7.9 C
New York
Thursday, November 14, 2024

Buy now

spot_img

“சிவாவுக்கு உற்சாகம் கொடுத்து ஆடவைத்தோம்” ; ‘அட்ரா மச்சான் விசிலு’ ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா..!

வரும் ஜூலை-7ஆம் தேதி சிவா-பவர்ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் வெளியாக இருக்கிறது. திரைவண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளவர் காசி விஸ்வா.. இயக்குனர் ராம.நாராயணனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக விளங்கிய என்.கே.விஸ்வநாதனிடம் சீடராக இருந்து தொழில் கற்றவர்.

அதுமட்டுமல்ல.. சத்யராஜ்-சிபிராஜ் இணைந்து நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ படம் உட்பட சுமார் பதினைந்து படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் தான் பணியாற்றிய அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் காசி விஸ்வா.

“நானும் இயக்குனர் திரைவண்ணனும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக நண்பர்கள்.. அவர் தனது முதல் படமான ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தை இயக்கியபோது நான் வேறு படங்களில் பணியாற்றியதால் அந்தப்படத்தில் அவருடன் இணைய முடியவில்லை.. ஆனால் இந்த ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தே படத்தை துவங்கி, இதோ வெற்றிகரமாக ரிலீஸ் வரை கொண்டுவந்துவிட்டோம்.

இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கோபியை பொறுத்தவரை, ஒளிப்பதிவு தொடர்பாக நாங்கள் என்னென்ன சாதனங்களை கேட்டோமோ அவை அனைத்தையும் எந்த கேள்வியும் கேட்காமல், எந்த தடையும் இல்லாமல் வரவழைத்து கொடுத்தார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சுமார் 50 நாட்கள் நடைபெற்றது. பட்டுக்கோட்டை தயாரிப்பாளரின் சொந்த ஊர் என்பதால் அங்கே நாங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் எந்தவித சிரமமும் இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

சிவாவும் பவர்ஸ்டாரும் ஸ்பாட்டில் இருந்தாலே ஒரே கலாட்டாவாக இருக்கும். அதிலும் இருவர் நடிக்கும் காட்சியை சில சமயம் படமாக்கும் போதும், பவர்ஸ்டார் ‘பஞ்ச்’ டயலாக்குகளை பேசும் போதும் என்னை அறியாமலேயே சிரித்து அதனால் கேமரா ஷேக்காகி, என்னாலேயே சிலமுறை ரீடேக்கான சம்பவங்களும் உண்டு.

சிவா பொதுவாக நடனமாடுவது என்றால் கொஞ்சம் கூச்சப்படுவார்.. ஆனால் இந்தப்படத்தில் நாங்கள் அனைவரும் அவரை தைரியப்படுத்தி ஊக்கம் கொடுத்ததில் முந்தைய படங்களைவிட இதில் அவரது நடனம் கவனிக்கும்படி இருக்கும். பவர்ஸ்டார் நடனமும் இன்னொரு பக்கம் பட்டையை கிளப்பும்.

ஒரு ஒளிப்பதிவாளருக்கு இரண்டு களங்கள் உண்டு.. ஒன்று கேமாராவின் பங்களிப்பால் மட்டுமே ஒரு படத்தை உயர்த்திப்பிடிக்க கூடியது.. இன்னொன்று இயக்குனர் நினைத்ததை சாத்தியமாக்க அவருடன் இணைந்து சமமாக பயணிப்பது.. இதில் ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் இரண்டாம் வகை. இயக்குனர் திரைவண்ணனை பொறுத்தவரை தான் நினைத்ததை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். அதற்கு உறுதுணையாக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி படம் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்துள்ளது.. ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்தப்படம் அமையும்” என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE