இரண்டு முறை தொடர்ந்து தேசிய விருது வாங்கிய தயாரிப்பாளர் J சதீஷ் குமார், ‘பரதேசி’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘குற்றம் கடிதல்’, ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ போன்ற வித்தியாசமான வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் விரைவில் வெளியாகும் ‘தரமணி’ திரைப்படம் மூலம் வெற்றி கனியை சுவைக்க உள்ளார். ‘தங்கமீன்கள்’ என்னும் அழகிய பொக்கிஷத்தை தமிழ் சினிமாவிற்கு வழங்கி, தேசிய விருதை தட்டிச் சென்ற இயக்குனர் ராமிற்கு மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை தேடி தரும் வண்ணமாக அமைந்திருக்கிறது, கடந்த மே 21 ஆம் தேதி வெளியான ‘தரமணி’ திரைப்படத்தின் டீசர். சில நாட்களிலேயே யூடூபில் ஐந்து லட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ள இந்த படத்தின் டீசர், பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை உறுதியாக சொல்லலாம். ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் காதலர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா மற்றும் புதுமுகம் வசந்த் ரவி ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“எனக்கு வெறும் 15 நண்பர்கள் தான் பேஸ்புக்கில் உள்ளனர், உனக்கு மட்டும் எப்படி 2248 நண்பர்கள்?”, “இந்த குட்டை பாவடையை ஏன் நீ இன்னும் நீளமாக போடவில்லை?”,”அவனுக்கு எப்படி டி உன்னுடைய அளவு தெரியும்?” போன்ற கேள்விகளுடன் ஆரம்பமாகும் இந்த படத்தின் டீசர் மக்களின் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் பெரும் அளவில் தூண்டியிருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம். இந்த டீசரின் டிவிஸ்டாக, “அவனுடன் படுக்கனுமா வேணாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நான்” என்று ஆண்ட்ரியா சொல்லும் தருணங்கள் யாவும் காதலர்களுக்கு இடையே ஏற்படும் சிறு சிறு விரிசல்களை அழகாக உணர்த்துகிறது. இது போன்ற தனித்துவமான சிந்தனையும், புது விதமான யோசனையும் இயக்குனர் ராமிற்கு மட்டும் தான் பொருந்தும் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரின் இந்த அழகிய படைப்பு, அவருக்கு மேலும் ஒரு தேசிய விருதை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.