”கிராமங்களில் என்ன ஓய் எப்படி இருக்கே?” என்பார்களே அதில் வரும் ‘ஓய்’ என்ற வார்த்தையைத் தான் படத்தின் டைட்டிலாக்கியிருக்கிறார்கள்.
படத்தில் ஆளுக்கு ஒரு தடவை தான் நாயகனும், நாயகியும் படத்தின் டைட்டிலை உச்சரிக்கிறார்கள். படம் முடிந்து வெளியே வரும் போது ‘ஓஹோய்’ என்று சொல்ல வைத்து விடுகிறார்கள்.
சென்னையில் தங்கி வேலை பார்க்கும் ஹீரோ கீதன் தன் காதலி பாப்ரிகோஷ் உடன் வெளிநாட்டில் செட்டிலாகும் திட்டத்தில் இருக்கிறார். அவளோடு தன் கிராமத்துக்குச் சென்று எப்படியாவது தனது குடும்பத்தாரிடம் சம்மதம் வாங்கி விடலாம் என்பது அவருடைய திட்டம்.
அப்போது ஒரு கொலை குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் இன்னொரு நாயகியான ஈஷா தனது அக்காவின் திருமணத்துக்காக பரோலில் வெளியே வருகிறாள். தனது ஊருக்கு போகிற பேருந்தில் நாயகன் கீதனின் அறிமுகம் கிடைக்கிறது. அவன் போட்டிருக்கும் ஒரு தங்கச்சங்கிலியை திருடன் ஒருவன் அபேஸ் செய்ய, அவனைத் துரத்திப் போகும் ஈஷா பேருந்தை மிஸ் பண்ணுகிறாள்.
அதோடு பஸ்சில் தவறவிட்ட தனது உடமைகளை வாங்குவதற்காக கீதனைத் தேடி அவனது சொந்த ஊருக்கு வருகிறாள். வந்த இடத்தில் ஈஷா அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியைப் பார்த்ததும் மொத்த குடும்பமும் அவள் தான் கீதன் காதலிப்பதாகச் சொன்ன பெண் என்று நினைத்து விழுந்து விழுந்து உபசரிக்கிறார்கள்.
ஈஷாவும் வெளியே வந்திருக்கும் தன்னை வில்லன் கோஷ்டி கொலை செய்ய தேடிக்கொண்டிருப்பதை அக்கா மூலமாக கேள்விப்பட்டவுடன் அவளது திருமணத்துக்குப் போகாமல் கீதனின் வீட்டிலேயே தங்க ஆரம்பித்து விடுகிறார்.
பிறகு ஈஷா வந்த விஷயம் கீதனுக்கு தெரிய வர, அவனும் வந்து ”இவள் என் காதலியே இல்லை” என்று எவ்வளவு சொல்லியும் ஈஷாவின் நல்லவிதமான நடவடிக்கைகளைப் பார்த்து மொத்த வீடும் கீதன் சொல்வதை நம்ப மறுத்து ஈஷாவை முழுமையாக நம்புகிறது.
இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் போது கீதனின் உண்மையான காதலியும் அவனைத் தேடி கிராமத்துக்கு வந்து விடுகிறாள்.
இருவரில் கீதன் யாரை கைப்பிடித்தார்? என்பதே கிளைமாக்ஸ்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிட்டி, வில்லேஜ் இரண்டும் கலந்த பேக்-ட்ராப்பில் ஒரு குடும்பச் சித்திரத்தை பார்த்தை உணர்வைத் தருகிறது பிரான்சின் மார்க்கஸின் திரைக்கதை!
காதல், மோதல், வெகுளித்தனம், வீரம் என பல ஆளுமைகளை ஒரே கேரக்டரில் வெளிப்படுத்த அமைந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் நாயகன் கீதன். அதேபோல கிளைமாக்ஸில் சிலம்பம் சுற்றுவதிலும் அசராமல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். அடுத்தடுத்த படங்களின் கதைத் தேர்விலும் இதேபோல் கவனம் செலுத்தினால் நிச்சயமாக ஒரு ரவுண்டு வரலாம் ப்ரோ!
நாயகிகளாக வரும் ஈஷா- பாப்ரிகோஷ் இருவரில் பாப்ரிகோஷ் சிட்டி கல்ச்சரில் வளர்ந்த பெண்ணாகவும், வெளிநாட்டு மோகத்தில் திளைக்கிற பெண்ணாகவும் வருகிறார். வசனம் பேசுவதிலும் தடுமாறுவது லிப் மூவ்மெண்ட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது. நல்லவேளையாக பெரிதாக அவருக்கு காட்சிகள் இல்லை.
இன்னொரு நாயகியாக வரும் ஈஷா தான் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். கிட்டத்தட்ட விக்ரமன் படங்களின் வரும் ஹீரோக்களின் கேரக்டர் போன்றது அவரது கேரக்டர். கிளைமாக்ஸில் அவர் பேசும் நீண்ட வசனம் தடுமாற்றமில்லாத நடிப்புக்கு நல்ல உதாரணம். பாடல் காட்சியிலும் கவர்ச்சி காட்டி ஆல் கிளாஸ் ரசிகர்களையும் கவர்கிறார்.
தாத்தாவாக வரும் சங்கிலி முருகன், மாமாவாக வரும் அர்ஜூனன், அப்பாவாக வரும் நாகிநீடு என படத்தில் வருகின்ற மற்ற கதாபாத்திரங்களும் ரசிக்க வைக்கின்றன.
இளையராஜாவின் இசையில் பின்னணி இசை அபாரம் என்றால், ‘தென்றல் வரும் வழியில்’ உட்பட படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் சுகராகம்!
”வரும் போது மனசில்லாமல் வந்தேன்.. இப்ப போக மனசே இல்லாமல் போறேன்”, ”விட்டுக் கொடுத்தா இப்படித்தான் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல அதை சொல்லிக் காட்டத் தோணும்” ”அடிப்படையில நல்லவனா இருக்கிற ஒருத்தனால இந்தமாதிரியான தப்பையெல்லாம் செய்யவே முடியாது” “நீ கொலையே செஞ்சிருந்தாலும் அது நல்லதுக்காக மட்டும் தான் இருக்கும்” போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன.
முதல் காட்சியில் நாயகி ஜெயிலில் இருப்பது போல காட்டியவர் அவர் என்ன குற்றத்திற்காக சென்றார் என்பதை கடைசி வரை சொல்லமலேயே படத்தை முடிப்பது, என்னதான் குடும்ப சங்கிலியை கழுத்தில் போட்டுக் கொண்டு வந்தாலும் அவள் தான் கீதனின் காதலி என்று முரட்டுத்தனமாக நம்புவது, அது குறித்து ஈஷா சொல்ல வரும் போதெல்லாம் அவரை பேச விடாமல் தடுப்பது, தன் வீட்டுப் பையன் கீதன் சொல்வதை நம்பாமல், யாரென்றே தெரியாத எங்கோ இருந்து வந்த ஒரு பெண் சொல்லும் பொய்களை கண்மூடித்தனமாக மொத்த குடும்பமும் நம்புவதாக காட்டியிருப்பது என படத்தில் சில லாஜிக் மீறல்கள் வரிசைக் கட்டுகின்றன.
அவைகளை மட்டும் ஓரங்கட்டி விட்டுப் பார்த்தால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதல், ஃபேமிலி, செண்டிமெண்ட், காமெடி கலந்து அழகான கிராமத்து பின்னணியில் ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தை தான் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரான்சிஸ் மார்க்கஸ்.