நட்சத்திர அந்தஸ்து இல்லாத சில படங்களும் கவனத்தை ஈர்க்கின்றன. படம் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்துவிட்டால் கண்டிப்பாக ஏமாறாமல் போக மாட்டார்கள் என்று சொல்லக் கூடிய சில படங்களும் வருகின்றன.
இந்த ‘என்னுள் ஆயிரம்’ படத்தை அந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.
அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ஒரு சுவாரசியமான கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், திரைக்கதையில் மட்டும் சில துண்டு துண்டான காட்சிகளையும், குழப்பமான தொடர்பில்லாத காட்சிகளையும் வைத்து கொஞ்சம் குழப்பி விட்டார். அதைத் தவிர்த்திருந்தால் ஆறாயிரம் படங்கள் வந்த தமிழ் சினிமாவில் இந்த ‘என்னுள் ஆயிரம்’ படமும் ஒரு குறிப்பிடத்தக்க படமாக அமைந்திருக்கும்.
ஒரு ஸ்டார் ஓட்டலில் வேலை பார்க்கும் மகாவுக்கும், வங்கியில் வேலை பார்க்கும் மரீனா மைக்கேலுக்கும் இடையே காதல். இந்தக் காதல் திருமணத்தில் முடியாமல் போவதற்கு மகா-வே காரணமாக அமைகிறார். அது என்ன என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ்.
நடிகர் டெல்லி கணேஷின் மகன் மகா இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே நெகட்டிவ் ஹீரோவாக அறிமுமாகத் தைரியம் வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். தொடர்ந்து நாயகனாக நடிக்க தன் தோற்றத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
படத்தில் இரண்டு நாயகிகள், மகாவின் காதலியாக நடித்திருக்கும் மரீனாவும் சரி, மகா ‘ஆசைப்படும்’ நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி யுகலும் சரி அவரவர் கதாபாத்திரங்கள் மிக யதார்த்தமாக சினிமாத்தனம் இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் மூவரைச் சுற்றியே முழு படமும் நகர்வதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவமில்லை.
கோபி சுந்தர் பாடல்களில் செலுத்திய கவனத்தை விட பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். படத்தில் பல இரவுக் காட்சிகள், அதிசயராஜ் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளையும் கவனத்துடன் கையாண்டிருக்கிறது.