பொதுவாக ஹீரோயிசம், அதிரடி, செண்டிமெண்ட் என இருந்த தமிழ் சினிமாவை, 'பசங்க' திரைப்படம் மூலம் வேறொரு கோணத்திற்கு எடுத்து சென்றவர் இயக்குனர் பாண்டிராஜ் . தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையம்சங்களை கொண்டு வெற்றி கண்ட இயக்குனரான இவரத்துப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் , வணிக ரீதியாகவும் பெரும் வரவேற்ப்பு எப்போதும் உண்டு. சிம்பு - நயன்தாரா நடிப்பில் மே 27 ஆம் தேதி வெளிவரும் 'இது நம்ம ஆளு' திரைப்படம் இவரது மகுடத்துக்கு மணி சேர்க்கும் படமாக இருக்கும் என்று திரை வணிகம் கட்டியம் கூறுகிறது.
"மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். விடலை பருவத்திலோ, பணிபுரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ, ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டென்று உரசி போயிருக்கும். சட்டென்று பூக்கும் பூவைப்போல, மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. அந்த காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் இது நம்ம ஆளு. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த 50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம். படத்தில் நாயகன் - நாயகியாக நடித்த சிம்பு - நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. மொத்தத்தில் சிம்பு - நயன்தாராவின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை; பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்" என்று கூறினார் இயக்குனர் பாண்டிராஜ்.
படத்தின் காமெடி கூட்டணி பற்றி அவர் கூறுகையில், "இதுவரை சிம்பு - சந்தானம் கூட்டணியில் உருவான காமெடி காட்சிகள் அனைத்தும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து, அவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவை. அதே போல் இந்த படத்தில் சிம்புவுடன் புதிதாக இணையும் பரோட்டா சூரியின் காமெடியும், ரசிகர்களின் கைத்தட்டல்களுக்கு காரணமாக அமையும். சிறப்பு தோற்றமாக சந்தானம் வரும் மூன்று சீன்களிலும் சிரிப்பு கரைப்புரண்டு ஓடும். மொத்தத்தில், குறைந்தது 100 தடவையாது ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு, தற்போது இது நம்ம ஆளு திரைப்படம் மூலம் நிஜமாகப்போகிறது" என்கிறார் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ்.