உப்புகருவாடு திரைப்படம் மொழி, அபியும் நானும், பயணம் போன்ற நல்ல படங்களை கொடுத்த ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. வழக்கமாக ராதாமோகன் படங்களில் ஒரு சில புதுமுகங்கள் அறிமுகமாகும். அதேபோல், ஒரு சில பழைய முகங்கள் அவருடைய படங்களில் தொடர்ந்து இடம்பெறும். ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களான எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மயில்சாமி, இளங்கோ குமாரவேல் ஆகியோர் இந்த படத்திலும் உள்ளனர். சின்னத்திரையில் ‘டாடி எனக்கு ஒரு டவுடுட்டு’ என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான திண்டுக்கல் சரவணனும், நாக்கமூக்க செந்திலும் இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளனர். மேலும் கருணாகரன், நந்திதா, சதிஸ் கிருஷ்ணன், ரச்சிதா ரச்சு, நாராயணன் லக்கி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரதிற்கும் ஒரு முக்கியத்துவம் தந்துள்ளார் இயக்குனர். கருணாகரன் காமெடி நடிகர் என்ற நிலையை மாற்றி காமெடி கலந்த குணசித்திர நடிகராகவும் மாறியுள்ளார். எம்.எஸ்.பாஸ்கர் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு டெரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நந்திதாவிற்கும் அந்நியன், அம்பி போன்று மாறி மாறி நடிக்கும் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம். மற்ற அனைவரையும் விட மயில்சாமியின் காமெடி அமோகம்.
இந்த படம் ஒரு சிக்கலான கதையமைப்பை கொண்ட படம். இப் படத்துக்கு முக்கியமானது திரைக்கதை தான் அதை மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவு செய்தற்கு நிச்சயம் பாரட்டலாம். அனைவரும் ரசிக்கும் படியாக இயக்கியுள்ளார் ராதாமோகன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே திறன்பட நடித்திருகிறார்கள், . இரண்டாம் பாதியில், கதையில் வரும் ட்விஸ்ட்களால் கொஞ்சம் விறுவிறுப்புடன் காமெடியும் சேர்வதால் படத்தின் வேகம் இன்னும் கொஞ்சம் வேகமாக போகிறது.
படம் முழுவதும் ஆங்கிலத்தை தப்பு தப்பாக பேசி சிரிக்கவைக்கும் நாக்கமூக்க செந்தில், இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற அளவிற்கு மாறுவது தான் படத்தின் ஹைலைட். படத்தில் குறும்படங்கள் போல சிறு சிறு வசனக்காட்சிகள் கிடைத்தாலும் சதிஸ் கிருஷ்ணன், ரச்சிதா ரச்சு ஆகியோர் நடிப்பால் அசத்தியுள்ளனர். வழக்கம்போலவே ரசிக்கும்படியான வித்தியாசமான படைப்பை கொடுத்துள்ளார் ராதா மோகன்.
மொத்தத்தில் உப்புகருவாடு ருசித்து ருசித்து சாப்பிடும் நெய் மீன் கருவாடு.