தன்னுடைய வித்தியாசமான கதையம்சத்தினாலும், தனித்துவமான நடிப்பாலும், தமிழ் சினிமாவில் காலூன்றி நின்று இருப்பவர் நடிகர் - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. 'நான்', 'சலீம்', 'இந்திய - பாகிஸ்தான்' போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான இவரின் 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து கொண்டே போகும் விஜய் ஆண்டனிக்கு மகுடம் சூட்டும் விதமாக அமையவிருக்கிறது, விரைவில் வெளியாகும் 'சைத்தான்' திரைப்படம். புதுமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்க, அருந்ததி நாயர், பைக் பந்தயங்களில் கலக்கி கொண்டிருக்கும் அலிஷா அப்துலா மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொதுவாகவே தனக்குரிய அந்த தனித்துவமான தாடியுடன் படங்களில் தோன்றும் விஜய் ஆண்டனி, இந்த படத்திலும் அதே கெட்டப்பில் தோன்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. "படத்திற்கு படம் என்னுடைய தோற்றத்தில் கவனம் செலுத்துவதை விட, எப்படி வலுவான திரைக்கதையை கொண்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வது என்பதில் தான் நான் அதிக நாட்டம் செலுத்தி வருகிறேன். என்னை பொறுத்தவரை கதையை விட கதையின் கரு தான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணைக்கும். அந்த வகையில் நான் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த 'சைத்தான்' திரைப்படம், கண்டிப்பாக மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு அனைத்து வகையிலும் இருக்கும் என நம்புகிறேன். இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, ஒரு அறிமுக இயக்குனர் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த இயக்குனராக செயல்பட்டுள்ளது படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது" என்கிறார் விஜய் ஆண்டனி. படத்தின் வித்தியாசமான தலைப்பை பற்றி அவர் கூறுகையில், "என் படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளை நான் தேர்வு செய்யவில்லை. அவை அனைத்தும் தாமாகவே அமைகிறது" என்று கூறி சிறிய புன்னகையுடன் விடை பெறுகிறார் 'சைத்தான்' நாயகன் விஜய் ஆண்டனி.
இயல்பாக ஹீரோயிசம், அதிரடி, செண்டிமெண்ட் என இருந்த தமிழ் சினிமாவை, தன்னுடைய எதார்த்தமான முயற்சியால் வேறொரு கட்டத்திற்கு எடுத்து சென்று, மக்களின் மனதில் ஆழமாக பதிந்த விஜய் ஆண்டனிக்கு, இந்த 'சைத்தான்' திரைப்படம் மேலும் ஒரு அசைக்க முடியாத தூணாக அமையும் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.