"சர சர சார காத்து வீசும் போது, சார பாத்து பேசும் போது" என்ற வாகை சூடவா திரைப்பட பாடல் மூலம் அனைவரின் நெஞ்சங்களையும் கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். தன்னுடைய மெல்லிசை மெலோடியால் தமிழ் சினிமாவில் விரைவில் வளர்ந்து, உத்தம வில்லன், பாப்பநாசம், தூங்காவனம் மற்றும் விஸ்வரூபம் 2 போன்ற படங்கள் மூலம் பத்மபூஷன் உலகநாயகன் கமலஹாசனுடன் தொடர்ந்து கைக்கோர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இசையமைத்திற்கும் சென்னை 2 சிங்கப்பூர் திரைப்படத்தின் ஆறு பாடல்களை, ஆறு நாடுகளில் வெளியிடும் பிரமாண்ட யோசனையுடன் களம் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, சிங்கபூர் மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி துணையோடு, காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
புதுமுகங்கள் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் நடிக்கும் இந்த திரைப்படத்தின் ஆறு பாடல்களும், விரைவில் அனைவரது கவனத்தையும் ஈர்க்க கூடும் என்று எதிர்ப்பார்கபடுகிறது. சிங்கப்பூரில் ஆரம்பித்து, ஐந்து நாடுகளில் ஒவ்வொரு பாடலை வெளியிடும் இந்த தனித்துவமான யோசனைக்கு உலகநாயகன் தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். "முந்தைய காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் பல நாடுகள் மீது படையெடுத்து சென்று கண்டறிந்த சிங்கப்பூரம் என்னும் நகரத்தை தான் நாம் இப்போது சிங்கப்பூர் என்று அழைக்கிறோம். அதே போல் ஜிப்ரானின் இந்த புதிய முயற்சி இதோடு முடிந்துவிடாமல், கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்' என்றார் உலகநாயகன்.