திவ்யா, ஆராதனா, மாயா, சக்தி போன்ற பேர்களை உச்சரிக்கும் போதே, நம் உள்ளங்களில் ஏதோ ஒரு தென்றல் வருடி செல்கிறது. இந்த பெயர்கள் யாவும் மௌனராகம், வேட்டையாடு விளையாடு, காக்க காக்க மற்றும் அலைபாயுதே படங்களில் வரும் கதாநாயகிகளின் பெயர்கள்.
அந்த அளவிற்கு அவர்களின் பெயர்களும், கதாப்பாத்திரங்களும் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்தவை. அவ்வளவு ஏன்? இது போன்ற கதாப்பாத்திரங்களின் பெயர்களால் ஈர்க்கப்பட்ட பலர், தங்கள் குழந்தைகளுக்கும் அதே பெயர்களை வைத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. அதே போல் தென் இந்தியாவின் மகத்தான திறமைமிக்க இயக்குனர்களில் ஒருவரான அறிவழகன் தற்போது இயக்கி வரும் குற்றம் 23 திரைப்படத்தின் மூலம் அந்த வரிசியைல் இணைய இருக்கிறார் நடிகை மகிமா நம்பியார்.
தென்றல் என்னும் கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும், ரசனைகளையும் பூர்த்தி செய்து, அவர்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தை பிடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார் மகிமா நம்பியார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தை ரேதான் தி சினிமா பீபள்நிறுவனத்தை சேர்ந்த இந்தர் குமார் உடன் இணைந்து இன் சினிமாஸ் என்டர்டைன்மன்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆரத்தி அருண் தயாரித்து வருகிறார்.
இந்த குற்றம் 23 திரைப்படம் தனது கலைப்பயணத்திற்கு அமைந்த ஒரு சிறந்த தூண் எனவும், தமிழ் சினிமாவில் தன்னுடைய நிலையை ஒரு படி மேலே எடுத்து செல்லும் படமாகவும் அமையும் என்கிறார் மகிமா. “முதன் முதலில் எனக்கு அறிவழகன் சார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும், நான் சற்றே படப்படப்பானேன்.
அதன் பின்பு காலையில் எனக்கு நடைபெற்ற நடிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, அன்று மாலையே படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். முதன் முதலில் அருண் விஜய் சாருடன் நடிக்க போகிறோம் என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது, ஆனால் அவரின் சுமுகமானா பண்பும், நட்பு ரீதியாக பழகும் அவரின் இயல்பும் என்னை அந்த பயத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நான் அவரின் நடிப்பிற்கு தீவர ரசிகையாகி விட்டேன் என்பது தான் உண்மை. அது மட்டுமின்றி தடையற தாக்க படத்தில் அவரின் திறம்பட நடிப்பையும், அற்புதமான நடனத்தையும், அதிரடியான சண்டை காட்சிகளையும் கண்டு நான் பல முறை வியந்தது உண்டு.” என்கிறார் மகிமா.
இதுவரை கிராமிய கதாப்பாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த மகிமா, இந்த திரைப்படத்தில் சிட்டி பெண்ணாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. “பொதுவாகவே தனது படங்களில் கதாநாயகிகளை மிக அழகாக சித்தரிக்கும் தனித்துவமான ஆற்றலை படைத்தவர் இயக்குனர் அறிவழகன்.
அந்த வகையில் இந்த படம் எனக்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷம். என்னுடைய தென்றல் கதாப்பாத்திரத்தை நான் அதிக அளவில் காதலிப்பது மட்டுமில்லாமல் அந்த வேடத்தின் உயிராகவே நான் மாறியுள்ளேன்” என்கிறார் அழகும் அறிவும் ஒருங்கே இணைந்த மகிமா நம்பியார். மக்களின் அதிக எதிர்ப்பார்ப்பை பெற்று இருக்கும் இந்த திரைப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பது குறிப்பிடதக்கது.