வெவ்வேறு குணாதிசயம் கொண்ட மூன்று பெண்கள். அவர்கள் திருமணம் என்கிற பந்தத்துக்குள் நுழையத் தயாராகும் போது அது எந்தளவுக்கு அவர்கள் வாழ்க்கையிலும், அவர்கள் சார்ந்த குடும்பத்தார் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே இந்த ”ஒரு நாள் கூத்து.”
இன்றைக்கும் தினசரி பேப்பர்களிலும், வார, மாத இதழ்களிலும், இன்டர்நெட்டுகளிலும் வரன் தேடும் விளம்பரங்களை லட்சக்கணக்கில் நாம் பார்க்க முடிகிறது. அந்த ஒரு நாள் சுப நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு குடும்பமும் என்னென்ன சோதனைகளை சந்திக்கிறது? என்று சமூகத்தில் நடந்த சில சம்பவங்களை கதையாக்கி தந்திருக்கிறார்கள்.
ரேடியோ ஜாக்கியாக இருக்கும் ரித்விகாவுக்கு ஜாதகம் பொருந்தவில்லை உள்ளிட்ட சில காரணங்களால் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது.
அதிர்ந்து கூட பேசாத இன்னொரு நாயகி மியா ஜார்ஜின் திருமணம் ‘எம்பொண்ணுக்கு நல்ல பையன் கெடைப்பான்’ என்கிற வாத்தியார் அப்பாவின் பழமை ஊறிய முரட்டு பிடிவாதத்தினாலேயே தாமதமாகிறது.
ஐடி கம்பெனியில் தன்னுடன் வேலை செய்யும் ஹீரோ தினேஷை காதலிக்கும் நிவேதா பெத்துராஜ் திருமணம் செய்து கொள்ளும்படி அவசரப்படுத்த, அவரோ ‘எனக்குன்னு சில கடமைகள் இருக்கு’ என்று நழுவுகிறார். இதனால் நிவேதாவின் திருமணமும் தள்ளிப்போகிறது.
இந்த மூன்று பெண்கள் வாழ்க்கையிலும் அவர்கள் ஆசைப்பட்டபடி மாப்பிள்ளை அமைந்தார்களா? இல்லையா? என்பதையே நிஜ வாழ்க்கையில் நாம் பார்த்த சில சம்பவங்களோடு படமாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.
அழுக்குச் சட்டையும், எண்ணைய் படியாத தலைமுடியுமாகத்தான் இருப்பார் என்கிற ரெகுலர் லுக்கை இதில் அடியோடு மாற்றி செம ஸ்மார்ட் பாயாக வருகிறார் ஹீரோவாக வரும் ‘அட்டகத்தி’ தினேஷ். நிவேதாவுடனான காதல் கெமிஸ்ட்ரியில் பெருசா ஒர்க்-அவுட் ஆகவில்லை என்கிற குறை இருந்தாலும் இயல்பான நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறார்.
நீ வீடு வாங்குங்குறே… உங்க அப்பா கார் வாங்குங்கிறார்… உன்னை கல்யாணம் பண்றதுக்கு நான் ஒருத்தன் இருந்தா போதாதா… என்று தினேஷ் பேசுகிற காட்சி பொறுப்பை சுமந்து நிற்கின்ற ஒவ்வொரு இளைஞனின் நிஜ வலி.
தினேஷ் ஜோடியாக வரும் நிவேதா பெத்துராஜ் ஆள் எந்தளவுக்கு உசரமோ அந்தளவுக்கு நடிப்பிலும் நம் மனசுக்குள் உசரமான இடத்தில் உட்கார்ந்து கொள்கிறார்.
அப்பாவின் முகத்தைக் கூட நேருக்கு நேர் பார்த்துப் பேசப்பயப்படும் கட்டுக்கோப்பான குடும்பப் பெண்ணாக வருகிறார் மியா ஜார்ஜ். ஒவ்வொரு மாப்பிள்ளை வரும் போதும் தானாகவே தயாராகி வந்து நிற்கும் போதெல்லாம் ”இந்த மாப்பிள்ளையாவது இவருக்கு செட்டாகி விடக்கூடாதா கடவுளே…” என்று ரசிகர்களையே பரிதாப்பட வைக்கிறார். திருமண வயதைத் தாண்டி நிற்கின்ற பெண்களின் மன உணர்ச்சிகளையும் முகத்தில் வெளிப்படுத்துவது அபாரம்.
மீடியாவுல வேலை பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் அப்டி இப்டின்னு சொல்வாங்களே? என்று தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை கேட்கும் போது ”கோயிலை சுத்தி வர்றப்போ நாம மனசுக்குள்ள என்ன நெனைக்கிறோம்கிறது தான் முக்கியம். கெட்டதை நெனைச்சா அது கெட்டது. நல்லதை நெனைச்சா அது நல்லது” என்று மீடியாவில் வேலை செய்யும் பெண்களுக்காக பரிந்து பேசுகிறார் ரித்விகா.
அவரே இன்னொரு காட்சியில் சக ஆர்ஜேவான ரமேஷ் திலக் உடன் திருமணத்துக்கு முன்பே ரூமில் தப்பு செய்து விட்டு ”ச்ச்சே… இவ்வளவு தானா வாழ்க்கை” என்று பஞ்ச் பேசிவிட்டு மீடியாவில் வேலை செய்யும் பெண்கள் மீதான தப்பான பார்வையை உறுதிப்படுத்துகிறார். ( என்ன டைரக்டர் சார், இப்படி பண்ணிட்டேள்..?)
நிஜ வாழ்க்கையிலும் ஆர்.ஜே வாக இருந்ததாலோ என்னவோ படத்திலும் நிஜ ஆர்.ஜே போலவே நடிப்பை கொடுத்திருக்கிறார் ரமேஷ் திலக்.
பால சரவணனின் டைமிங் காமெடி கலகலப்புக்கு கியாரண்டி என்றால் கல்யாண வயசில் தங்கையை வைத்திருக்கும் அண்ணன்களின் நிலையை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாகரன். கூடவே வரும் சார்லியை 40 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் அத்தனை ஆண்களுக்கும் ரொம்பவே பிடித்துப் போகும்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ‘அடியே அழகே…’ ‘எப்போ வருவாரோ…’ ‘மாங்கல்யம் தந்துனா…’ என பாடல்கள் அத்தனையும் சுகமான ராகங்கள்! அவ்வப்போது வரும் மேள தாள இசையுடன் கூடிய பின்னணி இசை சரியான தீனி. கோகுலின் ஒளிப்பதிவில் எல்லா காட்சிகளும் கண்ணை உறுத்தாத கலர்புல் காட்சிகள்.
நிஜ ரேடியோ ஸ்டேஷன் போலவே பிரமிப்பை ஏற்படுத்துகிறது கலை இயக்குநர் போட்டிருந்த பக்காவான ரேடியோ ஸ்டேஷன் செட்!
மூன்று கதாப்பாத்திரங்களை மையப்படுத்தி நகரும் திரைக்கதையில் கொஞ்சம் கூட குழப்பமில்லாமல் வெட்டி ஒட்டிய எடிட்டர் சாபு ஜோசப்புக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு!
”நீ பொய் சொல்லல ஆனா நிஜத்தை உன்னால சொல்லவே முடியாது” ”புடிச்சத செய் நீ செத்ததுக்கப்புறம் யாரும் உனக்கு சிலை வைக்கப்போறதில்லை.” என வாழ்க்கையின் நிஜத்தை பேசும் வசனங்கள் படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம்.
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மட்டுமல்ல காதல் திருமணம் கூட இந்தக் காலத்தில் பிரச்சனைகள் சூழ்ந்தது தான். படம் முடிந்து வெளியில் வருகிற ஒவ்வொருவரின் மனசுக்குள்ளும் அவர்கள் நிஜ வாழ்க்கையில் சந்தித்த ஏதாவது ஒரு சம்பவங்களில் ஏதாவது ஒன்றை படத்தின் ஏதாவது ஒரு காட்சியோடு
பொருத்திப் பார்க்க வைத்து விடுகிறார் அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்!
ஒரு நாள் கூத்து – வாழ்க்கை விளையாட்டு!