டெக்னீஷியனாக இருக்கும் பலர் இயக்குநராக மாறிக் கொண்டிருக்கும் காலம் இது. இதில் கரை கடந்து உயிர் பிழைத்தவர்கள் என்றால் அதில் சிலர் மட்டுமே ஞாபகத்து வருகிறார்கள். தற்போது அதே டெக்னீஷியன் குடும்பத்திலிருந்து ஒருவர் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார் அவர்தான் எடிட்டர் ஆண்டனி. இவர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் ஒருநாள் இரவில். படம் பார்த்தவங்க சொல்றது என்னன்னா “ஒரு படத்துல இந்த மெசேஜ் சொல்றது ரொம்ப கஷ்டம்தான்” அதை சரியாக செய்திருக்கிறார் வாழ்த்துகள் ஆண்டனி சார்.
சத்யராஜ், அனுமோல், யூகி சேது, வருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்கள். மலையாளத்தில் வெளியான “ஷட்டர்” என்ற படத்தின் ரீமேக்தான் ஒருநாள் இரவில் என்றாலும் திரைக்கதையில் தனது யுக்தியை காட்டி படத்தை ஒருபடி மேலே கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ஆண்டனி.
வெளிநாட்டில் போய் வேலை செய்துவிட்டு தேவையான சொத்துக்களை சேர்த்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கே வந்து தனது அன்றாட வாழ்க்கையை நடத்தும் சத்யராஜ். பொறுப்புள்ள அப்பாவாக இருக்கிறேன் என்ற பெயரில் தன் மகள் (திக்ஷிதா) அவளுடைய நண்பனுடன் பைக்கில் செல்வதை பார்த்தவுடன் தவறாக நினைத்து இனிமே நீ காலேஜ்க்கு போக வேண்டாம் என சொல்லி அவசர அவசரமாக கல்யாண ஏற்பாட்டை செய்கிறார்.
இந்த காலத்து புள்ளைங்க பெத்தவங்க பேச்சை எங்க கேட்குது, அதுங்க இஷ்டத்துக்குதான் ஆடுதுங்க என்று பழைய புராணத்தை எடுத்து நமக்கு டியூஷன் எடுக்க தொடங்கிவிடுகிறார் சத்யராஜ். தன் மகளுக்கு இந்த சிறிய வயதில் கல்யாணம் வேண்டாம் என்று சத்யராஜுடன் சண்டைபோடுகிறார் அவரது மனைவியாக நடித்திருக்கும் கல்யாணி நட்ராஜன். யார் பேச்சையும் கேட்காமல் தன் இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறார் சத்யராஜ். ஒருகட்டத்தில் சண்டை முற்றுகிறது மனைவி சொன்ன அந்த வார்த்தையால் மிகவும் மனம் உடைந்து போகிறார் சத்யராஜ்.
அறிமுக நடிகர் வருண் ஆட்டோ டிரைவராக நடித்திருக்கிறார். இவரின் அந்த அண்ணே அண்ணே என்ற பேச்சு நம்மை ரசிக்க வைக்கிறது. வேல்ஸ் யூனிவர்சிடி ஐசரி கணேஷின் மகன் தான் இந்த வருண்.
சினிமாவில் படத்தை இயக்குவது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்பதை ஒரு இயக்குநராக நடித்து நமக்கு உணர்த்துகிறார் யூகி சேது. வருணின் ஆட்டோவில் செல்லும்போது இவரின் கதையை எழுதி வைத்த ஒரு பையை அவரின் ஆட்டோவில் மறந்து வைத்துவிடுகிறார். முக்கிய குறிப்பு இந்த படத்திற்கு யூகி சேது தான் வசனம் எழுதியிருக்க்கிறார். அனைத்து வசனக்களும் நச். கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் கௌதம் மேனன் சொல்லும் அந்த வசனம் “இப்ப இருக்குர ஜன்ரேஷன் பழசை மறந்துட்றீங்க என்று கூறும்போது இவர் யாரையோ சொல்ற மாதிரி இருக்கேன்னு ஒரு நிமிடம் எண்ண வைக்கிறார்.
நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு அடிச்சிட்டு ரவுண்ட் அடிக்க போகலாம்னு நினைத்தவருக்கு பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கிறது அந்த சிக்கல். அது யாருன்னு யோசிக்காதிங்க அனுமோல் தான். விலை மாதுவாக நடித்திருக்கும் அனுமோல் சத்யராஜுடன் ஆட்டோவில் ஏறி ஹோட்டல் ஹோட்டலாக சுற்றுகிறார். கடைசியில் தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் தன் கடை காலியாக இருப்பதால் அங்கேயே இரவு ஆட்டத்திற்கு குடி புகுகிறார்கள். கடைக்கு உள்ளே செல்லும்வரை கதையில் கொஞ்சம் தொய்வு தெரிந்தாலும் ஷட்டரை சாத்திவிட்டு வருண் சென்றபிறகு ஆட்டோ மிட்டரைவிட அதிவேக ஸ்பீடாக ஓடுகிறது படம்.
கடைக்குள் அனுமோலுடன் சத்யராஜ் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் மனதில் திக்திக் என்று அமர்ந்திருக்கிறார். இன்னொரு பக்கம் தன் கணவரை காணோம் என்று பதற்றத்தில் இருக்கிறார் கல்யாணி நட்ராஜன். கடையின் ஜன்னல் வழியாக தன் வீட்டை அடிக்கடி பார்த்துக் கொண்டேயிருக்கும் சத்யராஜ் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்னு போன வருணை இன்னும் காணோமே என்று கையை பிசைந்து கொண்டேயிருக்கிறார். சத்யராஜின் பயம் புரியாமல் அனுமோல் அவர் இஷ்டத்துக்கு கூலாக இருக்கிறார். அடிக்கடி இவர் எழுப்பும் சத்தத்தால் நிலைகுலைந்து போகும் சத்ஸ். அவரின் சத்தத்தை நிறுத்த காசை எடுத்து எடுத்து நீட்டுகிறார்.
சாப்பாடு வாங்க போன வருண் போலீசிடம் சிக்கிக் கொள்ள கடைக்குள் இருக்கும் சத்யராஜ் மற்றும் அனுமோல் இருவரும் வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். கவுரவமாக வாழ்ந்து வந்த எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டதே என எண்ணி அழுகிறார் சத்யராஜ்.
போலீசில் மாட்டிய வருண் என்ன ஆனார்?, கடைக்குள் இருக்கும் இருவரும் என்ன ஆனார்கள்? கதையை தொலைத்த யூகி சேது என்ன ஆனார் என்ற பல ஆனாருக்கு நச் என்று க்ளைமேக்ஸ் வைத்து முடித்திருக்கிறார் இயக்குநர் ஆண்டனி.
போதையால் நல்வழி கூட நாசமான வழியாக மாறலாம் என்பதை உணர்த்தும் படம் “ஒருநாள் இரவில்”