்....
இப்படிப் போகிறது அந்தப்பாடலின் சாராம்சம்!
சுதந்திர தினத்துக்காக உருவாகியுள்ள இந்தப்பாடல் வீடியோ ஆல்பம், முழுக்க முழுக்க வணிக நோக்கமற்ற ஒரு முயற்சியாகும். இது தேசத்துக்கான சுதந்திரதின சமர்ப்பணம்.
இதைத் தேசப் பற்றுக்கொண்ட யாரும் பாட, ஆட ,பயன்படுத்த ,காட்சிப்படுத்த, வெளியிட, பிரசுரிக்க ,ஒளிபரப்ப முழு சுதந்திரம்
கொடுத்துள்ளதுடன் எந்தக் காப்புரிமையுயும் இதில் குறுக்கே நிற்காது என்று இதை உருவாக்கியுள்ள சாய்ன் ட்யூன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆல்பத்தை இசையமைத்து சாய்ன்ட்யூன்ஸ் ஸ்டுடியோ (Saintunes Studio) நிறுவனம் சார்பில் ஆர்.குமார் நாராயணன் தயாரித்துள்ளார் . பாடியுள்ளவர்கள் குமார் நாராயணன்,மனோ,பியுஷ்,ஸ்ரீராம்.