குளோபல் வுட்ஸ் மூவிஸ்' சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து, அறிமுக இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி இயக்கி இருக்கும் நகைச்சுவை கலந்த திரில்லர் படம் தான் 'மியாவ்'. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக 'பெர்சியன் கேட்' எனப்படும் பூனையை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த 'மியாவ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று மியாவ் படத்தின் இசையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஸ்ரீஜித் இடவானோ (அறிமுகம்), ஒளிப்பதிவாளர் போஜன் கே தினேஷ் (சத்தம் போடாதே) மற்றும் படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா என மியாவ் படத்தின் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த படத்தில் இருக்கும் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் பிரத்தியேகமாக பூனையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலக தரம் வாய்ந்த கம்ப்யூட்டர் கிராபிக்சில் இந்த பாடல்கள் உருவாகி இருப்பது மேலும் சிறப்பு.
"இதுவரை பூனையை நான் நேரில் தான் பார்த்து இருக்கிறேன்... இப்போது தான் இந்த 'மியாவ்' படம் மூலம் திரையில் பார்க்கிறேன். இந்நாள் வரை யாரும் எடுக்காத முயற்சியை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் 'செல்பி' எனப்படும் பூனையின் சேட்டைக்கு அளவே இல்லை. நிச்சயமாக இந்த மியாவ் படம் குழந்தைகளை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும்..." என்று கூறினார் நடிகர் சிவகார்த்திகேயன்.