உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான மொழியாக விளங்குவது சிரிப்பு தான். சிரிப்பிற்கு என தனி இலக்கணம் எதுவும் கிடையாது. அப்படி கடவுள் கொடுத்த பொக்கிஷமாக கருதப்படும் சிரிப்பை, தன் நகைச்சுவை உணர்வால் தமிழக ரசிகர்களுக்கு வழங்கி வருபவர் நடிகர் சந்தானம். டைமிங் சென்ஸ், கவுண்டர் காமெடி, நையாண்டி என ஒரு நகைச்சுவை அரசருக்கு தேவையான எல்லா குணங்களும் சந்தானத்திடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக மக்களின் சிரிப்பிற்கு சொந்தக்காரரான சந்தானம், நகைச்சுவை மட்டுமின்றி ஒரு வளர்ந்து வரும் வெற்றி கதாநாயகனாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான படங்கள் யாவும் தரமான வெற்றியை வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு சான்றாக திகழ்வது தான், சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம்.
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக வெற்றி பயணத்தை மேற்கொண்டு வரும் சந்தானம், தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருப்பது, ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது. ஒருபுறம் நகைச்சுவையின் பேரரசராக கருதப்படும் சந்தானம், மறுபுறம் தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளியாக கருதப்படும் இயக்குனர் செல்வராகவன். இப்படி ஒரு அற்புதமான கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்த ஆரம்பித்துவிட்டது.
“பொதுவாகவே செல்வராகவன் சார் என்றாலே, ‘சீரியஸான மனிதர் தான்’…’அவர் படங்கள் எல்லாம் உணர்ச்சிகரமாக தான் இருக்கும்’… போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. செல்வராகவன் சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. உணர்ச்சிகரமான படங்களாக இருந்தாலும், அந்த நகைச்சுவை உணர்வை அவரது திரைப்படங்களில் நம்மால் உணர முடியும்…”என்கிறார் நடிகர் சந்தானம்.
தமிழ் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளை பெற்ற செல்வராகவனின் யாரடி நீ மோஹினி திரைப்படம், ஒரு சிறந்த
காமெடி – எமோஷன் களஞ்சியமாகவே இன்றளவும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஆடவரி மாட்டலாகு அர்த்தாளே வேருளே’ திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் சந்தானம் – செல்வராகவன் கூட்டணியானது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.