ஜாதி சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி, அதன் மூலம் எம்.எல்.ஏ-வாக நினைக்கும் சங்க நிர்வாகி, அதற்காக போடும் சதி திட்டத்தில், கல்லூரி மாணவர்கள் சிலரை சிக்க வைக்க, அதில் பலியாகும் மாணவனின் மரணத்திற்கு பழி வாங்க துடிக்கும் சில மாணவர்கள் அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா, என்பது தான் கதை.
1999ஆம் ஆண்டு கதை நடக்கிறது. அப்போது டாஸ்மாக் இல்லை, தனியாரிடம் தான் சில்லறை மது விற்பனை இருந்தது. இந்த படத்திலும் அப்படி ஒரு மது விற்பனை நிலையம். கல்லூரி அருகே இருப்பதால், ஹாஸ்டலில் தங்கும் கல்லூரி மாணவர்கள், அடிக்கடி அந்த மது கடையில் மது குடிப்பது, தாபாவில் உணவு உண்பது என்று இருப்பதோடு, அங்கே இருக்கும் சிலரோடு மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்படியே முழு படமும் நகர்கிறது. அதாவது, மாணவர்கள் மது குடிக்கிறார்கள், பிறரை அடிக்கிறார்கள். பிறகு மாணவர்கள் அடி வாங்குகிறார்கள், அடி கொடுக்கிறார்கள், இப்படியே படம் முழுவதும் காட்சிகள் நகர்வது, படத்தின் வேகத்திற்கு பிளாசாக இருந்தாலும், இந்த குடியும் அடியும் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.
கல்லூரி மாணவர்களாக நடித்துள்ள விஜயகுமார் உள்ளிட்ட நான்கு புதுமுகங்களும் எதார்த்தமாக நடித்துள்ளார்கள். சக மாணவர்களுக்கு பிரச்சினை என்றால் கத்தி, கபடா, கட்டை என்று எடுத்துக்கொண்டு மல்லு கட்டும் இடத்திலும், சக மாணவனின் அம்மாவுக்காக ரூமை மாற்றும் இடத்திலும், கல்லூரி மாணவர்களாகவே வாழ்ந்துள்ளார்கள்.
வில்லனாக நடித்துள்ள மைம் கோபியின் நடிப்பு எதார்த்தம். அதிலும், தனது தொழிலுக்காக அவர் அடங்கி போகும் இடத்தில், நடிப்பில் அப்ளாஸ்களை அல்லுகிறார். எந்தவிதத்திலும், ஓவர் ஆக்டிங் இல்லாமல், தனது கதாபாத்திரத்தை ரசிகர்கள் கவனிக்க வைப்பதில் மைம் கோபி, முதல் மார்க் வாங்கி விடுகிறார்.
அதிலும், காதலை கையாண்ட விதம், அந்த காதலிக்கு ஏற்படும் பிரச்சினை, பிறகு அதை வைத்து நடக்கும் அரசியல் சதி, என்று படம் படு வேகமாக நகர்கிறது.
கல்லூரி ஹாஸ்டல் தான் கதையின் களம் என்ற போதிலும், கல்லூரியில் மாணவர்கள் செய்யும் குறும்பு, ஹாஸ்டல் வாழ்க்கையும் குறைவாக காண்பித்துவிட்டு, மது குடிப்பதையும், சண்டைப்போடுவதையும் அதிகமாக காண்பித்திருப்பதை தவிர்த்திருந்தால், ‘உறியடி’ நெத்தியடியாக இருந்திருக்கும்.