16.2 C
New York
Friday, October 11, 2024

Buy now

spot_img

சவுகார்பேட்டை – விமர்சனம்

எப்படியோ வந்திருக்க வேண்டிய ஸ்ரீகாந்த். சில பல மொக்கைப் படங்களுக்கு கால்ஷூட்டைக் கொடுத்ததன் வினையாக இன்றைக்கும் முன்னணி ஹீரோக்கள் வரிசைக்கு இடம் பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

சொந்தமாக எடுத்த ‘நம்பியார்’ ரிலீஸ் தேதிக்கு நாள் பார்த்துக் கொண்டிருக்க, தேடி வந்த ‘சவுகார் பேட்டை’யில் புதிய பரிமாணம் காட்ட முயற்சித்திருக்கிறார்.

தமிழ்சினிமாவை மாசக்கணக்கில் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பேய்களின் அட்டகாச ஆட்டத்தில் இன்னொரு வரவு தான் இந்த ‘சவுகார் பேட்டை’.

பள்ளிக்கூட வயசிலிருந்தே காதலிக்கும் ஸ்ரீகாந்த்தும், லட்சுமிராயும் வளர்ந்து வயசுக்கு வந்தவுடன் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள சொந்த ஊருக்கு வருகிறார்கள்.

வந்த இடத்தில் ஸ்ரீகாந்த்தின் அப்பா தலைவாசல் விஜய் சவுகார்பேட்டை சேட்டான கோத்ரா சுமனிடம் பைனான்ஸ் வாங்கி அதை கட்ட முடியாமல் திணற, அதற்கு வட்டி மேல் வட்டியாக குட்டி போட, கொடுத்த பணத்துக்கு தலைவாசல் விஜய்யின் பங்களாவை அபகரிக்க வருகிறார். வந்த இடத்தில் ஸ்ரீகாந்த் உட்பட அத்தனை பேரும் முரண்டு பிடிக்க, குடும்பத்தோடு காலி செய்கிறார். இதில் ஹீரோ ஸ்ரீகாந்த்- ஹீரோயின் லட்சுமிராயை மட்டும் அந்த பங்களாவில் குழி தோண்டி உயிரோடு புதைத்து விடுகிறார்.

தங்கள் நிறைவேறா ஆசையுடன் இறந்து போகும் ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி ஜோடி ஆவியான பிறகும் கொலை வெறிபிடித்து தங்கள் குடும்பத்தை நிர்மூலமாக்கிய சுமன் சேட்டுக் குடும்பத்தை பழி வாங்கப் புறப்படுகிறார்கள். அது நிறைவேறியதா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

இதற்கிடையே ப்ளாஸ்பேக்காக அண்ணன் ஸ்ரீகாந்த் தம்பி ஸ்ரீகாந்த்துக்கு நிச்சயம் செய்த ராய் லட்சுமியை அனுபவிக்கத் துடிக்க, அதனால் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு அகோரியாகி விடுகிறார். லட்சுமிராய் ஆவியான பிறகும் அவர் மீதான ஆசை அடங்காமல் காத்துக் கொண்டிருக்கும் அண்ணன் ஸ்ரீகாந்த் கிளைமாக்ஸில் தம்பி ஸ்ரீகாந்த்துடன் சண்டை போட்டு ராய் லட்சுமியை அனுபவிக்கத் துடிக்கிறார்.

உடலே இல்லாத ராய் லட்சுமிக்காக நடந்த சண்டையில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பது இன்னொரு கிளைமாக்ஸ். அதோடு இரண்டாம் பாகம் விரைவில் என்கிற டைட்டில் கார்டுடன் படத்தை முடிக்கிறார்கள்.

முந்தைய படங்களில் ரொமான்ஸ் நாயகனாக பார்த்து பழகிய ஸ்ரீகாந்த் இந்தப் படத்தில் தனது இன்னொரு பரிமாணத்தைக் காட்ட கடும் உழைப்பை போட்டிருக்கிறார். மீசை இருந்தால் அண்ணன், மீசை இல்லையென்றால் தம்பி என கேரக்டரில் வித்தியாசம் காட்டுகிறார். என்னதான் அவர் காட்டுக்கத்தல் கத்தி கர்ஜித்தாலும் முகத்தில் எப்போதுமே ஒட்டிக் கொண்டிருக்கும் அமுல்பேபி வாசம் அகழாதது பெரும் குறை. இருந்தாலும் அகோரியாக பூஜபலத்தை அவர் காட்டும் விதம் அபாரம்.

பாழாப்போன இந்த பேய்ப்பட சீசனில் இருக்கிற அத்தனை அழகான ராட்சஸிகளையும் பேய்களாகவும், பிசாசுகளாகவும், சூனியக்காரிகளாகவும் நடமாட விட ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். அந்த வரிசையில் இப்போ ராய் லட்சுமியும்! அரேபியக் குதிரை மாதிரி இருக்கும் லட்சுமிராயை இவ்வளவு அலங்கோலமாகவா காட்டுவது? வெள்ளை விழுந்த கண்களை வைத்துக் கொண்டு அவர் காட்டும் தொப்புள் கவர்ச்சியை யார் ரசிப்பது?

பருத்தி வீரனில் பலே சண்டியராக வந்த சரவணனை இதில் காமெடி பீஸ் ஆக்கியிருக்கிறார்கள். கூடவே சிங்கம்புலி, மனோபாலா, பவர் ஸ்டார் சீனிவாசன், கஞ்சா கருப்பு என நான்கைந்து காமெடி நடிகர்கள் இருந்தாலும் சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. ஆனால் அந்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார் வில்லனாக வரும் சுமன். ‘படிக்காதவன்’ படத்தில் வெள்ளை முடி விக்குடன் வந்து கிச்சு கிச்சு மூட்டிய விவேக்கின் விக்கில் வந்து வில்லத்தனம் காட்டுகிறார் சுமன். அவரை பார்க்கும் போதெல்லாம் பயம் வருவதற்குப் பதில் கெக்கே… பிக்கே… சிரிப்பு தான் வருகிறது.

நாய்ப்படம் எடுப்பதை விட பேய்ப்படம் எடுப்பது ரொம்ப ரொம்ப ஈஸி என்பதை இப்படத்தின் இயக்குநர் வி.சி.வடிவுடையானின் சிம்பிளான திரைக்கதை சொல்லி விடுகிறது.

வழக்கமான பேய்ப்படத்துக்குரிய பில்லி, சூனியம், காட்டுக்கத்தல், மிரள வைக்கும் மேக்கப்புகள், கொடூரமான க்ளோசப் முக பாவனைகள் என அத்தனை பய ஏரியாக்களையும் முதல் பாகத்திலேயே காட்டி விட்டார்.

இரண்டாம் பாகத்தில் என்னத்தையெல்லாம் காட்டப் போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்?

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE