சென்னை,மே01 (டி.என்.எஸ்) அழகு, கற்பனை, அரிதாரம், பிரம்மாண்டம் என்று பொய்யான விஷயங்களை தவிர்த்துவிட்டு, மனித வாழ்க்கையை அதிலும், சினிமாக்காரர்கள் சொல்ல மறந்த மனிதர்களின் வாழ்க்கையை சொல்லியிருக்கும் படமே ‘சாலையோரம்’.
துப்புரவு பணி செய்யும் தொழிலாளியான நாயகன் ராஜ், பிள்ளாஸ்டிக் கழிவுகளால், பல ஆண்டுகளாக குவிந்து வரும் குப்பைகளை அகற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாயகி ஷெரினாவுக்கு உதவி செய்கிறார். பணக்கார பெண்ணாக இருந்தாலும், அனைவருடனும் பாகுபாடு இன்றி பழகும் ஷெரினாவை ராஜ் ஒரு தலையாக காதலிக்க, ராஜியை அவரது குடிசைப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்.
ராஜியின் காதல் விவகாரம் தெரியாத ஷெரினாவோ தனது ஆராய்ச்சியில் முழு கவனத்தை செலுத்தி வர, அவரது ஆராய்ச்சியை வெளிநாட்டுக்கு விற்று பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார் அவரது கார்டியனான பாண்டியராஜன்.
இதற்கிடையில், ராஜியின் காதல் விவகாரத்தை ஷெரினா தெரிந்துக்கொள்ள, அதே சமயம் தனது ஆராய்ச்சியை தனது கார்டியன் பணத்திற்காக அபகரிப்பதையும் அறிந்துக்கொள்கிறார். இறுதியில் தனது ஆராய்ச்சியை பாண்டியராஜனிடம் இருந்து காப்பாற்றினாரா இல்லையா, ராஜியின் காதலை ஏற்றாரா அல்லது ராஜு, தன்னை காதலிக்கும் பெண்ணை ஏற்றாரா, என்பதே மீதிக்கதை.
நாயகன் ராஜ், நாயகி ஷெரீனா இருவரும் புதுமுகங்களாக இருந்தாலும், தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். நிஜமான குப்பை மேட்டி டூயட் பாடிய இவர்களுக்கு ஆயிரம் பொக்கே கொடுத்தாலும் போதாது.
சிரிப்புக்கு சிங்கம் புலி உத்தரவாதம் கொடுக்க, முத்துக்காளை குணச்சித்திர நடிப்பில் அசத்துகிறார். வில்லனாக நடித்துள்ள பாண்டியராஜன் உள்ளிட்ட படத்தில் நடித்த சில முகங்கள் புதிதாக இருந்தாலும், தங்களது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
மரியா மனோகரின் பின்னணி இசையும், எஸ்.சேதுராமின் இசையில் பாடல்களும் கேட்கும் ரகங்கள். தினேஷ் ஸ்ரீநிவாஸின் கேமரா குப்பை மேட்டை சுவிட்சர்லாந்து பணி மலையாக பீல் பண்ணி படமாக்கியிருக்கிறது.
காதல், காமெடி, ஆக்ஷன் என்று ரெகுலர் கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இருந்தாலும், அவற்றை வைத்து சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ரொம்ப நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.மூர்த்திக்கண்ணன்.
சினிமா என்ற மாபெரும் ஊடகத்தில், சமூக அக்கறையுடன் படம் எடுக்கும் ஒரு சில இயக்குநர்களின் பட்டியலில் இயக்குநர் கே.மூர்த்திகண்னனும் முக்கிய இடத்தை வாங்கிக் கொடுக்கும் இந்த ‘சாலையோரம்’.