‘அரண்மனை’ முதல் பாகத்தின் பேய்த்தனமான வெற்றியைத் தொடர்ந்து அதையே ஜெராக்ஸ் எடுத்தது போல ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘அரண்மனை 2′.
சன்னிலியோனை வைத்து படமெடுத்தாலும் அதையும் கவர்ச்சி பிளஸ் காமெடி படமாகத்தான் எடுப்பார் போலிருக்கிறது டைரக்டர் சுந்தர்.சி
முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கு நடிகர், நடிகைகள் மத்தியில் மட்டுமே மாற்றங்களை செய்திருக்கிறாரே தவிர முதல் பாகத்தைப் பார்க்காதவர்கள் இந்த இரண்டாம் பாகத்தை பார்க்கலாம். அதுக்கு ஒரு சான்ஸ் என்று சொன்னாலும் அதில் தப்பேதுமில்லை.
ஊரை காக்கும் அம்மனுக்கு சக்தி இல்லாத நாள் ஒன்றில் பேயோட்டிகள் எல்லோரும் ஒரு இடத்தில் கூடி உட்கார்ந்து கொண்டு சும்மா இருக்கும் ஆவிகளை தூண்டிவிட்டு தங்கள் தொழிலை பெரிதாக்கிக் கொள்ள பூஜை ஒன்றை செய்கிறார்கள்.
அதில் கிளம்பி வரும் பேய்களில் அதீத சக்தி கொண்ட ஒரு பேய் ஊருக்குள் இருக்கும் பெரிய அரண்மனைக்குள் தஞ்சம் புகுந்து விடுகிறது.
அந்த வீட்டின் பெரிய மனிதரான ராதாரவியை கோமா ஸ்டேஜுக்கு கொண்டு போய் விட, அவரது மகன் சுப்பு பஞ்சு என்ன ஆனார் என்றே தெரியாமல் போக, இடையில் வீட்டு வேலைக்காரணும் கொலை செய்யப்பட… இப்படி அடுத்தடுத்து பழி வாங்கும் அந்த பேய் யார்? அதனிடமிருந்து வீட்டில் உள்ளவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? ஏன் அந்த அரண்மனையில் உள்ளவர்களை பழி வாங்கத் துடிக்கிறது? போன்ற கேள்விகளுக்கு ப்ளாஷ்பேக் பிளஸ் பிரம்மாண்ட அம்மன் பாடலோடு அடுத்த பாகத்துக்கு புள்ளி வைத்து சுபம் போடுகிறார் டைரக்டர் சுந்தர்.சி.
ஹீரோ சித்தார்த் என்றாலும் கிளைமாக்சில் கைதட்டல்களை அள்ளிக்கொண்டு போவது என்னவோ சுந்தர்.சி தான். அவரும் முந்தைய பாகத்தில் வந்த கேரக்டரின் தொடர்ச்சியாக வருகிறார்.
சித்தார்த்தின் கவர்ச்சிக் காதலியாக த்ரிஷா! த்ரிஷாவைப் பார்த்து ரசிகர்கள் பயப்படுறாங்களோ? இல்லையோ? கெறங்கி விழுறது கன்பார்ம்! ஏன்னா படத்துல சுந்தர்.சியோட டைரக்ஷன் ‘டச்’ அப்படி!
எக்ஸ்ட்ரா கவர்ச்சிக்காகவே பூனம் பாஜ்வாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். ‘அரண்மனை’ முதல் பாகத்தில் வந்தது போலவே இதிலும் செண்ட்மெண்ட் காட்சிகளில் ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார் ஹன்ஷிகா!
முதல் பாகத்தில் சந்தானம், மனோபாலா, கோவை சரளா காம்பினேஷன் காமெடி களை கட்டியது. இதில் சந்தானத்துக்குப் பதில் சூரி! டபுள் மீனிங் வசனங்களோடு கோவை சரளாவை அவர் ஓட்டும் காட்சிகள் செம செம.
ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் கிளைமாக்ஸில் வரும் அம்மன் பாடலில் காட்சிகளுக்கேற்ற பிரம்மாண்ட இசையாக வெளிப்படுகிறது. சில இடங்களில் தேவையில்லாத இரைச்சல். மற்ற பாடல்களில் ‘ஆம்பள’ சாயல் தெரிகிறது.
பூனம் பாஜ்வா சாதாரணமாக உட்கார்ந்து பேசும்போது கூட பின் பக்கத்தில் கேமராவை வைத்து அவரது முதுகையும், இடுப்பையும் திரையில் பெரிதாகக் காட்டி கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்.
ஆக்ஷன் படங்கள்ல எப்படி லாஜிக் பார்க்கக் கூடாதோ? அதேமாதிரி தான் பேய் படங்கள்லேயும் லாஜிக் பார்க்கக் கூடாதுன்னு சொல்ற மாதிரி தனக்கே உரிய ‘கலகலப்பு’ ஸ்டைல்ல கொடுத்திருக்கிறார் டைரக்டர் சுந்தர்.சி